’ப்ராமிஸ்’ திரைப்பட விமர்சனம்

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றும் நாயகன் அருண்குமார் சேகரனும், கல்லூரி மாணவியான நாயகி நதியா சோமுவும் காதலிக்கிறார்கள். அருண்குமார் சேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அறிந்துக் கொள்ளும் நதியா சோமு, இனி மது அருந்துவதை நிறுத்த வேண்டும், என்று அவரிடம் சத்தியம் (ப்ராமிஸ்) வாங்குகிறார். ஆனால், சில நாட்களிலேயே காதலிக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை உதாசினப்படுத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து அருண்குமார் சேகரன் மது அருந்துகிறார். இதை அறிந்து வருந்தும் நதியா சோமு, காதலனுடன் பேசுவதை தவிர்க்க, காதல் பிரிவால் அருண்குமார் சேகரன் தொடர்ந்து மது அருந்துகிறார்.

விசயம் அறிந்து அருண்குமார் சேகரனை சந்தித்து சமாதானப்படுத்தும் நதியா சோமு, அவரை திருமணமும் செய்துக் கொள்கிறார். காதல் ஜோடி தம்பதியராகி மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக நதியா சோமு கர்ப்பமடைகிறார். இதையடுத்து தம்பதிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட, அருண்குமார் சேகரனின் பரிசோதனை முடிவு, அவருக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது.

காதலில் வெற்றி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, அப்பவாகப் போகும் பெருமிதம் என வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்த பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நாயகன் அருண்குமார் சேகரனின் மருத்துவ முடிவு, வாழ்க்கையில் அவருக்கு படிபடியாக கிடைத்த அனைத்து மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக சாய்த்துவிடுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது ?, அவரது மருத்துவ முடிவின் பின்னணி என்ன ? என்பதை எளிமையான காதல் கதையோடும், வலிமையான மெசஜோடும் சொல்வது தான் ‘ப்ராமிஸ்’

கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும், செய்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை, கமர்ஷியல் பாணியில் மட்டும் அல்லாமல் மக்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும் இயக்கியிருக்கிறார் அருண்குமார் சேகரன்.

படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் சேகரன், எளிமையான தோற்றத்தில், கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட, தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும், என்ற குணம் கொண்ட அவரது உடல்மொழி மற்றும் ஏற்றமும், இறக்கமும் இல்லாத அளவான நடிப்பு, அருண்குமார் சேகரன் என்ற நடிகர் அடையாளத்தை கடந்து, சங்கமித்ரன் என்ற கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதிய வைத்து விடுகிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் நதியா சோமு, பக்கத்து வீட்டு பெண் போல் மிக மிக எளிமையான முகத்தோடும், செயற்கைத்தனம் அற்ற அழகோடும் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சாதாரணமாக இருந்தாலும், கணவருக்கு ஏற்பட்ட பாதிப்பு, கணவர் பற்றிய உண்மை தெரிந்து அவரை பிரிய முடிவு செய்வது, இறுதியில் தனது சத்தியத்தால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி வருந்துவது, என்று அழுத்தமான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல், கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி ஆகியோர் புதுமுகங்கள் என்ற அடையாளமே தெரியாதவாறு நடித்திருக்கிறார்கள். அதேபோல், கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் புதியவர்கள் என்றாலும், தங்களுக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வினோத் குமார், மலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். ரயில் தண்டவாளம், பாறைகள் ஆகியவற்றை காட்சிகளோடு பயணிக்க வைத்து கதைக்களத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

சரவண தீபன் இசையமைப்பில், பாலா வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஸ்ரீராம் விக்னேஷின் படத்தொகுப்பு காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்துகிறது.

ஒருவருக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்கு மதிப்பளிக்காமல் போவது வாழ்க்கையில் பல விளைவுகளை உண்டாக்கும், என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், திரைக்கதையில் மது போதையும், அதனால் ஏற்படும் பேராபத்தையும் இயக்குநர் அருண்குமார் சேகரன் ஆழமாக அலசியிருக்கிறார்.

எதற்கு எடுத்தாலும் ப்ராமிஸ்…என்று சத்தியம் செய்பவர்களுக்கு அதை காப்பாற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன், தீர விசாரிக்காமல், மனம் விட்டு பேசாமல் ஒரு விசயத்தில் எடுக்கப்படும் முடிவு, எத்தகைய பாதிப்புகளை உண்டு பண்ணும் என்பதை எளிமையாக விவரித்தாலும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.

தவறு செய்யாத நாயகனுக்கு பாதிப்பு வந்தது எப்படி ? என்பதை இயக்குநர் அருண்குமார் சேகரன் தெளிவுப்படுத்தாது, பாதிக்கப்பட்ட தங்களது ஒரே மகனின் இக்கட்டான சூழ்நிலையில் உடன் இல்லாத பெற்றோர், போன்றவை திரைக்கதையின் குறைகளாக இருந்தாலும், இயக்குநர் மக்களுக்கு சொல்ல நினைத்த கருத்தை மிக ஆழமாகவும், கமர்ஷியலாகவும் சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘ப்ராமிஸ்’ வலிமையான மெசஜை எளிமையான முறையில் சொல்லும் மக்களுக்கான படம்.

ரேட்டிங் 3.5/5

promise movie reviewpromise reviewtamil movie promise reviewதமிழ்ப் படம் ப்ராமிஸ் விமர்சனம்ப்ராமிஸ் திரைப்பட விமர்சனம்ப்ராமிஸ் விமர்சனம்
Comments (0)
Add Comment