’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்

‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் திரையில் சொல்லப்படாத காவல்துறை உலகத்தின் ஒரு பகுதியை உண்மைக்கு நெருக்கமாகவும், இயல்புத்தன்மையோடும் சொல்லி கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இம்முறை கதையாசிரியர் மற்றும் கதையின் நாயகனாக அதே காவல்துறையின் மற்றொரு பக்கத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி வியக்க வைத்திருக்கிறார்.

குடும்பத்தின் ஒரே பிள்ளையான நாயகன் பிரசாந்த் பாண்டியராஜை எப்படியாவது அரசு ஊழியராக்கி விட வேண்டும் என்பதற்காக அவரது தந்தை பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். எதிலும் அவர் தேர்ச்சி பெறாமல் போக இறுதியில், காவல்துறையில் பணியாற்றும் உறவினர் மூலம் அவரை காவலராக்கி விடுகிறார்கள். அரசு வேலைக்காக காவல்துறையில் சேரும், பிரசாந்த் பாண்டியராஜ் அதன் கட்டமைப்பை கடக்க முடியாமல் திணறுவதோடு, அங்கிருக்கும் ஈகோ உள்ளிட்ட எதிர்மறை விசயங்களால் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் காவல்துறை பணியே வேண்டாம் என்ற முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன்னை அலட்சியமாக பார்த்து அவமானப்படுத்துகிறவர்களுக்கு தான் யார்? என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அது என்ன ? அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதை காவல்துறையினர் மீதே இரக்கம் ஏற்படும் வகையில் சொல்வது தான் ‘வாரண்ட்’.

காவல்துறை அதிகாரிகளின் மனிதத்தன்மையற்ற கொடூர தாக்குதலினால் நடக்கும் சிறை மரணங்களின் பின்னணியில் காவல்துறையின் கொடூரம் வெளிப்பட்டாலும், சகமனிதர்கள் மீது இரக்கப்பட்டு, வலியால் துடிப்பவர்களை பார்த்து பதறிப்போகும் சாதாரண மனிதர்களை கூட காவல்துறையின் கட்டமைப்பும், காவலர்களின் பனிச்சுமை மற்றும் அவர்கள் துறை ரீதியாக எதிர்கொள்ளும் ஏமாற்றம் மற்றும் அவமானங்கள் அவர்களை நாளடைவில் எப்படி மாற்றுகிறது, என்பதையும் பேசியிருக்கிறது. அதே சமயம், காவல்துறையில் இயங்கும் சில அதிகார திமிர் படைத்த அதிகாரிகளால் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

’அமுல் பேபி’ என்று அழைக்கும் அளவுக்கு அப்பாவியான முகம், அமைதியான சுபாவம் கொண்ட ஒரு வெகுளித்தனமான இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன் நிலையை மாற்றுவதற்காக எடுக்கும் அதிரடி அவதாரம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். சாதாரண மனிதராக இயல்பாக அனைத்தையும் கடந்து போகிறவர், தான் யார் ? என்பதை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் கோட்டை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள். இந்த மூவரில் சாயா தேவியின் கதாபாத்திரமும், அவர் கடந்து செல்லும் சூழ்நிலைகளும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது.

பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ், காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு காவல் நிலையம் மற்றும் காவலர்களை இயல்பாக காட்சிப்படுத்தி, ஒரு காவல் நிலையத்திற்குள் பயணிக்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

சாம்.சி.என் பின்னணி இசை வழக்கம் போல் சற்று தூக்கலாக இருந்தாலும், திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

திரைப்படமாக சொல்ல வேண்டிய ஒரு கதையை தொடராக, பல அத்தியாயங்களோடு சொல்லியிருக்கும் திரைக்கதையை சுவாரஸ்யத்தோடு நகர்த்துவதற்கு ஆர்.ராமரின் படத்தொகுப்பு உதவியிருக்கிறது. குடும்பம் மற்றும் காதல் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தை குறைக்கும் போதெல்லம், அவற்றின் மூலம் பனிச்சுமை மூலம் பாதிக்கப்படும் காவலர்களின் மன அழுத்தத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதையும் வெளிக்காட்டி, தொடருடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்து விடுகிறார்.

பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை திரையில் சொல்லப்படாத காவல்துறை பணியின் பின்னணியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. எத்தகைய இலகிய மனது படைத்தவர்களாக இருந்தாலும், காவல்துறை பணி அவர்களை மாற்றி விடும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி காவல்துறையினர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன், எளிய மக்களிடம் அதிகாரத்தை காட்டும் காவல்துறை அதே அதிகாரத்தை பணம் படைத்தவர்களிடத்தில் மட்டும் காட்டாதது ஏன்? என்ற கேள்வியின் மூலம் காவல்துறைக்கு குட்டு வைத்துள்ளனர்.

காவல் மரணம் என்ற ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு சுமார் நான்கரை மணி நேரம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன், ஒவ்வொரு அத்தியாயங்களையும் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் காட்சிகளை வடிவமைத்து தொடரை இயக்கியிருக்கிறார். அதே சமயம், கெட்ட வார்த்தைகளின் ஆதிக்கம் காட்சிகளில் அதிகம் இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. ஓடிடி தொடர்களுக்கு தணிக்கை இல்லாதது இதுபோன்ற விசயங்களை எளிதாக்கி விடுவதால், வேறு வழியில்லை என்று தான் கடந்து போக வேண்டியுள்ளது.

காவல்துறையை மையப்படுத்திய திரைப்படங்கள் அல்லது தொடர்கள், அதற்கு என்று இருக்கும் வழக்கமான பாணியை மட்டுமே தொட்டு வந்த நிலையில், தன் ‘விலங்கு’ தொடர் மூலம் அதை மாற்றியமைத்து, உள்ளதை உள்ளபடியே சொல்லி கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ், காவல்துறையில் இன்னும் சொல்ல வேண்டிய பல விசயங்கள் இருக்கிறது, என்பதை மீண்டும் ஒருமுறை தன் எழுத்து மூலம் நிரூபித்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘வாரண்ட்’ அனைவருக்கும் பிடிக்கும்.

ரேட்டிங் 4/5