Take a fresh look at your lifestyle.

ரஜினிகாந்துடன் 5வது முறையாக இணைந்த நயன்தாரா!

97

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ என ரஜினிகாந்துடன் நான்கு படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா, ‘தர்மன்’ படம் மூலம் ஐந்தாவது முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்‌ஷன் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘தர்மன்’, தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் மூலம் மீண்டும் ரஜினிகாந்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் தகவலை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர்.