Take a fresh look at your lifestyle.

‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் டிரைலர் வெளியானது

25

மதுமிதா இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபேண்டஸி-காமெடித் தொடரான ‘லவ் ஆல்வேஸ்’ டிரெய்லரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாக உள்ளது. நகைச்சுவை மற்றும் உறவுகளின் சிக்கல்களை ஒன்றுணைக்கும் இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடர், எதிர்பாராத சூழல்கள் மற்றும் சுவாரசியமான கதாபாத்திரங்கள் மூலமாக ‘வயது பின்னோக்கிச் செல்லும்’ விசித்திரமானக் கதையை வழங்க உறுதியளிக்கிறது.

இந்த டிரெய்லருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, புகழ்பெற்ற தமிழ் நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான மறைந்த ‘கிரேஸி’ மோகனின் AI தொழில்நுட்பத்தால் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட குரல் இடம்பெற்றுள்ளது. இக்கதையை விவரிக்கும் இந்த குரல், தனது தனித்துவமான நகைச்சுவை, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்த தமிழ் சினிமா உலகின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்குச் செலுத்தும் ஒரு மனமார்ந்த அஞ்சலியாக அமைந்துள்ளது.

‘கிரேஸி’ மோகன் பாணி நகைச்சுவையை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘லவ் ஆல்வேஸ்’, அவரின் புகழ்பெற்ற நகைச்சுவை உணர்வையும் சூழல் சார்ந்த நகைச்சுவையையும் நவீன ஃபேண்டஸி பின்னணியில் கொண்டுவருகிறது. மாயா மற்றும் கௌரி ஆகிய இருவரும் ரம்சானுடன் தொடர்ந்து மோதிக்கொள்வதும், அதனால் ஏற்படும் சுவாரசியமான சண்டைகள், தவறான புரிதல்கள் மற்றும் கலாட்டா நிறைந்த நகைச்சுவைக் காட்சிகள் என இத்தொடரின் டிரெய்லர் ரகளையாக அமைந்துள்ளது. விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளிலிருந்து பிறக்கும் நகைச்சுவையுடன், இத்தொடர் ரசிகர்களுக்கு ஒரு மன நிறைவான அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது.

இத்தொடரில் கௌரி ஜி.கிஷன், ரம்சான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்., இவர்களின் துடிப்பான நடிப்பு, ரொமான்ஸ், ஃபேமிலி டிராமா மற்றும் எமோஷனல் காட்சிகள், தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. இவர்களுடன் பள்ளி பிரதீப் குமார் ரெட்டி, மைதிலி சத்தியஜித், டிம்பிள் கண்ணா கே, ஆத்விக் ரவிச்சந்திரன், சுராஜ் சீதாராமன், ஸ்மிருதி மோகன்குமார், சதாசிவம் சூரியநாராயணன் மற்றும் ராமசுவாமி முருகையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இத்தொடருக்கான இன்ஸ்பிரேஷன் மற்றும் கிரேஸி மோகனுக்குச் செலுத்தும் அஞ்சலி குறித்துப் பேசிய இயக்குநர் மதுமிதா, “கிரேஸி மோகன் சாரோட எழுத்து எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். மிக எளிய சூழ்நிலைகளிலும் நகைச்சுவையை உருவாக்குவதற்கான அவரது திறன், அதாவது அவரது கூர்மையான வார்த்தை விளையாட்டுகள் மற்றும் அற்புதமாக யூகிக்க முடியாத கதாபாத்திரங்கள், ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆகும். ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தில் அவருடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது ஒரு சிறந்த நகைச்சுவைப் பாடமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் சிரிப்பு பிரம்மாண்டமாக இருக்கத் தேவையில்லை, மாறாக அது புத்திசாலித்தனமாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும், தனது கதாபாத்திரங்களின் மீது முழுமையான ஈடுபாடு கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுவதாக அமைந்தது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “அவரைப் போன்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளர் இன்றும் இல்லை, இனிமேலும் வர மாட்டார் என்று நான் நினைக்கிறேன். ‘லவ் ஆல்வேஸ்’ தொடர் மூலம், நானும் சபரியும் அந்த நகைச்சுவைச் சுவையை ஒரு நவீன ஃபேண்டஸி உலகிற்குள் கொண்டுவர முயன்றோம். அவரது நகைச்சுவை பாணியைக் கருத்தில் கொண்டு இத்தொடரை வடிவமைத்து அணுகினோம். மாயப் பதக்கத்திற்காக அவரது குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியது, பல தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் அந்த லெஜெண்டுக்கு நாங்கள் செலுத்திய மனமார்ந்த அஞ்சலியாகும். மேலும், ஒரு பதக்கம் பேசுவதைப் பார்த்தால் அவர் அதை மிகவும் ரசித்துச் சிரித்திருப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்றார்.

எழுத்தாளர்கள் சபரிவாசன் ஷண்முகன் மற்றும் ஃபசல் நவாப், ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், எடிட்டர் ராதா ஸ்ரீதர், காஸ்ட்யூம் டிசைனர்கள் பிரியா ஹரி மற்றும் பிரியா கரன், இசை அமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆர்ட் டைரக்டர் சேகர் பாலு ஆகியோர் இத்தொடரின் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

ஃபேண்டஸி, கலாட்டாவான நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான உறவுகளைப் பேசும் ‘லவ் ஆல்வேஸ்’, காலம் கடந்தும் நம் மனதில் நிற்கும் நகைச்சுவை பாணியை ஒரு புதுமையான பின்னணியில் கொண்டுவருகிறது. அனைத்து 8 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் அக்டோபர் 30 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகிறது.