தமிழ் இலக்கியங்களில் பிரிக்கப்பட்டுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் தான் ‘வைல்ட் தமிழ்நாடு’. (Wild Tamil Nadu)
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல், மணலும் மணல் சார்ந்த இடமுமான பாலை என தமிழகத்தின் ஐந்து வகை நிலப்பரப்புகளில் வாழும் யானை முதல் எறும்பு வரையிலான உயிரினங்களின் வாழ்வியலை நேரடியாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருக்கிறது. உணவுக்காக நீர்நிலைகள், மலைகள் என்று கடினமான பயணத்தை மேற்கொள்ளும் யானைகள், நாம் பெரிதாக நினைக்காத எறும்புகளின் வாழ்வியல், கடினமான வெளிப்புறத்தைக் கொண்ட பலாப்பழத்தை உண்ண முடியாமல் தவிக்கும் குரங்குகள், காட்டு அனிலின் உதவியோடு உண்ணுவது, நீர்நிலைகளின் வாழும் பறவைகளின் மீன் வேட்டை என்று ஐந்து வகை நிலங்களையும், அதில் வாழும் உயிரினங்களின் செயல்களையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கும் படக்குழு, 60 நிமிடங்கள் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறது.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கல்யாண் வர்மா, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளை இதுவரை நாம் எந்த ஒரு திரையிலும் பார்த்திராத கோணத்தில் காண்பித்து பிரமிக்க வைப்பதோடு, தமிழகத்தின் மணல் மற்றும் மணல் சார்ந்த பகுதியையும், அங்கு வாழும் பூச்சி, எறும்பு, பல்லி போன்ற மிகச்சிறிய வகை உயிரினங்களின் வாழ்வியலை வியக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
ரிக்கி கேஜின் பின்னணி இசை, அரவிந்த் சுவாமியின் ஆங்கில விளக்கங்கள் கூட படத்திற்கு பெரும் பலமாக பயணித்து, படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
இப்படி ஒரு படத்தை பணம் செலவு செய்து நம் மக்கள் திரையில் பார்ப்பது அரிதான ஒன்றாக இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
மொத்தத்தில், ‘வைல்ட் தமிழ்நாடு’ புதிய திரை அனுபவம்.
ரேட்டிங் 4/5