’கோந்தல்’ (Gondhal) திரைப்பட விமர்சனம்

கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படமான ‘கோந்தல்’ (Gondhal)அதே தலைப்பில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. கோந்தல் என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் நடைபெறும் திருமண சடங்காகும்.

கதை 1970 காலக்கட்டத்தில், மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் நடக்கிறது. நாயகி இஷிதா தேஷ்முக்கிற்கு விருப்பமில்லாத திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டில் நடத்தப்படும் கோந்தல் சடங்கில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஊர் தலைவர் உள்ளிட்ட பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

இரவு தொடங்கி விடிய விடிய நடக்கும் இந்த சடங்கின் போது, இஷிதா தேஷ்முக் மீது ஆசைப்படும் ஊர் தலைவரின் மகன், அவரது விருப்பத்தோடு அவரை அடைய நினைக்கிறார். அதே சமயம், இஷிதா தேஷ்முக் தனது முன்னாள் காதலருடன் வெளியேறத் திட்டமிடுகிறார். அப்பாவித்தனமும், இரக்க குணமும் கொண்ட மாப்பிள்ளை கிஷோர் கடம், தனது அழகு மனைவியுடன் இல்லற வாழ்க்கையை தொடங்க ஆவலோடு காத்திருக்கிறார். மறுபுறம் ஊர் தலைவரால் பாதிக்கப்பட்டு தனது மகனை இழந்த ஊர் பெரியவர், தனது மனதில் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கடவுளுக்கான சடங்கு நடந்தாலும், மனிதர்களின் காதல், பொறாமை, துரோகம், அதிகாரப் போட்டி ஆகியவற்றின் உளவியள் ரீதியான போராட்டங்களும் அந்த இரவில் அரங்கேறிக் கொண்டிருக்க, அதன் தொடர்ச்சியாக சில மர்மமான சம்பவங்கள் இரவில் அரங்கேறுகிறது. அது என்ன ?, அதனால் யார் பாதிக்கப்பட்டது ?, இருளில் திட்டம் போட்டவர்களின் தீய எண்ணம் என்னவாயிற்று ? என்பதை கிராமத்தின் எதார்த்தமான சடங்கின் பின்னணியில் எதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘கோந்தல்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகேஷ் சோஹோனி, அப்பாவித்தனமான முகத்தோடும், இரக்க குணத்தோடும் வலம் வருபவர், இறுதிக் காட்சிகளில் முற்றிலும் மாறுபட்ட அடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். தன் மனைவி மீது அசைப்படுபவர்கள் பேசும் இரட்டை அர்த்தத்தை புரிந்துக் கொள்ளாமல், அவர்களிடம் அன்பு பாராட்டுபவர், எடுக்கும் எதிர்பார்க்காத விஸ்வரூபமும், தன் கோபத்தை கண் மூலமாகவே வெளிப்படுத்தும் இறுதிக் காட்சியும், படம் முழுவதும் ஸ்கோர் செய்த அத்தனை நடிகர்களையும் இறுதிக் காட்சியில் ஓரம் கட்டி கைதட்டல் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக், ஊரே வியக்கும் அழகி என்பதை, தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். தனக்காக ஏங்கும் ஆண்களை சாதாரணமாக எதிர்கொண்டு, அவர்களை கிண்டல் செய்யும் காட்சிகளிலும், காதலருடன் சேர்வதற்காக கணவருக்கு எதிராக திட்டம் போடும் காட்சிகளிலும், தன் உள்ளத்தில் இருக்கும் திமிரையும், காதல் உணர்வையும் நடிப்பில் அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்.

தெருக்கூத்து கலைக்குழுவின் மூத்தவராக பிவாபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் கடம், தன் உள்ளுக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியையும், அதிகார திமிரையும் அழிக்கும் எண்ணத்தை வெளிக்காட்டாமல் பயணித்தாலும், அவரால் ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதை தன் நடிப்பால் படம் முழுவதும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.

ஊர் தலைவரின் மகனாக நடித்திருக்கும் நிஷாத் போஹிர், நாயகியின் காதலராக தெருக்கூத்து கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சு பிரபு, ஊர் தலைவராக நடித்திருக்கும் சுரேஷ் விஸ்வகர்மா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கிராமத்து மக்களாகவே வலம் வருகிறார்கள்.

இரவு நேரத்தில் மட்டும் இன்றி, தீப்பங்கள், பூஜை விளக்குகள் என போதிய வெளிச்சம் இல்லாத ஒரு பகுதியில் நடைபெறும் ஒரு சடங்கின் பின்னணியில் நகரும் கதையை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி, தன் கேமரா மூலம் பெரும் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை மராட்டிய கிராமத்தின் சடங்கு பாடல்கள் மற்றும் தெருக்கூத்து கலையின் வாத்தியங்கள் என பார்வையாளர்களையும் சடங்கில் பயணிக்க வைத்து விடுகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை உணர்வுப்பூர்வமான மெலடியாக கொடுத்து பார்வையாளர்கள் மனதில் நீங்க இடம் பிடிக்க வைத்து விடுகிறார்.

மெதுவாக நகரும் காட்சிகள், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான காட்சிகள், அதிகமான வசனக் காட்சிகள் என்றாலும், அனைத்தும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்படி தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாட்ரே.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் தேவகர், மகராஷ்டிராவின் கலாச்சார சடங்கை பின்னணியாக கொண்டு, மனிதர்களின் உளவியல் ரீதியான நடவடிக்கையின் மூலம் ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் கதையை யதார்த்தமாக இயக்கியிருக்கிறார்.

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும், தமிழ் பார்வையாளர்களுக்கு அறிமுகம் இல்லாத நட்சத்திரங்களாக இருந்தாலும், ஒரு தமிழ் படத்தை பார்த்த உணர்வை தரும்படி காட்சிகள் அமைந்திருப்பதோடு, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, கவனம் முழுவதும் திரையின் பக்கம் இருக்கும்படி காட்சிகள் நகர்வது படத்தின் மிகப்பெரிய பலம்.

மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில், மனிதர்களைப் பற்றி பேசும் ஒரு கதையை, யதார்த்தமான முறையில் கையாண்டிருக்கும் இயக்குநர் சந்தோஷ் தேவகர், மொழியை கடந்து சினிமாவை ரசிக்கும் ரசிகர்களை கொண்டா வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘கோந்தல்’ சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

ரேட்டிங் 4/5

gondhal movie reviewgondhal reviewgondhal tamil version reviewmarati movie gondhal reveiwகோந்தல் தமிழ்ப் பதிப்பின் விமர்சனம்கோந்தல் திரைப்பட விமர்சனம்கோந்தல் விமர்சனம்மராட்டிய படம் கோந்தல் விமர்சனம்
Comments (0)
Add Comment