Take a fresh look at your lifestyle.

’அப்பா குட்டி’ கொடுத்த நம்பிக்கை! – கடும் போட்டிக்கு நடுவே களம் இறங்கும் விஜய் ஆண்டனி

14

மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, படம் வெளியாகும் அதே நாளில் சில முக்கிய படங்கள் வெளியாவதால் விஜய் ஆண்டனி கடும் போட்டியை சந்திக்க உள்ளார்.

நவம்பர் 20 ஆம் தேதி தனுஷ் நடித்த ‘ஓம்’ திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை ‘அமரன்’ மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருப்பதால் படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘சத்தியவான் சாவித்ரி’ படமும் அதே நாளில் வெளியாகிறது.

மேலும், கடந்த வாரம் வெளியான சூர்யாவின் ‘சீன்’ மற்றும் ‘ராமாயணா’ திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து தங்களது படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் ‘அப்பா குட்டி’ படக்குழு நவம்பர் 20 ஆம் தேதி களம் இறங்குகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை, சென்னையில் ‘அப்பா குட்டி’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ் சினிமாவின் வெற்றி பட இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டு படம் பற்றி பாராட்டி பேசினார்கள். படத்தை பார்த்துவிட்டு அப்படியே நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர்கள் பலர், படம் முடிந்ததும் நிச்சயம் அனைவரும் கண்கலங்குவார்கள், என்று குறிப்பிட்டதோடு, ”‘பிச்சைக்காரன்’ படத்தில் எப்படி ஒரு மகனுக்கும், அம்மாக்கும் இடையிலான பாசத்தை உணர்வுப்பூர்வமாக சொன்னார்களோ, அதுபோல் ‘அப்பா குட்டி’ படத்தில் அப்பா – மகள் இடையிலான பாசத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லி கண்கலங்க வைத்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்கள்.

மேலும், விஜய் ஆண்டனி, அவரது மகளாக நடித்திருக்கும் சிறுமி மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரது நடிப்பு மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டியவர்கள், ‘அப்பா குட்டி’ தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும், என்றும் தெரிவித்தார்கள்.

‘அப்பா குட்டி’ படத்தின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் படத்தின் வெளியீடு குறித்து பேசுகையில், ”நவம்பர் 20 ஆம் தேதி, தனுஷின் ‘ஓம்’ மற்றும் ‘சத்தியவான் சாவித்ரி’ படங்கள் வெளியாவதோடு, ஏற்கனவே வெளியான ‘சீன்’ மற்றும் ‘ராமாயணா’ படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், எங்களுக்கு இதுவரை சுமார் 200 திரையரங்கங்கள் கிடைத்திருந்தாலும், எங்கள் படத்தின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. இப்போது கிடைத்துள்ள 200 திரையரங்கங்கள் படம் வெளியான பிறகு 300 ஆகவும், அடுத்த சில தினங்களில் 400-க்கும் மேற்பட்ட திரைகளாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், ’அப்பா குட்டி’ படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ஏற்கனவே படத்தை பார்த்த பலரது அனுபவங்கள் மற்றும் இயக்குநர்களின் பாராட்டால் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதோடு, மக்களிடம் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வியாபார ரீதியாக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது கடும் போட்டிக்கு நடுவே களம் இறங்குவதால் ‘அப்பா குட்டி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.