‘டிசி’ (DC) திரைப்பட விமர்சனம்

சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு செல்லும் நாயகன் லோகேஷ் கனகராஜின் சாதாரண வாழ்க்கையை சிறைவாசம் அசாதாரணமானதாக மாற்றுகிறது. தொடரும் அவரது குற்ற செயல்களால் காவல்துறை அவரை விரட்டுகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில், சஞ்சனா ஏ.கே-வை சந்திக்கிறார். அவருடனான நட்பு அவரது மனநிலையை மாற்றும் நேரத்தில், போலீஸின் துப்பாக்கி சூட்டுக்கு அவர் பலியாகி விடுகிறார். அங்கிருந்து தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடிக்காத வாழ்க்கை வாழும் வாமிகா கபியை சந்திக்கிறார். அவரது நரக வாழ்க்கையை புரிந்துக்கொண்டு அதில் இருந்து அவரை காப்பாற்றுகிறார்.

காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வது என்று தெரியாமல் லோகேஷ் கனகராஜுடன் பயணிப்பதுடன், தன்னை சீரழித்த மருத்துவரை கொலை செய்கிறார். இதனால் போலீஸ் இருவரையும் சேர்த்து துரத்துகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் இவர்களது பயணத்தை, காவல்துறைக்கும் – குற்றவாளி கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதலாக சொல்வது தான் ‘டிசி’.

தவறு செய்பவர்களை போலீஸ் தட்டிகேட்பார்கள், ஆனால் அந்த போலீஸே தவறு செய்தால், அவர்களது பாணியில் தட்டிகேட்பவர்களுக்கு ரவுடி மற்றும் குற்றவாளி முத்திரை குத்தப்படும். அப்படிப்பட்ட அடையாளத்துடன் பயணிக்கும் நாயகன், போலீஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழி தீர்க்க களம் இறங்க, இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை அதிரடியாக மட்டும் இன்றி ரசிக்கும்படியாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்சி மொழியில் சொல்லியிருக்கிறார்.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார். கதபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின் மூலமாகவும் கவனம் ஈர்ப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை தன் உடல்மொழி மூலமாகவே நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா.ஏ.கே, அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகள் தலைகாட்டினாலும், அவரது முடிவு பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது.

தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, படம் முழுவதும் ஒரே வண்ணத்தை பயன்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார். வித்தியாசமான கோணங்கள் மற்றும் வேகமான கேமரா பயணம் ஆகியவற்றின் மூலம் சாதாரண காட்சிகளை கூட பார்வையாளர்கள் கவனிக்கும்படி செய்திருக்கிறார்.

அனிருத்தின் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை கூட நெருடல் இல்லாமல் ரசிக்க முடிகிறது என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை தான். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும், அதை கதையோடு பயணிக்க வைத்து பார்வையாளர்களையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அக்மார்க் இரத்தமும், சதையும் கலந்த திரைக்கதையும், காட்சியமைப்புகளும் கொண்ட படம் தான் என்றாலும், இதில் சற்று வித்தியாசமாக வன்முறை காட்சிகளை அனிருத்தின் அபாரமான பின்னணி இசையோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

படம் முழுவதும் இரத்தம் தெறிப்பதும், உடல் பாகங்கள் துண்டாக்கப்படுவதும் தூக்கலாக இருந்தாலும், தேவதாஸ் – சந்திரா ஜோடியின் காதல் அரும்பும் காட்சிகள் மூலம் அத்தனை வன்முறை காட்சிகளையும் மறந்துவிட்டு, பார்வையாளர்களை காதலில் மூழ்கடித்து விடும் அருண் மாதேஸ்வரன், அடக்குமுறைக்கு ஆளாகும் எளியவர்கள் திருப்பியடிப்பது வன்முறை என்றாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தனது மெசஜையும் இதிலும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘டிசி’ காதலும், வன்முறையும் சேர்ந்த கலவை.

ரேட்டிங் 3.5/5

dc film reviewDC reviewtamil movie dc reviewடிசி திரைப்பட விமர்சனம்டிசி விமர்சனம்தமிழ்ப் படம் டிசி விமர்சனம்
Comments (0)
Add Comment