Take a fresh look at your lifestyle.

காதல் மற்றும் கிரைம் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் ‘ஸ்டேஷன்’!

24

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில், கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘ஸ்டேஷன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி நாயகனாக நடிக்க, பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ், திரிடம் (Dridam) மலையாள படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா மற்றும் சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் திரைக்கதை, ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுபாஸ் பாரதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். அய்யப்பன்.எஸ் கலை இயக்குநராக பணியாற்ற, பிரபு ஜாக்கி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். முத்தையன்.யு படத்தொகுப்பு செய்ய, தினேஷ் பாபு.ஜி.வி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் காதல் உணர்வுகள் எனப் பல சுவாரசியமான அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது.

படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதற்காக, சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் காட்சியமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘STATION – Hunt For Survival’ திரைப்படம் உருவாகி வருகிறது.

புதிய கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் KP INFOTAINMENT நிறுவனம், ‘STATION – Hunt For Survival’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்கிறது.