Take a fresh look at your lifestyle.

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்பட விமர்சனம்

39

ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஃபஹத் பாசில், வாழ்க்கைக்கு பணம் மிக முக்கியம் என்பதால், அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். இதற்கிடையே தனது பணத் தேவைக்காக பணக்கார வீட்டு பிள்ளைகளை கடத்த முயற்சிக்கும் ஃபஹத் பாசில், இறந்து ஆன்மாவாக சுற்றி வரும் சிறுமி சாரா பாலேகரை கடத்துகிறார்.

தான் இறந்தது தெரியாமல், தொலைந்த தன் பெற்றோரை தேடும் சிறுமி சாரா பாலேகர், அதற்காக ஃபஹத் பாசிலிடம் உதவி கேட்கிறார். தான் கடத்தியிருப்பது ஒரு ஆன்மா என்பது தெரியாமல், அவருடன் பயணிக்கும் ஃபஹத் பாசில், கண்ணுக்கு மட்டும் சாரா பாலேகரின் ஆன்மா தெரிவது எப்படி ?, அவரது பெற்றோர் என்ன ஆனார்கள் ?, ஆன்மா என்று தெரியாமல் அவரை வைத்து பணம் பறிக்க முயற்சிக்கும் ஃபஹத் பாசிலின் எண்ணம் பலித்ததா? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஃபஹத் பாசில், வழக்கம் போல் தனது அசாத்தியமான முகபாவனைகள் மற்றும் எதார்த்தமான நடிப்பால் சூரி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகத் தாங்கிப் பிடித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதை மற்றும் காட்சிகளுக்கு ஃபஹத் பாசிலின் நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி சாரா பாலேகர், எதை சொன்னாலும் நம்பும் குழந்தைகள் உலகத்தை தன் இயல்பான நடிப்பின் மூலம் கண் முன் நிறுத்துகிறார். மேஜிக் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், தான் ஒரு ஆத்மா என்பதை உணராமல், வீடு முழுவதும் மேஜிக் நிறைந்திருப்பதாக எண்ணி மகிழும் காட்சியில் மனதை நெகிழ வைத்து விடுகிறார்.

அஸ்லம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேஷ் மஞ்ச்ரேகர், பிரதாப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செளரப் சச்தேவா, மல்லேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, திவ்யாவின் அம்மாவாக பல்லவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா பிள்ளை, சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. குழந்தைகள் ரசிக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை கையாண்டிருப்பதோடு, அதை சரியான முறையில் காட்சிகளோடு இணைந்து பயன்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கால பைரவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை இலகுவான காட்சிகளை மேலும் மென்மையாக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.

இளைஞர் மற்றும் சிறுமியின் ஆன்மா பயணம் தான் கதை என்றாலும், அதற்கான காட்சியமைப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்கள் மற்றும் திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து படத்தை தொய்வின் நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி.

ஃபேண்டஸியான கதையை உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி, குழந்தைகளை கவரக்கூடிய விசயங்களை பெரியவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஆன்மாவின் பெற்றோர்கள் எங்கே, அவர்களை சூரி கதாபாத்திரம் எப்படி கண்டுபிடிப்பார் ? என்ற கேள்வியின் மூலம் திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்த்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி சாரா பாலேகரின் நடிப்பு மற்றும் அவரது ‘ஸ்னூபி’ நாய் குட்டியின் காட்சிகள் மூலம் குழந்தைகளைக் கவர்ந்து விடுகிறார்.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஜவ்வாக இழுக்கும் திரைக்கதையால் படம் சலிப்பு தட்டினாலும், ஃபஹத் பாசில் – சாரா இடையிலான கெமிஸ்ட்ரி மற்றும் படத்தின் முதல் பாதியில் வரும் கற்பனையான மேஜிக் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்கிறது.

மொத்தத்தில், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ சிறுவர்களை கவரும்.

ரேட்டிங் 3/5