Take a fresh look at your lifestyle.

‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்

131

லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியான ஸ்ரேயாவின் உதவியாளராக விமல் வேலைக்கு சேருகிறார். தங்கப்பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்ரேயாவுக்கு உதவியாளராக பணியாற்றும் விமல், அவரது கடும் கோபத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.

இதற்கிடையே, ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைந்த நிலையில், அவர் விசாவை தொடர இந்தியா சென்று அங்கிருந்து தான் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சி.இ.ஓ பதவி கிடைக்காமல் போகும் நிலை உருவாகிறது. இதனால் என்ன செய்வது என்று யோசிக்கும் ஸ்ரேயா, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டது போல் நடித்து, லண்டன் குடியுரிமை பெற முடிவு செய்கிறார். அதே சமயம், ஸ்ரேயாவின் எதிராளியுடன் கைகோர்க்கும் விமல், ஸ்ரேயாவை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு, அவரது பணி உயர்வை தடுக்க திட்டம் போடுகிறார்.

அதன்படி, ஸ்ரேயாவின் திட்டத்திற்கு சம்மதிக்கும் விமல், தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை நேரில் சந்திக்க வேண்டும், என்ற நிபந்தனை விதிக்கிறார். விமலின் நிபந்தனையை ஏற்று அவருடன் தமிழகம் செல்லும் ஸ்ரேயாவின் திட்டம் வெற்றி பெற்றதா? அல்லது விமலின் திட்டம் வெற்றி பெற்றதா ? என்பது தான் ‘சண்டக்காரி’ படத்தின் கதை.

தஞ்சை மாவட்டமாக இருந்தாலும் சரி, லண்டனாக இருந்தாலும் சரி, ஆடை மட்டுமே மாறுமே தவிர தோற்றமும், நடிப்பும் எப்போதும் மாறாது, என்பதை நிரூபிக்கும் வகையில் விமல் வலம் வருகிறார். அதே விமல், அதே நடிப்பு என்று பயணித்திருக்கிறார்.

ஸ்ரேயாவின் முகத்தில் இருக்கும் பளபளப்பு அவரது நடிப்பில் இல்லை. கடும் கோபம் கொண்டவராகவும், மற்றவர்களை மதிக்காத திமிர் பிடித்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஸ்ரேயா, தனது வேலையை முடிந்தவரை சரியாக செய்திருக்கிறார்.

விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பவும் பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் கொடுத்த வரிசையின்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறாரே தவிர, கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கவில்லை.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கோபமான குணம் கொண்ட பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஸ்ரேயா – விமல் என்ற காமினேஷன் எப்படி எடுபடவில்லையோ அது போல், அவர் திரைக்கதையை கையாண்ட விதம், கதையில் இருக்கும் காதலை பார்வையாளர்களிடத்தில் சரியான முறையில் கடத்தவில்லை. இருந்தாலும், லண்டன் மற்றும் தமிழக கிராமம் என்று இரு தளங்களிலும் காதல் மற்றும் காமெடியை அளவாக கையாண்டு, முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் படித்துவிட்டு லண்டன் செல்லும் விமல், தன் குடும்பம் மூலம் நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். ஆனால், அவரது குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. லண்டனில் பல வருடங்களாக பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா குடியுரிமை பெறாமல் இருக்கிறார். இது தான் எப்படி என்று புரியவில்லை என்றாலும், இத்தகைய லாஜிக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் ஓகே தான்.

மொத்தத்தில், ‘சண்டக்காரி’ சுமார்.

ரேட்டிங் 2.8/5