Take a fresh look at your lifestyle.

’சட்டமும் நீதியும் 2 ’ இணையத் தொடர் விமர்சனம்

21

மகளுக்காக நீதி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு ஏழை தந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரான சரவணன், தனது வாதத்திறமையாலும், தீவிர விசாரணை மூலம் அந்த வழக்கில் புதைந்து கிடந்த பல மர்மங்களை வெளியுலகத்திற்கு எப்படி கொண்டு வருகிறார், என்பது தான் ‘சட்டமும் நீதியும்’.

நீதிமன்ற டிராமாவாக இருந்தாலும், ஒவ்வொரு எப்பிசோடிலும் புது புது திருப்பங்களோடு சீட் நுணியில் உட்கார வைத்த முதல் சீசனைப் போல், அதன் இரண்டாம் சீசனான ‘சட்டமும் நீதியும் 2’-வில் புதிய வழக்கு மற்றும் புதிய கதாபாத்திரங்களுடன் மீண்டும் ஒரு பரபரப்பான நீதிமன்ற டிராமாவாகவும், விறுவிறுப்பான கிரைம் திரில்லராகவும் பயணிக்கிறது ‘சட்டமும் நீதியும் 2’.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் காவல்துறை, குற்றவாளிகளாக நான்கு போலீஸ்காரர்களை கைது செய்கிறது. ஆனால், அந்த நான்கு போலீஸ்காரர்களும் அப்பாவி, அவர்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று அவர்களது குடும்பத்தார் முறையிடுகிறார்கள்.

இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி வரலட்சுமி சரத்குமார், மிகப்பெரிய வழக்கறிஞர் என்பதாலும், கைதான நான்கு போலீஸ்காரர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அவர் தீவிரம் காட்டுவதாலும், அவர்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்த மற்ற வழக்கறிஞர்கள் முன்வர மறுக்கிறார்கள்.

இந்த நிலையில், மிக சாதாரண வழக்கறிஞரான சரவணன், நான்கு போலீஸ்காரர்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்த முன் வருகிறார். பலம் பொருந்திய வாதத்திறமை மிக்க வழக்கறிஞர் வரலட்சுமியுடன் மோதும் சரவணன், தனது நுணுக்கமான ஆதாரங்கள் மூலம் அவரை வீழ்த்த முயற்சிக்கிறார். இருவருக்குமான சட்ட போராட்டத்தில் யார் வென்றது ?, யார் பக்கம் உண்மை இருக்கிறது ?, என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘சட்டமும் நீதியும் 2’.

சாதாரணமான வழக்கறிஞராக இருந்தாலும், தனது அனுபவம் மற்றும் ஒரு வழக்கை ஆதாரங்கள் மூலம் திறமையாக கையாளும் முறையின் மூலம் எதிர் தரப்பை தடுமாற வைக்கும் சரவணன், தனது அலட்டல் இல்லாத நடிப்பு மூலம் தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். எதிர் தரப்பின் பலமான வாதத்தை தனது பலமான ஆதாரங்கள் மூலம் உடைக்கும் சரவணன், ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை எண்ணி வருந்தும் காட்சியில் முதிர்ச்சியான நடிப்பு மூலம் பாராட்டு பெறுகிறார்.

கணவரை கொலை செய்தவர்கள் மீது கொலை வெறி கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் நீதிமன்றத்தில் ஒரு திறமையான வழக்கறிஞராக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு கம்பீரம். தனது வாதத்திறமையால் எதிர் தரப்பினரை தடுமாற வைப்பவர், ஆதாரத்தின் மூலம் குற்றவாளிகள் தப்பிப்பதை எண்ணி வருந்தும் காட்சிகளில், தன் மன போராட்டங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றவாளி போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஒரு தனித்துவமான காட்சி மொழியை வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு கேமரா கோணமும், ஒளி–நிழல் அமைப்பும் கதையின் தீவிரத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் நீதிமன்ற வாதங்களில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருப்பதோடு, தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

ஒரு கொலை, அதன் பின்னணி என்ன ?, என்ற ஒருவரிக்கதை என்றாலும், ஒவ்வொரு எப்பிசோட் முடியும் போதும், அடுத்து என்ன நடக்கும் ? என்ற கேள்வி பார்வையாளர்கள் மனதில் எழும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் ஆதிஸ்வரன்.ஆர்.

எளிமையான கதை என்றாலும், அதை வைத்துக்கொண்டு இணையத் தொடருக்கான திரைக்கதை எழுதியிருக்கும் பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான், அனைத்து எப்பிசோட்களையும் தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.

தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடந்தாலும், கொலையா? அல்லது தற்கொலையா ? என்பதை யூகிக்க முடியாதபடி திருப்பங்களை கையாண்டிருக்கிறார். குறிப்பாக, கொலை தான் என்று நம்பும்படி திரைக்கதையும், காட்சிகளும் பயணிக்கும் போது, திடீரென்று வரும் திருப்பம், கொலை அல்ல தற்கொலையாக தான் இருக்கும், என்று நம்ப வைக்கிறது. ஆனால், அடுத்த எப்பிசோட்டில் வரும் மற்றொரு திருப்பம், அதுவும் இல்லை, என்ற ரீதியில், தொடரை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும் 2’ முதல் சீசனைப் போல் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

ரேட்டிங் 3.5 \ 5