’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட விமர்சனம்

சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் அரவணைப்பு கிடைக்காமல் தனிமையில் வளரும் நாயகன் டி.ஆண்டனி, இளைஞரானதும் தனிமையில் இருந்து தப்பிப்பதற்காக மதுவுக்கு அடிமையாகிறார். காதல் மற்றும் கல்யாணம் போன்ற பந்தங்களை விரும்பாதவர், தினசரி ஒரு பாலியல் தொழிலாளியை தன் வீட்டுக்கு வரவைத்து அவருடன் மனம் விட்டு பேசுவதை தன் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், ஒரு இரவு அவரது இல்லத்திற்கு வரும் பாலியல் தொழிலாளியான நாயகி மதுமிதா தாஸ், அவரை கவர்ந்து விடுகிறார். அவருடன் பேசுவது, நேரத்தை செலவிடுவது ஆண்டனிக்கு பிடித்துப் போக தினம் தினம் அவரையே அழைக்கிறார். ஆண்டனி தன் மீது காட்டும் அக்கறையால் மதுமிதா தாஸுக்கும் அவர் மீது காதல் மலர்கிறது.

தனிமையில் தவித்த ஆண்டனிக்கு மதுமிதா தாஸின் வருகை புதிய உற்சாகத்தையும், வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கையையும் தருகிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்க, ஆண்டனியின் மதுப்பழக்கம் அவரது காதலில் பெரும் சிக்கலை உண்டாக்கி, மதுமிதா தாஸை பிரித்து விடுகிறது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்படும் ஆண்டனி, தன்னை விட்டு சென்ற மதுமிதா தாஸுடன் சேர்ந்தாரா? இல்லையா ? என்பதை உணர்ச்சிகரமாக சொல்வதே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி மற்றும் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், இருவரும் முதல் படத்திலேயே பலமான கதாபாத்திரங்களில் பயணித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை இருவரது உரையாடல்கள் மட்டுமே நகர்த்தி செல்லக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதைக்கு இவர்களது திரை இருப்பு பலம் சேர்த்திருக்கிறது.

நேரடி ஒலிப்பதிவு முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால், தமிழ் பேச தெரியாத மதுமிதா தாஸை பெங்காலி பெண்ணாகவே நடிக்க வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். படம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்காங்கே சிறு சிறு தமிழ் வார்த்தையை கஷ்ட்டப்பட்டு பேசும் மதுமிதா தாஸ் தனது கிளி பேச்சால் பார்வையாளர்கள் மனதை மயக்கி விடுகிறார். எந்த நேரமும் சிகரெட்டும், மதுவும் என்று இருக்கும் நாயகன் டி.ஆண்டனி, சிறு சிறு ரியாக்‌ஷன்களை கூட மிக கவனமாக செய்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி காட்சிகளை எளிமையாக படமாக்கியிருந்தாலும், இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதிகமான விளக்குகளை பயன்படுத்தாமல் இயற்கை ஒளியைக் கொண்டு காட்சிகளை படமாக்கியிருப்பது கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் ஒன்றிவிட செய்கிறது.

ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜ் வகைகளாக இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது. ஜோயி ரெடாவின் பின்னணி இசை வசனங்கள் மூலம் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை பேசியிருக்கிறது.

கதை எழுதி இயக்கி, படத்தொகுப்பு செய்து நாயகனாகவும் நடித்திருக்கும் டி.ஆண்டனி, எளிமையான காதல் கதையை, எளிமையான முறையில் சொன்னாலும், காதல் உணர்வையும், காதலர்களின் உணர்ச்சிகளையும் வலிமையாக சொல்லியிருக்கிறார். படம் முழுவதும் காதலர்கள் மற்றும் நண்பர்களின் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், அதை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் டி.ஆண்டனி, அதன் நீளத்தை குறைத்திருக்கலாம்.

பெங்காலி பெண் என்பதால் அவரால் தமிழ் பேச முடியவில்லை, அதனால் ஹீரோவும் அவரிடம் ஆங்கிலத்தில் தான் பேசியாக வேண்டும், என்ற காரணம் சரியானதாக இருந்தாலும், படம் முழுவதும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் இருப்பது நெருடலாகவும், புரியாதபடியும் இருக்கிறது. (சப்-டைடில் கூட ஆங்கிலத்தில் தான் வருகிறது)

நேரடி ஒலிப்பதிவு என்பதற்காகவே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி மற்றும் நேரமாக பார்த்து காட்சிகளை படமாக்கியிருக்கும் இயக்குநர் டி.ஆண்டனி, கடற்கரையையும் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் பயணிக்க வைத்து, காதலையும், கடற்கரையையும் பிரிக்க முடியாது, என்பதை நிரூபித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளி உடனான காதல் என்ற மாற்றுச் சிந்தனையோடு காதல் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் டி.ஆண்டனி, அதை எளிமையான முறையில் ரசிக்கும்படி சொல்லியிருந்தாலும், படத்தின் நீளத்தால் பல இடங்களில் பார்வையாளர்களை சோர்வடைய வைத்து விடுகிறார். குறிப்பாக படம் முடிவது போல், மீண்டு மீண்டும் கடற்கரையை சுற்றி சுற்றி வருவது தேவையில்லாதது. இத்தகைய குறைபாடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த காதல் கதை மனங்களை தொடும்.

மொத்தத்தில், ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் பார்ப்பவர்களை நிச்சயம் ஏதோ செய்யும்.

ரேட்டிங் 3.5/5

tamil movie yen ennai edho seidhai reviewyen ennai edho seidhai movie reviewyen ennai edho seidhai reviewஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்தமிழ்ப் படம் ஏன் என்னை ஏதோ செய்தாய்
Comments (0)
Add Comment