‘ஜெடூசி’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஸ்ரீதர், தனது நண்பர் பிளாக் பாண்டியுடன் இணைந்து கணினி மற்றும் சிசிடிவி கேமரா பழுது நீக்குபவராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் பகுதியில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகளை கடத்தும் மர்ம மனிதர், அந்த கல்லூரியின் முதல்வரை கொடூரமாக கொலை செய்கிறார். அந்த கொலையில் கல்லூரியின் பேராசிரியையை சம்மந்தப்படுத்தி, அவரை தற்கொலை செய்துகொள்ள வைக்கிறார். குறிப்பிட்ட ஒரு கல்லூரியை குறி வைத்து நடத்தப்படும் இந்தகைய குற்றங்களை செய்யும் குற்றவாளியை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்ட, மறுபக்கம் கல்லூரியின் நிறுவனர் ஏ.வெங்கடேஷும் குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கிறார். அந்த குற்றவாளி யார் ?, இதற்காக இப்படி செய்கிறார் ?, நாயகனுக்கும் இந்த குற்றங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீதர், பாங்குடி இளைஞராகவும், கணினி பழுது நீக்குபவராகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைவான பங்களிப்பை வழங்கியிருப்பதோடு, செண்டிமெண்ட் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, பழங்குடி பெண் கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டு கவனிக்க வைப்பதோடு, உணர்ச்சிகரமான காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சினி யுதன், திருப்பம் மிக்க கதாபாத்திரத்தில் அளவாக நடித்து நியாயம் சேர்த்திருக்கிறார்.

காமெடி நடிகராக சிரிக்க வைப்பதோடு, குணச்சித்திர நடிகராக திரைக்கதையின் ஓட்டத்திற்கு துணையாகவும் பயணித்திருக்கிறார் பிளாக் பாண்டி.

நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் பாவா செல்லதுரை மற்றும் ஜெயந்திமாலா, கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவராக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருவி மதன், கல்லூரியின் முதல்வராக நடித்திருக்கும் அசோக் பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நாகர்ஜுன்.வி.எஸ், காடு மற்றும் மலைகளில் பயணித்து கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எதார்த்தமான முறையில் காட்சிப்படுத்தியிருப்பவர், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், மனதில் இருக்கும் வலியையும் படம் பார்ப்பவர்களிடத்தில் கடத்தும் பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் நட்ராஜ் ஏகாம்பரம், தான் சொல்ல நினைத்ததை எளிமையாக சொன்னாலும், அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை உணர்ச்சிகரமான முறையில் காட்சிப்படுத்தியிருப்பவர், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மூலம் தப்பித்தாலும், அவர்களுக்கான சரியான தண்டனை நிச்சயம் கிடைக்கும், என்பதை காட்சி மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெடூசி என்ற பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம், அதை ஒரு கதாபாத்திரமாகவே கையாண்டு காட்சிகளை வடிவமைத்ததோடு, இறுதிக் காட்சியில் அந்த பொருளை சரியான முறையில் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், ’ஜெடூசி’ எதிர்பார்ப்பின்றி பார்ப்பவர்களை ஏமாற்றாது.

ரேட்டிங் 3/5

jedusi movie reviewjedusi reviewtamil movie jedusi reviewஜெடூசி திரைப்பட விமர்சனம்ஜெடூசி விமர்சனம்தமிழ்ப் படம் ஜெடூசி விமர்சனம்
Comments (0)
Add Comment