’சம்ஹாரம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜின் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் அவருடைய தங்கை நாயகி ஷருமிஷா வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறார். அதே சமயம், தான் நினைத்தது போல் காலை திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் பிரஜின் உறுதியாக இருக்க, அவரது தங்கை எப்படியாவது அந்த வீட்டில் இருந்து இரவே தன் காதலனுடன் தப்பித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதற்கிடையே, ஒருவர் தனது மகளுடன் இரவு மட்டும் பிரஜின் வீட்டில் அடைக்கலம் கேட்க, அதற்கு பிரஜின் சம்மதிக்கிறார்.

பிரஜின் நினைத்தது போல் அவரது தங்கையை திருமணம் செய்து கொள்பவர் அவரது வீட்டுக்கு வருகிறார். தப்பிச் செல்ல நினைத்த அவரது தங்கையும், அவரது காதலனும் சேர்ந்து மாப்பிள்ளையை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள். மறுபக்கம், அடைக்கலம் கேட்டு வந்த அப்பா, மகளும் அந்த மாப்பிள்ளையை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே பிரஜின் தனது வீட்டு காவலாளியுடன் இணைந்து ஏதோ சில மர்மமான விசயங்களை செய்துக் கொண்டிருக்கிறார். இப்படி இரவு முழுவதும் மர்மான சம்பவங்கள் நடக்கும் அந்த வீட்டில் இறுதியில் திருமணம் நடந்ததா அல்லது சிலர் திட்டம் போடுவது போல் கொலை நடந்ததா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

நல்லவரா, கெட்டவரா என்பது தெரியாதபடி வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பிரஜின் சரியாக நடித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

பிரஜினின் தங்கையாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஷருமிஷா உணர்வுப்பூர்வமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் சாவரட்டில், பார்த்தாலே பயம் ஏற்படும் அளவுக்கு முரட்டுத்தனமாக இருப்பதோடு, தன் முரட்டுத்தனமான நடிப்பின் மூலம் அட்டகாசமான வில்லனாக பளிச்சிடுகிறார்.

பிரஜினின் மனைவியாக நடித்திருக்கும் நியா வர்கீஸ், ராஜ்குமார் , தென்றல் ராஜா, ரம் பிரபா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

சுரேஷ்குமார் சுந்தரம் ஒரே வீட்டுக்குள் முழு படத்தையும் படமாக்கினாலும், அந்த வீட்டையே பல கோணங்களில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை பதற வைக்க முயற்சித்திருக்கிறார். கதை முழுவதும் இரவு நேரத்தில் பயணித்தாலும் காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.

படத்தில் பாடல் இல்லை என்பதால், பின்னணி இசையில் தனது மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் வி.ஜி.ஹரி கிருஷ்ணன். ஆனால், அது பல இடங்களில் பார்வையாளர்களின் காதை கிழித்து காயமாக்கி விடுகிறது. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.

ராம்நாத்தின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தை குறைத்து பார்வையாளர்களை காப்பாற்றியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ராம் பிரபா, ஒரு வீட்டுக்குள், ஒரு இரவில் நடக்கும் கதையை பல்வேறு திருப்பங்கள் கொண்ட திரைக்கதை மூலம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார். படத்தின் சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், யூகிக்க முடியாத திருப்பங்கள் அந்த குறையை மறக்கடித்த படத்தை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘சம்ஹாரம்’ சோதிக்கவில்லை.

ரேட்டிங் 2.9/5