‘வள்ளுவன்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் சேத்தன் சீனு சென்னையில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார். அவரது சேவை மனப்பான்மையை பார்த்து வியக்கும் சேத்தன் சீனு, அவருக்கு உதவியாக அந்த இல்லத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். இதனால் இருவரும் நட்பாக பழகுகிறார்கள்.

இதற்கிடையே, அரசியல்வாதி ஒருவரை மர்ம மனிதர் கொடூரமாக கொலை செய்வதோடு அவர் உடலில் சில தமிழ் வார்த்தைகளை எழுதிவிட்டு செல்கிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அதே பாணியில் கொலை செய்யப்படுகிறார். இந்த தொடர் கொலை வழக்கு காவல்துறை அதிகாரி பிரேம் குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் வழக்கை கையில் எடுத்த சில நாட்களில் அதே பாணியில் பிரபல வழக்கறிஞர் ஒருவரும் கொலை செய்யப்பட, கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அது திருக்குறள் என்று கண்டறியும் பிரேம்குமார், கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற அதன் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கிறார்.

இந்த நிலையில், பிரேம்குமாருக்கு நாயகன் மீது சந்தேகம் எழுகிறது. அவருக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சில விசயங்கள் அவரை கொலையாளிக்க, அதன் பிறகு நடந்தது என்ன ?, உண்மையான கொலையாளி யார் ?, எதற்காக இந்த கொலைகள் ? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, முதல் முறையாக குத்தாட்டம் போட்டு, வட சென்னை இளைஞராக நடித்தாலும், சில காட்சிகளுக்குப் பிறகு பொறுப்பான இளைஞராக தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். குத்தாட்டம் மட்டும் இன்றி ஆக்‌ஷனிலும் அசத்தியிருக்கும் சேத்தன் சீனு, தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, ஆரம்பத்தில் வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்தாலும், இறுதியில் அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காத ஒன்று.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

யூகிக்க கூடிய திரைக்கதை என்றாலும், அதை தன்னால் முடிந்த வரை திருப்பங்களோடும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.

எழுதி இயக்கியிருக்கும் சங்கர் சாரதி, பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல் எளிதில் தப்பித்து விடுவதையும், அதிகாரமும், சட்டமும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, இத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சிறிய முதலீடு என்றாலும், தான் சொல்ல நினைத்ததை தைரியமாகவும், நாகரீகமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி, காட்சி மொழியில் தரமான படமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘வள்ளுவன்’ கோபத்தின் வெளிப்பாடு.

ரேட்டிங் 3/5