’ஹபீபி’ திரைப்பட விமர்சனம்

நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் தென் தமிழக குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை குடும்ப தலைவரான கஸ்தூரிராஜா, நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார். இதனால், அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், அவரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளி காதலி மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும் கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

நவீன இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிப்படைய, கஸ்தூரிராஜ பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்படுகிறார். அவரது கஷ்ட்டத்தை போக்க மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பாவின் நிலையை நினைத்து தானும் அப்படி ஒரு வலியை அனுபவிக்க கூடாது என்பதில் ஈஷா உறுதியாக இருக்கிறார்.

இதற்கிடையே, தன் காதலை மாளவிகாவிடம் சொல்வதற்காக இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்லும் ஈஷா, பொதுமக்களிடம் சிக்கிக்கொள்கிறார். அதன் பிறகு ஈஷாவின் வாழ்க்கையில் மட்டும் இன்றி, அவரது குடும்பத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அவை என்ன ? அதன் மூலம் அந்த குடும்பம் எதிர்கொள்ளும் வலி ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வதே ‘ஹபீபி’.

முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா, பல்வேறு உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி நடிப்பிலும் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறை, தான் நேசிக்கும் நெசவுத் தொழில் புதைக்கப்படும் போது வெளிப்படுத்தும் ஏமாற்றம், மகனின் நிலையை கண்டு கதறி அழுவது, என அனைத்து இடங்களிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

இளம் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஷா, குழந்தைத்தனமான முகம் மற்றும் புன்னகையுடன் கவனம் ஈர்க்கிறார். மனதுக்குள் வளர்க்கும் காதல், அதை சொல்ல தடுமாறுவது என்று பள்ளி பருவத்திலும், காதல் பருவத்திலும் எதார்த்தமாக நடித்திருப்பவர், தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வில், இறுக்கமான முகத்தோடு இருந்தாலும், காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கையாண்டு முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

முக்காடுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு வலம் வரும் மாளவிகா மானோஜுக்கு படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும், இறுதிக் காட்சியில் அவர் பேசும் அந்த ஒரு சில வசனங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் ஒட்டுமொத்த வலியையும் பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறது.

கட்டுப்பாடுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகும் இஸ்லாமிய பெண்களில் பெண்ணியம் பேசுபவர்களும், தங்களது உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனாஸ்ரீ பொருத்தமான தேர்வு.

அனுஸ்ரேயா ராஜான், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமனன், இஸ்மத் பானு, மலர் கய்சன், சன் சாகுல், மாஸ்டர் தீகன், தீக்‌ஷா ஸ்ரீ ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு 80-களில் ஆரம்பிக்கும் கதையை 90, 2000 மற்றும் தற்போதைய காலக்கட்டம் என்று பார்வையாளர்களை கதைக்களத்துடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியலை கண்டு மனதை ஏங்க வைக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மெலோடியாக பயணிக்கிறது. இஸ்லாமிய பாடல்கள் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை கதைப் போல் எந்தவித பதற்றமும், பரபரப்பும் இன்றி அதிகம் சத்தமில்லாமல் பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

80-காலக்கட்டத்தில் இருக்கும் வீடுகள், இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள், மக்களின் ஆடை ஆகியவற்றை மிக நுணுக்கமாக கையாண்டுள்ள கலை இயக்குநர் அப்புனி சஜன், ஒவ்வொரு காலக்கட்டத்தின் மாற்றங்களையும் மிக தத்ரூபமாக திரையில் வெளிக்காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்.

உணர்வுப்பூர்வமான கதை என்றாலும் பல காட்சிகள் சற்று நீளமாக இருப்பதை படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ் தவிர்த்திருக்கலாம். இஸ்லாமியர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மக்களிடம் அழுத்தமாக பதிய வைப்பதற்கான முயற்சியாக இருந்தாலும், அதை பல காட்சிகளில் கையாண்டிருப்பது திரைக்கதையின் வேகத்தை குறைத்து விடுகிறது.

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியலையும், அவர்களது கலாச்சாரம் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் பொருளாதா ஏற்றம், இறக்கங்களை உண்மைக்கு நெருக்கமாக தன் கதையில் பேசியிருக்கும் வி.எஸ்.முகமது அமீன், வெளிநாட்டு வேலை மூலம் பெரும் பொருளாதாரம் ஈட்டினாலும், அதற்கான அவர்களது இழப்பீடு என்பது திரும்ப பெற முடியாத ஒன்று, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் மீரா கதிரவன், மூன்று தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்கை சூழலை காட்சி மொழியில் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிக சரியான முறையில் பேசியிருந்தாலும், பொருளாதாரம் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

வசனங்கள் மூலம் பலரது வலியை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன், வழக்கமான திரைக்கதை பாணியில் கதை சொன்னாலும், மக்களிடம் தான் கொண்டு சேர்க்க நினைத்ததை மிக சரியாக செய்திருக்கிறார். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பது போல், இஸ்லாமியர்களுக்கு அவர்களது வாழ்வியலை திரையில் பார்த்த பெரும் திருப்தியை கொடுக்கும்.

மொத்தத்தில், ’ஹபீபி’ அன்புக்குரியவர்களுக்கான படம்.

ரேட்டிங் 3.8/5