Take a fresh look at your lifestyle.

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்

6

மதுரை மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அரசு நிகழ்ச்சியின் போது கிடைத்ததால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவம் பற்றியே பேசிக்கொண்டிருக்க, அந்த எலும்புக்கூட்டின் பின்னணியை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாருக்கு வழங்கப்படுகிறது.

எந்த ஆதாரமும் இன்றி, ஒரு கை இல்லாமல், சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கும் சசிகுமார், அதே இடத்தில் மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை கண்டுப்பிடிப்பதோடு, இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்கள் என்பதையும், அவர்கள் கொலை செய்யப்பட்டதையும் கண்டுபிடிக்கிறார்.

எலும்புக்கூட்டின் பிரச்சனை முடிந்ததால் மதுரை மாவட்ட காவல்துறை நிம்மதியடைய, சசிகுமார் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும், இரண்டு பெண்களை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் ? என்பதையும் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அவரது புலன் விசாரணை மூலம், பல புதிய மர்மங்கள் பூதாகரமாக உருவெடுக்க, அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மையான கொலையாளியை சசிகுமார் கண்டுபிடித்தாரா?, கொலைக்கான காரணம் என்ன ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ‘வதந்தி – சீசன் 2’.

கிரைம் திரில்லர் இணையத் தொடர் என்றாலே, ஒரு விசயத்தை நேரடியாக சொல்லாமல் பல கிளைக்கதைகளுடன் சொல்வது தான் வழக்கமான பாணி. அதே பாணியில் இந்த தொடரும் பயணித்தாலும், கொலைக்கான காரணத்தை யூகிக்க முடியாதபடியும், கொலையாளி யார் ? என்ற பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கும் விதத்திலும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

முதல் அத்தியாசத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எலும்புக்கூடு தொடர்பான விசாரணையை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, அதற்கான தீர்வு தெரிந்த பிறகு, கொலையாளி யார் ? மற்றும் கொலைக்கான காரணத்தை மையமாக கொண்டு நகர்த்தியிருக்கும் திரைக்கதை கிரைம் திரில்லர் ஜானரை கடந்து, காதல், கணவன் – மனைவி உறவு, மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு மீதான பேரார்வம் ஆகியவற்றுடன் உலகளவில் பேசுப்பொருளாக இருக்கும் ஒரு விசயத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருப்பது தொடரின் தனிசிறப்பாகும்.

கதையின் நாயகனாக மூசா ராசா என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், முதல் முறையாக காவல்துறை காக்கி உடை அணிந்திருந்தாலும், தனது உருவம் மற்றும் நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை. ‘சுப்பிரமணியபுரம்’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரையிலான படங்களில் பார்த்த அதே சசிகுமாரை தான் பார்க்க முடிகிறது. அதிலும் இதில் அளவான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கும் சசிகுமார், முகத்திற்கு கீழே உடலில் எந்தவிதமான அசைவுகளையும் வெளிக்காட்டாமல் ரொம்பவே அளவாக நடித்திருக்கிறார்.

மதுரை மாவட்ட எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகா, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காவல்துறை சீருடை அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, மிக சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை மாவட்ட இளைஞராக மிரட்டியிருக்கிறார். மாடு பிடிப்பதில் காட்டும் ஆர்வம், அதில் வெற்றி பெற்றதை நண்பர்களிடம் விளக்குவது, காதல் காட்சிகள் என்று மதுரை இளைஞராகவே வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் கனவம் ஈர்க்கிறார்.

’டாடா’ என்ற வெற்றி படத்தில் நடித்தும் நீண்ட வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போன அபர்ணா தாஸ், இந்த தொடர் மூலம் தலைக்காட்டியிருந்தாலும், மிக மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை.

முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி, ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த அதே ராமர் கதாபாத்திரமாக பயணிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, கிரைம் திரில்லர் என்பதால் அதிகமான இருளை பயன்படுத்தாமல், இயற்கையின் வெளிச்சத்தில் ரம்மியமான வண்ணத்தில் காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களையும் இயல்பு தன்மை மாறாமல் காண்பித்து கவனம் ஈர்க்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்படைய செய்யாது. அப்படி ஒரு பீஜியமை கொடுத்து மர்ம முடிச்சுகள் அவிழும் காட்சிகளுக்கு மட்டும் இன்றி அதன் மூலம் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகளின் மீதும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.

இணையத் தொடர்களில் படத்தொகுப்பாளர்களின் பணி மிக முக்கியமானது, அதிலும் கிரைம் திரில்லர் என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சஸ்பென்ஸையாவது நிச்சயம் சொல்ல வேண்டும், என்ற சவாலை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டிருக்கும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, சஸ்பென்ஸ் காட்சிகளுடன் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையும் ரசிக்கும்படி தொகுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் மீவின்னின் பணியும் கவனம் ஈர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும் பழைய காவல்துறை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ், வதந்தி முதல் சீசனில் கொலையாளி யார் ? என்பதை தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றது போல், இந்த இரண்டாம் சீசனில், கொலையாளியாக தண்டனைப் பெற்றவரை நிரபராதி என்பதை நிரூபிக்கும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

அனைத்து அத்தியாயங்களும் எதாவது ஒரு விசயத்தின் மூலம் அடுத்தது என்ன நடக்கும் ? , கொலையாளி யார் ? ஆகிய கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்புவதோடு, முடக்கத்தான் மணியின் மவுனம் பற்றியும் யோசிக்க வைக்கிறது.

இரத்தம், முகம் சுழிக்க வைக்கும் ஆபாசம், நெருட வைக்கும் கொடூரமான காட்சிகள் என கிரைம் திரில்லர் இணையத் தொடர்களின் அனைத்து அம்சங்களையும் தவிர்த்துவிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய மிக அமைதியான அதே சமயம் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் தொடராக இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸை பாராட்டி வரவேற்க வேண்டும்.

மொத்தத்தில், ‘வதந்தி – சீசன் 2’ அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் கிரைம் திரில்லர் தொடர்.

ரேட்டிங் 3.5/5