கேரளப் பகுதியில் கார் ஒன்று ஏறியில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் ஒரு சிறுவனது உடல் கிடைக்கிறது. அந்த சம்பவத்தை விபத்தாக காவல்துறை முடிக்கிறது. ஆனால், தண்ணீருக்குள் இருக்கும் காரையும், அதில் இருந்த தடயம் மற்றும் சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபடும் கேரள காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதை கண்டுபிடிக்கிறார்.
இதற்கிடையே, தமிழகத்தில் சிறுவன் ஒருவர் காணாமல் போக, அதற்கும் கேரளாவில் நடந்த சிறுவன் கொலைக்கும் சம்மந்தம் இருக்கும் என்ற சந்தேகத்தில் தமிழகத்திற்கு விரையும் அர்ஜுன் தாஸ், காணாமல் போன சிறுவன் பற்றிய தகவல்களை சேகரித்து, இரண்டு சம்பவத்திற்கும் ஒற்றுமை இருப்பதை உறுதிப்படுத்துகிறார். ஆனால், அவருக்கும் அவரது விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் சிறுவன் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் தமிழக காவல்துறை அதிகாரி சஞ்சனா நடராஜன், அவரை தொடர்ந்து உதாசினப்படுத்துகிறார்.
இந்த நிலையில், காணாமல் போன சிறுவன் சாலையோரத்தில் மீட்கப்படுவதோடு, அவரது மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதனால், அர்ஜுன் தாஸின் சந்தேகம் மேலும் அதிகரிப்பதோடு, இரண்டு சம்பவங்களையும் செய்தது ஒருவர் தான் என்பதுடன், அவர் ஒரு சைக்கோ கொலையாளி என்பதையும் கண்டுபிடிக்கிறார். மற்றொரு சிறுவன் பாதிக்கப்படுவதற்கு முன்பு கொலையாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அர்ஜுன் தாஸ், அவரை எப்படி கண்டுபிடித்தார் ?, எதற்காக இந்த கொலைகள் ?, என்பதை வழக்கமான பாதையை தவிர்த்து, புதிய வகையில் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஜான் டோ’.
ஜான் டோ என்பது ஒருவரது பெயர் அல்ல, அடையாளம் தெரியாத ஒரு நபரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான தற்காலிகப் பெயராகும். அதன்படி, அடையாளம் தெரியாத இறந்த சிறுவன் பற்றிய விசாரணையில், அதிர்ச்சிகரமான சைக்கோ கொலையாளி பற்றியும், அவரால் இறந்த பல சிறுவர்கள் பற்றிய உண்மையையும் கண்டுபிடிக்கப்படுவதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், குரலில் மட்டும் அல்லா காக்கி உடைக்கான கம்பீரத்தையும் தன்னால் வெளிக்காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். வன்முறை மூலம் குற்றவாளிகளை பேச வைப்பதை தவிர்த்துவிட்டு மன ரீதியாக அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து உண்மையை வெளிக்கொண்டு வரும் யுக்தியாலும், விசாரணை நடத்தும் தோரணை மூலமாகவும் அர்ஜுன் தாஸ், புதுமையான போலீஸ் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார். அதே சமயம், அர்ஜுன் தாஸ் பேசும் சில வசனங்கள் புரியாதபடியும் இருக்கிறது.
தமிழக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன், துடிதுடிப்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காக்கி சட்டைக்குள்ளும் காதல் உண்டு என்பதை, சில நிமிட காட்சிகளிலேயே அழகாக பிரதிபலித்திருப்பவர், தனது வேலையை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
லக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாரா வினீத் சந்தோக், ஹ்ரிதய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் நீரவ்.எஸ், சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரிஷ்டி.ஒய், அர்ஜுன் தாஸின் இளம் வயது அம்மாவாக நடித்திருக்கும் விஜே அர்ச்சனா, தந்தையாக நடித்திருக்கும் படவா கோபி, மருத்துவர் ரஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக் குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் இயற்கை வளம் மிக்க நிலப்பரப்பை, மனதை பதபதைக்க வைக்கும் கதைக்களமாக மாற்றி பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சைக்கோ கொலையாளியை பற்றிய கதை என்றாலும், திரையில் இரத்தத்தை தவிர்த்துவிட்டு மன ரீதியான பாதிப்புகளால் ஏற்படும் வலிகளை பார்வையாளர்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
முஜீப் மஜீத் இசை மற்றும் தி ஆர்டிஸ்ட் 404-ன் கூடுதல் இசை வழக்கமான பாணியில் அல்லாமல் அளவாக பயணப்பட்டு அமைதியின் மூலமாகவே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக “நான் போதுமா…” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, கதைக்களத்தை சரியான முறையில் விவரிக்கும் பாடலாகவும் அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணனன் சைக்கோ கிரைம் திரில்லர் ஜானர் கதை என்றாலும் அதை மிக எளிமையான முறையில் கையாண்டிருக்கிறார். குறிப்பாக திரைக்கதையில் இடம்பெறும் திருப்பங்கள் மிக எளிதாக கடந்து போவதும், எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் குற்றவாளியை நாயகன் கண்டுபிடிப்பதும் திரைக்கதையை அழுத்தமில்லாமல் பயணிக்க வைக்கிறது.
கதை, திரைக்கதை எழுதியிருக்கும் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே, சைக்கோ கொலையாளி பற்றிய கதையாக இருந்தாலும், அதை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு எளிமையான படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருப்பதொடு, மன ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்கிறார்கள், என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
பல்வேறு பாணியிலான கதைகளை கையாண்டு வரும் இயக்குநர் மதுமிதா, சைக்கோ கொலையாளி பற்றிய கதை என்றாலும், ரத்தம் சிந்தும் காட்சிகள் மூலமாக அல்லாமல், கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள் மற்றும் புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலமாகவே பார்வையாளர்களுக்குத் திகிலை ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
குற்றவாளியின் மனநிலையை அருவருப்பாகக் காட்டாமல், அதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்களை நுட்பமாகப் பதிவு செய்த விதம் புதிதாக இருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மனதில் ஏற்படுவதற்குள், குற்றவாளியை எளிதில் நெருங்குவது திரைக்கதையை சற்று பலவீனப்படுத்தி விடுகிறது. இருப்பினும், சைக்கோ திரில்லர் என்றாலே முகம் சுளிக்க வைக்கும் வன்முறைக் காட்சிகள் இருக்கும் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நாகரீகமான படைப்பாகக் கொடுத்ததற்காக இயக்குநர் மதுமிதாவை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘ஜான் டோ’ அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய சைக்கோ திரில்லர் படம்.
ரேட்டிங் 2.8/5