வெளியீட்டுக்கு முன்பாகவே மிகப்பெரிய லாபம் ஈட்டிய ‘கட்டா குஸ்தி 2’! – உற்சாகத்தில் விஷ்ணு விஷால்

ஆக்‌ஷன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர், சைக்கோ திரில்லர், அறிவியல் ஃபேண்டஸி, நகைச்சுவை என பல்வேறு பாணியிலான படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்ய, ஜெயச்சந்திரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இயக்குநர் செல்லா அய்யாவு படம் பற்றி கூறுகையில், “இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற யோசனை ஆரம்பத்தில் இல்லை, விஷ்ணு விஷால் என்னிடம் கேட்ட போது தான் பண்ணலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த ஒரு யோசனையை சொன்னேன். அது பற்றி இருவரும் அரை மணி நேரம் பேசினோம், அப்படி உருவானது தான் ‘கட்டா குஸ்தி 2’.

கட்டா குஸ்தி படத்தில் இருக்கும் பல விசயங்கள் இதிலும் இருக்கிறது, ஆனால் அவை அனைத்துமே வித்தியாசமான முறையில் இருக்கும். அதுமட்டும் இன்றி, முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி எந்த விபரமும் தெரியாமல் இருப்பது, இடைவேளையில் மிகப்பெரிய திருப்பமாக இருந்தது. அப்படி ஒரு திருப்பம் இந்த படத்திலும் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது தெரியும்.” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் படம் பற்றி கூறுகையில், “என்னுடைய பல வெற்றி படங்கள் இரண்டாம் பாகம் பண்ண முடியாமல் போய் விட்டது. கதை சொல்லும் போதே இரண்டாம் பாகம் இருப்பதாக தான் சொல்வார்கள், ஆனால் ஏதோ சில காரணங்களால் பண்ண முடியாமல் போய் விடும். ‘ராட்சசன்’, ’முண்டாசுப்பட்டி, ’இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் இரண்டாம் பாகம் பண்ண வேண்டியது, முடியவில்லை. எஃப்.ஐ.ஆர் படத்தின் கதை கூட இரண்டு பாகமாக எடுக்க வேண்டி இருந்தது, அதுவும் பண்ண முடியவில்லை. அதனால், எப்படியாவது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து தான் செல்லாவிடம் பேசி இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறோம். அரை மணி நேரம் இருவரும் பேசினோம், அதில் உருவான கதை தான் இது.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், “நான் நடிகையானது எனக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறேன். இந்த சமயத்தில் கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, எங்கேயோ நான் நான் செய்த புன்னியம் என்று தான் கருதுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. கதை கேட்கும் போதே இதை தவற விட கூடாது என்று நினைத்தேன். இப்போது கட்டா குஸ்தி 2 பாகம் கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். முதல் பாக் போல் இதிலும் கதை என்னை மையப்படுத்தி தான் நகர்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “ஏற்கனவே இந்த கேள்விக்கு நான் பதில் அளித்திருக்கிறேன். என் தந்தை மிகவும் கஷ்ட்டப்பட்டு படித்து தான் ஐபிஎஸ் ஆனார். அவரை தொடர்ந்து என் குடும்பத்தில் என் அக்கா சிறப்பாக படித்து, இன்று உலகளவில் முக்கியமாக இருக்கும் ஒரு வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகு தான் எங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைந்தது. என் சினிமா பயணத்திற்கும் அவர் தான் உறுதுணையாக இருக்கிறார். அதனால் தான் நான் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறேன். இந்த படத்தில் இணை தயாரிப்பில் அவர் பெயர் வரும். அவர் பெயர் சுப்ரா.

என் அம்மா, எங்கள் குடும்பத்தை பொறுப்புடன் கவனித்து கொண்டார். என் அக்காவின் முன்னேற்றத்திற்கு என் அம்மாவின் உழைப்பும் ஒரு காரணம். அப்பா காவல்துறை அதிகாரி என்பதால், பல ஊர்களுக்கு மாறுதல் பெற்று செல்வோம், அடிக்கடி பள்ளிகள் மாறும். அப்பா வீட்டில் இருக்க மாட்டார், அம்மா தான் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்துக் கொள்வார். என் வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குடும்ப முன்னேற்றத்தில் அவர்களது பங்கு இருக்கும் போது, நான் ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன்.

பெண்கள் இப்படி செய்யலாமா, ஆண்கள் இப்படி இருக்கலாமா, என்ற பழைய பாணியை உடைக்கும் படமாக ‘கட்டா குஸ்தி 2’ இருக்கும். முதல் பாகத்தில் இருந்த அனைத்து விசயங்களும் நேர்மாறாக இருக்கும். மனைவியை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் கணவர், அதற்கு என்னவெல்லாம் செய்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார், என்பது தான் கதை. அதில் எதிர்பார்க்காத சில விசயங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

பல ஜானர்களில் கஷ்ட்டப்பட்டு நடிக்கும் உங்களுக்கு காமெடி ஜானர் ரொம்ப ஈஸியாக இருந்ததா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “காமெடி தான் மிகவும் கஷ்ட்டமானது. செண்டிமெண்ட், ஆக்‌ஷன் போன்றவற்றை நான் எளிதாக செய்து விடுவேன், நகைச்சுவை தான் கஷ்ட்டம். அதற்கு காரணம் டைமிங். டைமிங் சரியில்லை என்றால் அது காமெடியாக இருக்காது, போரடித்து விடும். எனவே காமெடி கஷ்ட்டம் தான். அதேபோல், மக்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் திரைப்படங்களை பார்க்கிறார்கள், அப்படிப்பட்ட படங்கள் மக்களை சிரிக்க வைக்க வேண்டும். கருத்து சொல்லும் படங்கள் எடுக்கலாம், அதற்காக காமெடி படங்கள் எடுக்காமல் இருக்க கூடாது. இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியாக வேண்டும். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு காமெடி படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன்.” என்றார்.

முதல் பாகத்திற்கும் ‘கட்டா குஸ்தி 2’-வுக்குமான வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “நிச்சயமாக இருக்கிறது. என்னுடைய படங்களில் அதிகம் லாபம் கொடுத்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம் இது தான். இதை நான் சொல்ல கூடாது, ஐசரி கணேஷ் சார் தான் சொல்ல வேண்டும். அவர் இங்கு இல்லை எனவே சொல்கிறேன். அவர் படம் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னது, “என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் ‘கட்டா குஸ்தி 2’ மிகச்சிறந்த படம்” என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது, அது எவ்வளவு கோடி என்று சொல்ல முடியாது. ஆனால், என் படங்களில் ‘கட்டா குஸ்தி 2’ மிகப்பெரிய லாபம் ஈட்டிய படம்.

முதல் பாகம் வெற்றி என்பதால், இரண்டாம் பாகத்தை இரண்டு மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கவில்லை, நியாயமான பட்ஜெட் என்னவோ அதில் தயாரித்தேன். அதற்கு கிடைத்த லாபம் மிகப்பெரியது. என் படங்களில் அதிகமான வியாபாரம் மற்றும் மிகப்பெரிய லாபம் கொடுத்த படம் என்றால் அது ‘கட்டா குஸ்தி 2’ தான், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.” என்று உற்சாகமாக தெரிவித்தார்.