காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சிறு சிறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவரை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ என்று பிரமாண்டமான படங்களை தயாரித்ததோடு, நயன்தாரா, சமந்தா என்று முன்னணி நாயகிகளையும் அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்து அவருக்கான நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று தந்தவர் ஆர்.டி.ராஜா. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், கடனாளியான அவர் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரது இத்தகைய நிலைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அது பற்றி இரு தரப்பினரும் எந்தவித அறிவிப்போ அல்லது தகவல்களையோ வெளியே சொல்லாமல் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மீண்டும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்கியிருப்பதோடு, தனது புதிய படம் மற்றும் அடுத்தடுத்த தனது திட்டம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை தனது பி.ஆர்.ஓ மூலம் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER – REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமையான காட்சியமைப்பு முறைகளையும் இணைத்து உருவாகி வருகிறது. டி.
முத்துராஜ் உடன் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரது இந்தப் புதிய முயற்சி தனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்பது வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளுக்கும், புதுமையான கதை சொல்லும் முயற்சிகளுக்கும், எல்லைகளைக் கடந்து கற்பனை செய்யும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் தளமாக இது அமையும். வழக்கமான திரைப்படம் உருவாக்கும் முறைகளைத் தாண்டி, தனித்துவமான சிந்தனைகளை ஊக்குவிப்பதும், புதிய காட்சியுலகை உருவாக்குவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

விளம்பரத் துறை, ஆக்கப்பூர்வமான கலைப் பணிகள், தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் டி. முத்துராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.டி. ராஜா, அவருடைய புதிய முயற்சிக்கு தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும், ஏற்கனவே உள்ள வரம்புகளை மீறிச் சிந்திக்கும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் மூலமே புதிய படைப்புகளை உருவாக்க முடியும். சவால்களை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளித்து, அவர்களின் சிந்தனைகளைத் திரையில் கொண்டுவருவதற்கான தளமாக ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சிந்தனை சவாலானதாக இருந்தாலும், அதைச் சாத்தியமற்றது என்று தொடக்கத்திலேயே நிராகரிக்காமல், முயற்சியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் புதிய முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். புதிய கதைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் இதுவரை சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பதன் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்க முடியும் என ஆர்.டி. ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டி. முத்துராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது படம் குறித்த கூடுதல் விவரங்களும் முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.