‘ஆனந்தன் காடு’ ஜூன் 25 ஆம் தேதி வெளியாகிறது

ஆர்யா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஆனந்தன் காடு’ திரைப்படம் சுமார் ரூ.60 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ளது. முரளி கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டதோடு, படத்தின் டிரைலரில் இடம் பெற்ற அரசியல் ரீதியான காட்சிகளுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், டிரைலர் ஏற்படுத்திய பல சர்ச்சையான கேள்விகளுக்கு சரியான பதில் முழு படத்தை பார்த்த பிறகே தெரியும், என்றும் தெரிவித்தனர்.

இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் படம் பற்றி கூறுகையில், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. முரளி கோபியின் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் இது மிகுந்த திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பார்வையாளர்கள் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கும்படி தனித்துவமான வெளியீட்டு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் இடைவேளை பகுதி (Interval Block) குறித்து ஆர்யா சிறப்பாகக் குறிப்பிட்டார். படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.

படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், கலை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேசிய ஆர்யா, படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், திரையரங்கில் இந்த திரைப்படம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இந்திரன்ஸ் “கருப்பு திரைப்படத்திற்கு முன்பே நான் நடித்த படம் ஆனந்தன் காடு. இதில் எனது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை செய்திருக்கிறேன் என்றும். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

நிகழ்வின் போது படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், பின்னணி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.விநோத் குமார் பேசுகையில், தற்போதைய OTT சூழலிலும் ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து ‘ஆனந்தன் காடு’ திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் முழுமையாக ரசிகர்களின் ஆதரவை நம்பியே திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், படத்தை உலகளவில் வெளியிடும் கோகுலம் மூவிஸ் நிறுவனத்திற்கும் அதன் தலைவர் கோகுலம் கோபாலனுக்கும் படக்குழுவினர் நன்றியை தெரிவித்தனர்.