‘நிறம்’ திரைப்பட விமர்சனம்

கட்டுமானப் பணி நடைபெறும் அடுக்குமாடி கட்டிடத் தூண் ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை உரிமையாளரான சுரேகா வாணியின் மகள் தன்யா ஹோப் கடத்தப்படுகிறார். அவரை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவி ப்ரீத்தி அஸ்ராணியும் மாயமாகிறார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றாலும், இந்த மூன்று குற்றங்கள் ஒரு மையப்புள்ளியில் இணையும் போது, இதன் பின்னணியில் இருக்கும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? , அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதை பரபரப்பாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘நிறம்’.

மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் முகேன் ராவ், காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் திறம்பட செயல்பட்டிருப்பவர், காணாமல் போன காதலியை கண்டுபிடிப்பதில் வெளிப்படுத்தும் பதற்றம், அவரை காப்பாற்ற எப்படிப்பட்ட ஆபத்தையும் எதிர்கொள்வதற்கான துணிச்சல் என பல பரிமாணங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி முழுமையான நாயகனாக வலம் வருகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி, தவறு யார் செய்தாலும் தட்டிக்கேட்கும் தைரியம் படைத்த பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முகேன் ராவுடனான காதல் காட்சிகளில் கியூட்டாகவும், குறும்புத்தனமாகவும் நடித்து கதைக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி, தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்குத் தனது அளவான மற்றும் அழுத்தமான நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கச்சிதமான மற்றும் அளவான நடிப்பை வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

மருத்துவமனை நிர்வாகியாக நடித்திருக்கும் நிதின் சத்யா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லத்தனத்தை மிரட்டலாக கையாண்டுள்ளார். எதிர்மறை கதாபாத்திரத்தை கையாண்ட விதம் மற்றும் நொடியில் முகபாவனையை மாற்றும் வித்தை இரண்டையும் மிக சரியாக கையாண்டு தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

மருத்துவமனை உரிமையாளராக நடித்திருக்கும் சுரேகா வாணி, அரசியல் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சான்டோனியோ டெர்சியோ, படம் முழுவதிலும் ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் உணர்வு இருக்கும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளையும், கதாநாயகி, கதாநாயகியையும் அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில் கேட்கும்படி அமைந்துள்ளது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், திரில்லர் காட்சிகளுக்கும் கூடுதல் விறுவிறுப்பளிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.

கதையை ஒரே நேர்கோட்டில் சொல்லாமல், வெவ்வேறு பாதையில், வெவ்வேறு கதைகளாக பயணிக்க வைத்து, இறுதியில் ஒரு மையப்புள்ளியில் இணைத்து மர்மங்களின் பின்னணியை விவரித்திருக்கும் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பின் வித்தியாசமான முயற்சி படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் பலராம் கிருஷ்ணா, மருத்துவப் பின்னணியில் நடக்கும் குற்றங்களை மையமாக வைத்துக்கொண்டு, காதல், காமெடி, ஆக்‌ஷன், மர்மம் ஆகியவற்றை அளவாக கையாண்டு ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

வெவ்வேறு குற்றங்களை ஒரு மையப்புள்ளியில் இணைத்து, அதற்கு காரணமான முக்கியமான குற்றத்தை வெளிக்காட்டும் விதம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்தாலும், அழுத்தம் இல்லாத காட்சிகள் படத்தை பலவீனமடைய செய்து விடுகிறது. இருந்தாலும், தான் சொல்ல முயற்சித்த கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதில் இயக்குநர் பலராம் கிருஷ்ணா வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘நிறம்’ தரம்.

ரேட்டிங் 3/5

niram movie reviewniram reviewtamil movie niram reviewதமிழ்ப் படம் நிறம் விமர்சனம்நிறம் திரைப்பட விமர்சனம்நிறம் விமர்சனம்
Comments (0)
Add Comment