கடலூர் மாவட்டத்தில் ரவுடி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரண்டு கொலைகளையும் செய்ததாக கூறி அசோக் காவல் நிலையத்தில் சரணடைகிறார். வழக்கு முடிந்தது என்று காவல்துறை நிம்மதியடையும் போது, அசோக் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைப் பெற்று வரும் தகவல் கிடைக்கிறது. அதன் மூலம் வழக்கு விசாரணையை வேறு ஒரு கோணத்தில் அணுகும் யுவன், வழக்கு தொடர்பாக பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன ?, கொலையாளி யார் ?, அசோக் எதற்காக செய்யாத கொலைகளுக்காக சரணடைந்தார் ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தான் படத்தின் கதை.
தஞ்சை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் இருக்கும் எலிகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் எலிப்பொறி அல்லது பழங்கால கருவியை ‘எலி பிடி கிட்டி’ என்பார்கள். அந்த கிட்டி போல் குற்றவாளியை பொறி வைத்து காவல்துறை பிடிப்பதால் இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக், சாதாரணமாகவே உணர்ச்சிகரமாக நடிக்க கூடியவர். இந்த படத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மொத்த வித்தையையும் வெளிக்காட்டி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுகன், புதுமுகம் என்றாலும் அதற்கான எந்த ஒரு அடையாளமும் தெரியாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். காவல்துறை சீருடைக்கு பொருத்தமாக இருப்பவர், வழக்கு விசாரணையை அணுகும் முறை மற்றும் உண்மையான குற்றவாளியையும், குற்றத்தின் பின்னணியையும் கண்டறியும் காட்சிகளில் அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் சங்கவி மற்றும் நிஷா இருவரும் தங்களது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் பார்வையாளர்களை கவர்கிறார்கள். கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிமு அத்வானி, மனதை கலங்கடித்து விடுகிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் மற்றும் நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் இருவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கிறது.
காதர் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணி இசை அளவு.
எதிர்பார்க்காத திருப்பங்களை சரியான நேரத்தில் வெளிக்காட்டி திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கும் கார்த்திக் பாண்டியனின் படத்தொகுப்பு சிறப்பு.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் நெடுமாறன் மோகன்தாஸ், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும் அதை வழக்கமான பாணியில் அணுகாமல் வித்தியாசமாக அணுகியிருப்பது படத்திற்கு பெரும் பலம்.
காதல், பழிவாங்கல் மற்றும் சமூகப் பிரச்சனையை திரைக்கதையில் சரியான முறையில் கையாண்டு, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கும் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘கிட்டி’ சரியான கருவி.
ரேட்டிங் 3.2/5