சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கிராமத்தின் பெரும்பாலானவர்கள் கால்பந்தாட்ட ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள மைதானத்தில் கால்பாந்து விளையாட விரும்புகிறார்கள். ஆனால், அது முடியாமல் போக, அவர்களுக்கு கால்பந்தாட்ட வீரரான நாயகன் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்கிறார்கள். அதன்படி அவர்கள், விளையாடுவதற்கான மைதானம் கிடைப்பதோடு, 7 ஸ்டார் என்ற பெயருடன் விளையாட தொடங்குகிறார்கள். அதே சமயம், அந்த கிராமத்து செல்வந்தரின் வீட்டுப் பெண்ணை சந்திக்க செல்லும் ஆண்டனி வர்க்கீஸை திருடன் என்று கூறி போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார்கள். அதனால் அவர் கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.
இதற்கிடையே, ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட அணியான கேரளா பிளாஸ்டர் கால்பந்தாட்ட போட்டி ஒன்றை நடத்துகிறது. அதில், 7 ஸ்டார் அணியை பங்கேற்க வைத்து, அதன் மூலம் அவர்களது விளையாட்டு திறனை ஊர் அறிய செய்ய வேண்டும், என்று ஆண்டனி வர்க்கீஸ் முடிவு செய்கிறார். அதற்காக இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயனிடம் உதவி கேட்கிறர்கள். அவர் சிறுவர்களிடம் இருக்கும் கால்பந்தாட்ட ஆர்வம் மற்றும் அறிவை பார்த்து, அவர்களுக்கு பயிற்சியளிக்க சம்மதிக்கிறார்.
சிறுவர்களாக கருதும் 7 ஸ்டார் அணி, கால்பாந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க களம் இறங்குகிறது. மறுபுறம் ஆண்டனி வர்க்கீஸ் யார் எதிர்த்தாலும், தடுத்தாலும், உங்க வீட்டு பொக்கிஷத்தை அடைந்தே தீருவேன், என்று கிராம செல்வந்தரிடம் சபதம் போடுகிறார். இந்த இரு தரப்பினரும் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா ? என்பதே ‘7 ஸ்டார் பாய்ஸ்’.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் ஏழு சிறுவர்களும் தங்களது பணியை சரியாக செய்து தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
உமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் தனிஷ் பி.கே, குஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அமல், பர்ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் பாசித் ஆகியோர் கேமரா பதட்டத்தை துளி கூட வெளிக்காட்டாமல் அசால்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்கள். குறிப்பாக, முதல் பாதியில் சுட்டித்தனத்தோடு சிறுவர்களாக பயணிப்பவர்கள், இரண்டாம் பாதியில் கால்பந்தாட்ட மைதானத்தில் களம் இறங்கிய உடன், ஆக்ரோஷமான கால்பந்தாட்ட வீரர்களாக அனல் பறக்க நடித்திருக்கிறார்கள்.
ஆண்டனி வர்க்கீஸ் கதையின் நாயகனாக வலம் வந்தாலும், அவரது கதாபாத்திரம் பலம் இல்லாமல் பயணிக்கிறது. சிறுவர்களுக்கு உதவி செய்வது, குறிப்பாக சிறுவன் உமருக்கு உதவி செய்யும் ஒரு அண்ணனாக பயணிப்பவர், காதல் காட்சிகளில் துளி கூட ஓட்டாமல் பயணித்திருக்கிறார்.
ஐ.எம்.விஜயனாகவே நடித்திருக்கும் கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன், இறுதிக் காட்சியில் முகத்தை காட்டும் நாயகி ஜுமானா அப்து ரஹ்மான் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஃபைஸ் சித்திக், எளிமையான கிராமத்தின் அழகையும், கிராம மக்களின் வாழ்வியலையும் எந்தவித கலப்படமும் இன்றி காட்சிப்படுத்தியிருக்கிறார். கால்பந்தாட்ட போட்டியை கூட மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பவர், சிறுவர்களின் பயணத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
ஜேக்ஸ் பீஜாயின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
நௌஃபல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கால்பந்தாட்டத்தை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்தாலும், படத்தின் கதையை நேர்த்தியாக சொல்ல தவறியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் நிகில் பிரேம்ராஜ், கேரள கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது அதீத ஆர்வத்தை வெள்ளித்திரையில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் விளையாட்டுத்தனம் மிக்க சிறுவர்களாக பயணிக்கும் 7 சிறுவர்கள் கால்பந்தாட்ட போட்டியின் வெளிப்படுத்தும் வெற்றி கொண்டாட்டங்கள், தோல்வி சோகங்கள், எதிராளியுடனான போராட்டங்கள் ஆகியவை அவர்களை முழுமையான கால்பந்தாட்ட வீரர்களாக பயணிக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கால்பந்தாட்ட வீரர் ஆண்டனி வர்க்கீஸின் காதல் விளையாட்டு ஒரு பக்கமும், மறுபக்கம் 7 சிறுவர்களின் கால்பந்தாட்ட விளையாட்டு, என்று திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல முயற்சித்திருப்பவர், ஆரம்பத்தில் இடம்பெறும் ராவுத்தரின் கதை உள்ளிட்ட சில விசயங்களை தேவையில்லாமல் திணித்து திரைக்கதையை தொய்வடைய வைத்திருக்கிறார். ஆனால், சிறுவர்களின் கால்பந்தாட்ட போட்டி தொடங்கியதும் படம் தொய்வில் இருந்து மீண்டு ஜெட் வேகத்தில் பறப்பதோடு, பார்வையாளர்களையும் சோர்வில் இருந்து மீட்டு படத்தை கொண்டாட வைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ சாம்பியன்ஸ்.
ரேட்டிங் 3/5