’சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட விமர்சனம்

கேரள மாநிலத்தை சேர்ந்த தாவரவியல் ஆய்வாளரான நாயகன் ரஜித் மேனன், தனது பணி நிமித்தமாக கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். அப்போது அவர் பயணிக்கும் பேருந்து முதல் சந்திக்கும் மனிதர்கள் வரை, இயல்பு நிலையிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. குறிப்பாக, அவர் சந்திக்கும் திருமணமான இளம் பெண் நக்‌ஷா சரண், முன்பின் தெரியாதவர் என்ற போதிலும் அவரிடம் சகஜமாகவும், உரிமையாகவும் பழகுவதைப் பார்த்து குழப்பமடைகிறார். அதே சமயம், நக்‌ஷா சரண், தன் மீது காட்டும் அக்கறை மற்றும் நெருக்கத்தினால் ஈர்க்கப்படும் ரஜித் மேனன், அவருடன் இணக்கமாகப் பழக முற்படுகிறார். ஆனால், நக்‌ஷா சரண் அவரிடம் இருந்து விலகி, அவர் செய்த செயலால் கண்கலங்க ஆரம்பித்து விடுகிறார். தான் செய்த தவறை உணரும் ரஜித் மேனன், அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு தனக்கு உதவி செய்த ஒரு பெண்ணை தவறாக நினைத்து, தான் செய்த செயலால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ரஜித் மேனன், அதில் இருந்து மீள்வதற்காக, அந்த பெண்ணை மீண்டும் சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்கிறார். இதற்காக தனது நண்பருடன் மீண்டும் அந்த கிராமத்துக்கு வருகிறார். அப்போது அவர் முன்பு சந்தித்த நக்‌ஷா சரண் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் வேறு பெயரில், மாறுபட்ட அடையாளத்துடன் இருப்பதோடு, ரஜித் மேனனை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை, என்றும் சொல்கிறார்கள்.

மனிதர்கள் மட்டும் இன்றி ரஜித் மேனன், தங்கிய வீடு உள்ளிட்ட அனைத்தும் மாறுபட்ட அடையாளத்துடன் இருக்கிறது. இருப்பினும்,தான் ஏற்கனவே அந்த பகுதிக்கு வந்தது, அங்கு நக்‌ஷா சரண் உள்ளிட்டவர்களை சந்தித்ததை நிரூபிக்க ரஜித் மேனன் போராடுகிறார். இதனால் கிராமத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தில் இருந்து ரஜித் மேனன் மீண்டாரா ?, அவரை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் மனிதர்களின் வேறுபாட்டின் பின்னணி என்ன ?, என்பதை திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லராகவும், உணர்வுப்பூர்வமான காதல் கதையாகவும் சொல்வதே ‘சிட்டுக்குறிஞ்சி’.

மிக முக்கியமான சமூக பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு, அதற்கு சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம், ஒரு கதையை எப்படி கையாண்டால் ரசிகர்களை கவர முடியும், என்பதை மிக சரியாக செய்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ரஜித் மேனன், கேரள மாநிலத்தவராக நடித்திருப்பதால், அவரது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பும், தயக்கமான நடிப்பும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. அறிமுகம் இல்லாத பெண் தன்னிடம் நெருக்கம் காட்டுவதால், புரியாமல் குழப்பம் அடைபவர், அந்த குழப்பத்தையும், தன் மனதில் ஏற்பட்ட பதட்டத்தையும் நேர்த்தியாக பிரதிபலித்திருப்பவர், தான் சந்தித்தவர்களின் மூலம் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தால் தடுமாறும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நக்‌ஷா சரண், பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருந்தாலும், தனது வசீகரமான முகத்தினால் கவனம் ஈர்க்கிறார். தோற்றம் மற்றும் உடையில் மட்டும் இன்றி தனது நடிப்பின் மூலமாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தீப்ஷிகாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, ஒரே கதாபாத்திரத்தை இரண்டு விதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜே பப்பு, ஜி.எம்.குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை முழுமையாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார்.ஏ, ஒளியமைப்பு மற்றும் வண்ணக் கலவை மூலம் 1983-ஆம் ஆண்டின் பழமை மாறாத காலகட்டத்தையும், 2025-ஆம் ஆண்டின் நவீன காலத்தையும் நேர்த்தியாம வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். தலைப்புக்கு ஏற்ப கதை மலையும், மலை சார்ந்த பகுதிகளில் நடந்தாலும், இரண்டு விதமான கதைக்களங்கள் மற்றும் அதன் சூழல்களை மிக நேர்த்தியாக வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மாறா இசையில், பாடல்கள் அனைத்தும் இயற்கை தரும் பேரமைதியைப் போல் மனதிற்கு இதம் கொடுக்கிறது. பின்னணி இசையில் பழங்குடி கலாச்சாரமும், வாத்தியங்களும் நிறைந்திருப்பது கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

காதல் மற்றும் சமூகப் பிரச்சனையை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் பாணி திரைக்கதையை தொய்வில்லாதவாறு நகர்த்தியிருக்கும் படத்தொகுப்பாளர் மஹேந்திரன் கணேசன், காட்சிகளை சரியான முறையில் தொகுத்து இயக்குநர் சொல்ல வந்ததை குழப்பமின்றி பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.

சிட்டுக்குறிஞ்சியை வடிவமைத்த விதம், இரண்டு விதமான காலக்கட்டங்களில் பயன்படுத்திய பொருட்கள் என்று கலை இயக்குநர் ராம்ஜி, தனது பணி முலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பையும், திருப்பங்களையும் சற்றும் குறைக்காமல், மிக முக்கியமான ஒரு சமூகக் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம், கதையை பிரச்சாரம் மற்றும் அறிவுரை தோணியில் கையாளாமல், சுவாரஸ்யம் மிக்க திரை அனுபவத்தை கொடுக்கும் படைப்பாக கொடுத்திருக்கிறார்.

தேவையற்ற திணிப்புகள் இல்லாமல், கதையின் போக்கிலேயே சமூகப் பிரச்சினையைப் பேசிய விதம், சஸ்பென்ஸ் திரில்லர் என்றாலும், திரைக்கதையில் இருக்கும் காதல் பிரிவு மற்றும் வலியை உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் நகர்த்தியது மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம், பொழுதுபோக்கு படம் என்றாலும், அதில் மேலோட்டமாக தந்திருகும் விழிப்புணர்வு பாராட்டுக்குடியது.

அதிகம் பரிட்சயம் இல்லாத நடிகர்கள் படத்திற்கு அடையாளமாக இருக்க தவறியிருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் அவர்களது நடிப்பு திறமையை திறையில் வெளிக்கொண்டு வந்த விதம் மற்றும் அவர்கள் மூலம் தான் சொல்ல நினைத்ததை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியதில் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘சிட்டுக்குறிஞ்சி’ காலத்தைத் தாண்டிய காதல்.

ரேட்டிங் 3.2/5

chitukurinji movie reviewchitukurinji reviewtamil movie chitukurinji reviewசிட்டுக்குறிஞ்சி திரைப்பட விமர்சனம்சிட்டுக்குறிஞ்சி விமர்சனம்தமிழ்ப் படம் சிட்டுக்குறிஞ்சி
Comments (0)
Add Comment