’டார்க்’ (Dark) திரைப்பட விமர்சனம்

கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவாரத நிலையில், குறைந்த வாடகை என்பதால், அந்த வீடு பற்றிய உண்மை தெரிந்தும் அந்த வீட்டில் குடி வருகிறார் நாயகன் அஜய் கார்த்திக். தைரியத்துடன் அந்த வீட்டில் வசிக்கும் அஜய் கார்த்திக், சில தினங்களுக்குப் பிறகு சில அமானுஷ்ய விசயங்களை எதிர்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

இதற்கிடையே, நாயகன் அஜய், தன்னைத் தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு இறந்து போக, வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறந்து போகிறார். சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும் சரிந்து விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, திடுக்கிடும் இந்த சம்பவத்தையும், தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை குறிப்பிட்டதையும் வைத்துக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? , அஜய் கார்த்திக் எதிர்கொண்ட அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் இளைஞர்களின் மர்ம மரணங்களின் பின்னணி என்ன ? என்பதை காட்சிக்கு காட்சி திகிலூட்டும் வகையில் சொல்வது தான் ‘டார்க்’.

திகில் படங்களை காமெடி ஜானர்க்குள் அடக்கிய தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகைக்க வைக்கும் சம்பவஙகள் மற்றும் அச்சத்தில் உறைய வைக்கும் காட்சிகள் என்று மிரட்டும் இந்த ‘டார்க்’ பார்வையாளர்களை படம் முழுவதும் படபடப்பாக வைத்திருக்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்திக், பேய் வீடு என்ற உண்மை தெரிந்தும், தைரியத்துடன் இருந்தாலும், அங்கு நடக்கும் அமானுஷ்ய விசயங்களை கண்டு அச்சம் கொள்ளும் போது, அந்த உணர்வை மிக சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி பார்வையாளர்களிடத்திலும் அச்சத்தை கடத்தியிருக்கிறார். ஜாலியான இளைஞராக அறிமுகமாகி, பேய் வீட்டுக்குள் சென்றதும், நாளுக்கு நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளையும் தன் நடிப்பில் கச்சிதமாக பிரதிபலித்திருப்பவர், அழுத்தமான கதாபாத்திரை அளவான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, வழக்கமான குற்ற வழக்கு என்று விசாரிக்க தொடங்கி, பிறகு அதன் பின்னணி குறித்து அறிந்துக் கொண்டு, அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசத்தல்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு மூலம் படத்தை பிரகாசிக்கச் செய்யும் விளக்காக பயணித்திருக்கிறார்.

அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சிறிய வேடம் என்றாலும், திரைக்கதையோடு பயணித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்கள் என்பதால் ஒளியை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கிறார். வெறும் இருட்டை மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பது போன்ற உணர்வை கடத்தியுள்ளார். குறிப்பாக, குறைந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி காட்சிகளுக்குள் ஒரு வித தவிப்பை உருவாக்கியிருப்பவர், அதை பார்க்கும் பார்வையாளர்களிடத்தில் படபடப்பு அதிகரிக்கும் விதத்தில் காட்சிகளின் கோணங்களை கையாண்டிருக்கிறார்.

மனு ரமேஷின் பின்னணி இசை திகில் காட்சியில் பார்வையாளர்களை பயத்தின் உச்சக்கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. பயங்கரமான சத்தத்தை மட்டுமே வைத்து பயம் காட்டும் பேய் படங்களின் வழக்கமான பாணியை தவிர்த்திருக்கும் இசையமைப்பாளர் மனு ரமேஷ், மெளனத்தையும், இசையையும் கையாண்ட விதம் தியேட்டரில் ஒருவித அமைதியின்மையை உருவாக்குவதோடு, சிறு சிறு ஓசைகள் மூலமாகவே பார்வையாளர்களின் இதயத்துடிப்பை வேகமாக்கி விடுகிறது.

வழக்கமான பேய் கதை என்றாலும், அதை தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் கதிரேஷ் அலகேஷன், எந்த நொடியில், எந்த வகையில் பயமுறுத்தப் போகிறார்கள், என்பதை கணிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்து மிரட்டியிருக்கிறார்.

வீட்டை பார்த்தாலே மனதில் ஒருவித அச்சம் ஏற்படும்படி வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் சண்முகராஜா, தனது பணி மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், திகில் கதை என்றாலும் அதை உளவியல் ரீதியாக கையாண்ட விதம், ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுக்கிறது. மர்மமான முறையில் இறந்து போகும் மூன்று இளைஞர்கள், அவர்களை தொடர்ந்து அந்த வீட்டுக்குள் குடி வரும், நாயகனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் மனதில் பதட்டம் ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதற்கான பின்னணியை சற்றும் எதிர்பார்க்காதபடி சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

கதை ஒரு வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வருவது, லாஜிக் மீறல்கள் என்று சில குறைகள் தென்பட்டாலும், அந்த வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்ய விசயங்களில், பேயைக் காட்டாமல், கதாபாத்திரங்களின் மனரீதியான பயத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்திய விதமும், நொடிக்கு நொடிக்கு பயத்தை கொடுக்கும் காட்சிகளும், அந்த குறைகளை மறைத்து, பார்வையாளர்களை பயத்துடனே படம் பார்க்க வைக்கிறது.

அனாவாசிய சத்தங்களை பயன்படுத்தாமல், மெளனத்தை வைத்தே பதட்டத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், கதையின் சூழலை அமைத்த விதம் படம் முடிந்தும் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், ‘டார்க்’ அச்சத்தின் உச்சம்.

ரேட்டிங் 3.8/5

dark movie reviewdark reviewtamil movie dark reviewடார்க் சினிமா விமர்சனம்டார்க் திரைப்பட விமர்சனம்டார்க் விமர்சனம்தமிழ்ப் படம் டார்க் விமர்சனம்
Comments (0)
Add Comment