’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார். இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை பறிக்க ஒருவர் முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை மிரள வைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது மிகப்பெரிய பிரச்சனையின் தொடக்கப் புள்ளி என்று தெரிய வருகிறது. அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்பட, அந்த ஆபத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை சொன்ன அம்மா அபிராமியும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது தனது குடும்பத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர் பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன் குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ?, அந்த பிரச்சனை என்ன ? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மூலமாகவே சொல்லியிருப்பது தான் ‘பிளாஸ்ட்’.

எந்தவிதமான லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் இருக்க வேண்டும், என்றால் நிச்சயம் அதற்கு இந்த படம் சரியான தேர்வு. அதே சமயம், ஹீரோக்களின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு ஹீரோவின் மகள், மனைவி என்று ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து நடத்தும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்தாக, வியக்க வைக்கும் என்பது உறுதி.

கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைப்பதோடு, தனது ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிறப்ப மற்றொருவர் வருவது கடினம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.

அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக விழுவது திரையில் தெரிவதோடு, கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும் சாசக திரைப்படங்களுக்கான நாயகிக்கான சரியான தேர்வு. நிச்சயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி.

வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா கியரை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்பதோடு, மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க வேண்டும் என்ற பழைய பாணியை மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகள் போல் கவித்துவமாய் காட்டியிருக்கிறார்.

இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம் சண்டைக்காட்சிகளை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.

குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறார்.

வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலோடு பயணிப்பது படத்தின் சிறு குறையாக தெரிந்தாலும், அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறும், அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை கொண்டாட வைப்பது படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை திரைக்கதையோடு இணத்து சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனமும் தான்.

மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ மாபெரும் வெற்றி உறுதி.

ரேட்டிங் 4/5