’அருள்வான்’ திரைப்பட விமர்சனம்

தொலைதூர மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழல், அடிப்படை வசதிகள் இல்லாத இருப்பிடம் ஆகியவை அவரது கல்வி கனவுக்கு தடையாக இருக்கிறது. எப்படியாவது படித்தாக வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, தனது மலை கிராம பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற அவரது லட்சியப் பயணத்தில் மாவட்ட ஆட்சியரான அருள்நிதி இணைகிறார். அவரது முயற்சியினால் மலைவாழ் சிறுமியின் கல்வி கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதை சமூக அக்கறையோடு சொல்வதே ‘அருள்வான்’.

மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி, தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்துவேல் என்ற கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அமைதியான அவரது நடிப்பு மற்றும் உடல் மொழி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. நாயகன் என்ற பிம்பத்தை கடந்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், பழங்குடியினராக தன்னை மாற்றிக்கொள்ள கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. சில காட்சிகளில் அவர் கதாபாத்திரத்தோடு ஒட்ட மறுத்தாலும், தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தனக்கான பணியை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

பழங்குடியின சிறுமியாக நடித்திருக்கும் கிருத்திகா, தனது எதார்த்தமான மற்றும் அழுத்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். படிப்பின் மீது இருக்கும் ஆர்வம், பெற்றோரை பிரிந்து வந்த பிறகு ஏற்படும் அச்சம், ஏக்கம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக கையாண்டு படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் ஆகியோரது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் மலைகளின் அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் மன போராட்டங்களையும் பிரதிபலிக்கின்றன. பின்னணி இசை வலி மிகுந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு திரைக்கதையை மெதுவாக நகர்த்தினாலும், உண்மை சம்பவங்களை உணர வைக்கும் விதத்தில் படத்தை நகர்த்தி செல்கிறது.

வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க தற்போதைய காலக்கட்டத்திலும், கல்வியும், அடிப்படை தேவைகளும் கிடைக்காத மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் கணேஷ் விநாயகம், பழங்குடியின மக்களின் உண்மை நிலையை எவ்வித சமரசமும் இன்றி அழுத்தமாகவும், நேர்மையாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார்.

கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத திரைக்கதை சில இடங்களில் ஆவணப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தினாலும், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கிறது.

இயக்குநர் கணேஷ் விநாயகம், தொலைதூரக் கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்வதில் வெற்றி பெற்றிருப்பதோடு, பார்வையாளர்களை மட்டும் இன்றி ஆட்சியாளர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அருள்வான்’ சமூக அக்கறை கொண்ட நல்ல படைப்பு.

ரேட்டிங் 3.5/5

arulvaan movie reviewarulvaan reviewtamil movie arulvaan reviewஅருள்வான் திரைப்பட விமர்சனம்அருள்வான் விமர்சனம்தமிழ்ப் படம் அருள்வான் விமர்சனம்
Comments (0)
Add Comment