‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்

பெயரே இல்லாத கிராமம், அடையாளம் இல்லாத மக்கள், அங்கீகாரம் இல்லாத அவர்களது வாழ்க்கை, என்று இந்திய அரசின் பதிவிலேயே இல்லாத பழங்குடியின மக்கள் தங்களுக்கான அடையாளத்திற்காக போராடுகிறார்கள். அவர்களில் ஒருவரான நாயகன் ராம் சரண், தங்களுக்கான அடையாளம் மற்றும் அங்கீகாரம், விளையாட்டு போட்டியில் சாதித்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறார்.

அவரது பயணத்தில் எதிர்ப்பு, ஏமாற்றம், சதி, எதிர்பாராத சோதனை என்று பல தடைகளை வருகிறது. அனைத்தையும் தகர்த்தெறிந்து வெற்றியை நெருங்கும் நேரத்தில் அவரால் இனி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவே முடியாத நிலை உருவாகிறது. அப்படியும் தனது முயற்சியை கைவிடாத ராம் சரண், வேறு ஒரு வழியில் சாதனைப்புரிந்து தான் நினைத்தை செய்து முடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அது என்ன ?, அதில் அவர் நினைத்தது போல் வெற்றி பெற்றாரா?, அவரது ஊருக்கும், மக்களுக்கும் அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்ததா ? என்பதை ஒரு விளையாட்டு வீரரின் போராட்ட வாழ்க்கையாக சொல்வதே ‘பெத்தி’.

விளையாட்டு வீரருக்கான உடல் மற்றும் ஆற்றலோடு படம் முழுவதும் வலம் வரும் நாயகன் ராம் சரண், கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. தன் சமூகத்திற்கான அடையாளத்தை அடைவதற்காக பல தடைகளை தாண்டிய அவரது பயணத்தை உணர்வுப்பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களிடம் கடத்தும் ராம் சரண், துடிப்பான அசைவுகள் மூலம் பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக வலம் வருகிறார். மற்றபடி, கதைக்கும் அவருக்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை.

குஸ்தி வாத்தியாராக நடித்திருக்கும் சிவ ராஜ்குமாரின் பேச்சும், செயலும் கம்பீரமாக இருப்பதோடு, ஒரு வாத்தியாருக்கான அனைத்து அசைவுகளையும் தன் உடல்மொழியில் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டத்தின் உச்சத்தை தொட வைத்திருக்கிறது. கிரிக்கெட் , குஸ்தி, ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டு போட்டிகளையும் பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகங்களில் முணு முணுக்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

நவீன் நூலியின் படத்தொகுப்பு, அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

வல்லரசு நாடு என்ற அடையாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நவீன இந்தியாவில், பெயரே இல்லாத பல கிராமங்கள் இருப்பதையும், அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் புச்சி பாபு சனா, ஒரு விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு விளையாட்டு போட்டியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்காமல், எந்த விளையாட்டாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான அடையாளத்தை பெற துடிக்கும் ஒரு இளைஞனின் போராட்ட வாழ்க்கையை திரைக்கதையாக்கி இருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, மற்ற விளையாட்டு படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

மொத்தத்தில், ‘பெத்தி’ தி பெஸ்ட் படம் என்று சொல்ல வைக்கும்.

ரேட்டிங் 3.6/5