Take a fresh look at your lifestyle.

‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்பட விமர்சனம்

45

தமிழகம் – கேரளா எல்லையில் இருக்கும் மலை கிராமம் ஒன்றில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, ஆண்டின் ஏழாவது மாதத்தில், ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். வனதேவதையின் சாபத்தால் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடப்பதாக நம்பும் கிராம மக்கள் வனதேவதைக்காக பல பூஜைகளை செய்து வருகிறார்கள். அந்த ஊர் மக்கள் அச்சப்படும், ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஏழாவது மாதத்தின் முதல் தேதியில், அந்த ஊர் காவல்நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டரான நாயகன் சித்து தனது மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் வருகிறார். ஆனால், அவர் அந்த ஊர் மக்கள் சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார்.

இதற்கிடையே, அந்த ஊரில் இளம் பெண் ஒருவர் மாயமாகி விடுகிறார். அந்த வழக்கு குறித்து சித்து விசாரிக்கும் போது, அந்த பெண் ஒரு இளைஞரை தேடி சென்ற தகவல் தெரிய வருகிறது. அந்த இளைஞரை தேடி சென்றால் அவரும் மாயமாகியிருப்பது தெரிய வருகிறது. இதற்கிடையே மாயமான பெண்ணின் தோழியும் மாயமாகி விட, இந்த மூவரும் ஒரு இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்படுகிறார்கள்.

எந்தவிதமான தடயங்களும் இல்லாமல், மூன்று கொலை வழக்கை சித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவியும், ஒரு ஆணும் கொலை செய்யப்படுகிறார்கள். கேரளா சிறையில் இருந்து தப்பித்த சைக்கோ கொலையாளி தான் இந்த ஐந்து கொலைகளை செய்திருப்பதாக சொல்லி காவல்துறை வழக்கை முடித்து வைக்கிறது. ஆனால், இதை நம்ப மறுக்கும் சித்து, இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்க, அதை எப்படி கண்டுபிடித்தார் ?, கொலையாளி யார் ?, எதற்காக இந்த கொலைகள் ? என்பதை யூகங்களை பொய்யாக்கும் திருப்பங்களோடும், படு திரில்லரோடும் சொல்வதே ‘தி டார்க் ஹெவன்’.

நடக்கப் போவதை சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்கிற ஒரு புத்தகம், அதை தொடர்ந்து வரும் கிராமத்தின் மர்மம் மற்றும் தொடர் கொலைகள் என படத்தில் மூன்று கதைகள் இருக்கிறது. மூன்று கதைகளுக்கும் தொடர்பு இருந்தாலும், அந்த தொடர்புகளை தாண்டி, தொடர் கொலைகள் மற்றும் அதன் விசாரணையை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் செம கிரைம் திரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து, முதல் படத்திலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பயணிக்க கூடிய காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை சித்து மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கல் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள். சிறு சிறு கதாபாத்திரங்கள் மீதும் பார்வையாளர்கள் கவனம் திரும்பும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் அனைத்து நடிகர்களும் மக்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே, குறிப்பிட்ட ஒரே ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தாலும், அதை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை பதட்டப்பட வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளருடன் போட்டி போட்டு பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, தனது பின்னணி இசை மூலம் பதட்டத்தை அதிகரித்திருப்பதோடு, வயலின் பீஜியம் மூலம் படம் பார்ப்பவர்களை பீதியடைய செய்திருக்கிறார்.

மூன்று கதைகள் இருந்தாலும், கதையின் தொடக்கம், பயணம் மற்றும் இறுதி என இயக்குநரின் திரைக்கதையை எந்தவிதமான தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம், இறுதிக் காட்சி வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி, தொடர் கொலைகள் மற்றும் அதன் பின்னணி குறித்த விசாரணை, என்ற வழக்கமான பாணியிலான கதைக்கருவை, புதுவிதமான பாதையில் பயணிக்க வைத்து, படம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

எதற்காக இத்தனை கொலைகள் ?, யார் கொலையாளி ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்களை படம் பார்ப்பவர்கள் யூகித்தாலும், அத்தனை யூகங்களையும் பொய்யாக்கும் விதத்தில் திருப்பங்களை கையாண்டிருக்கும் இயக்குநர் பாலாஜி, படத்தின் இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸ் குறையாமல் திரைக்கதையை எழுதிய விதம் பாராட்டுக்குரியது.

மர்ம புத்தகம், மர்ம சம்பவங்கள் நடக்கும் கிராமம், சைக்கோ கொலையாளி, தொடர் கொலைகள், என்று பல விசயங்களை எழுதியிருக்கும் இயக்குநர் பாலாஜி, பார்வையாளர்களை குழப்பமடைய செய்யாமல், அவை அனைத்தையும் திரைக்கதையில் சரியான முறையில் கையாண்டு படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘தி டார்க் ஹெவன்’ இந்த வருடத்தின் மிகச்சிறந்த கிரைம் திரில்லர் படம்.

ரேட்டிங் 4/5