அன்புநகர் என்ற குடியிருப்பில் உள்ள மக்கள், ஒரே குடும்பம் போல் பழகி வருகின்றனர். புதுமணத் தம்பதிகளான அஸ்வின் குமார் – சித்து குமரேசன் அந்த குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். மனைவியிடம் அன்பாகவும், அமைதியாகவும் இருக்கும் அஸ்வின் குமார், அவ்வபோது மனைவியை கொடுமைப்படுத்தவும் செய்கிறார். இதை கவனிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன், அஸ்வின் குமாரை தொடர்ந்து கண்கானிக்க, அவருக்கு மற்றொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்த விசயத்தை அவர் சித்து குமரேசனிடம் சொல்ல, அவர் அதிர்ச்சியடைகிறார்.
இந்த நிலையில், ஒரு நள்ளிரவில் அஸ்வின் குமார் வீட்டில் கேட்கும் அலறல் சத்தத்திற்குப் பிறகு சித்து குமார் மாயமாகி விடுகிறார். அஸ்வின் குமாரால் சித்து குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் குடியிருப்பு வாசிகள், காவல்துறையை நாடுகிறார்கள். ஆனால், தன்னுடன் எந்த பெண்ணும் வசிக்க வில்லை என்றும், தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் அஸ்வின் குமார் சொல்ல, காவல்துறையின் விசாரணையிலும் அவர் சொல்வது உண்மை என்று தெரிய வருகிறது.
அஸ்வின் குமார் தான் சித்து குமரேசனை கொலை செய்திருப்பார், என்பதில் உறுதியாக இருக்கும் அன்புநகர் குடியிருப்பு வாசிகள், தகுந்த ஆதாரத்துடன் அவர் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க களத்தில் இறங்குகிறார்கள். அப்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரம் ஒன்றின் மூலம் அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நீதித்துறையை நாடுகிறார்கள். நீதிமன்ற விசாரணையில், மாயமான சித்து குமார் என்ன ஆனார் ?, அஸ்வின் குமார் சொல்வது உண்மையா ? ஆகிய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதோடு, அன்புநகர் குடியிருப்பில் புதைந்திருக்கும் ஒரு ரகசியமும் வெளிச்சத்திற்கு வருகிறது. அது என்ன ? என்பதே ‘ஆக்டோபஸ்’ தொடரின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், மர்மமான மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் தனது கதாபாத்திரத்தின் மீதான பிம்பத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அதை தன் வாழ்க்கையோடு பொறுத்தி, அவ்வபோது அதை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். உண்மை தெரிந்தப் பிறகு, தவறான கண்ணோட்டத்தால், தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட தடைகளை உடைத்தெறிய முட்படுவதும், அதற்கு எதிரானவர்களை எதிர்கொள்வதும் என்று முதிர்ச்சியான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தொடருக்கும் பெரும் பலமாக பயணித்திருக்கிறார்.
வினோத் கிஷன் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்து பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார். அவரது காதலியாக நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கரின் திரை இருப்பு தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
குடியிருப்பு வாசிகளையே துப்பறிவாளர்களாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கும் கண்ணா.ஆர், சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை நாடகத்தன்மையோடு படமாக்கிய விதம், மற்ற சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தொடர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.
ஒரு வீடு என்பதை தாண்டி, ஒரு குடியிருப்பு பகுதி மற்றும் அங்கு வசிக்கும் மக்களை கொண்டே அமைக்கப்பட்ட துப்பறியும் காட்சிகளும், மர்மம் நிறைந்த மனிதர்களின் பின்னணியையும் தன் பின்னணி இசை மூலம் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி.
வன்முறை மற்றும் இரத்தம் இல்லாத சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் என்றாலும், அனைத்து அத்தியாயங்களையும் விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன், தன் பணியின் மூலம் ஒரு குடும்ப நாடகப் பின்னணியில், சுவாரஸ்யம் மிக்க சஸ்பென்ஸ் கிரைம் தொடரை கொடுத்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
ஒரு சாதாரண குடியிருப்பு மக்களே துப்பறியும் நபர்களாக மாறும் விதத்தையும், நீதிமன்றக் காட்சிகளில் வரும் திருப்பங்களையும் மிக சரியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜெயசந்திர ஹஸ்மி, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிஷன் ஆகியோரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் துப்பறியும் நபர்களாக மாறும் குடியிருப்பு வாசிகளின் இயல்பான நடிப்பு தொடரின் மிகப்பெரிய பலம்.
முதல் இரண்டு அத்தியாயங்கள் மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டிருப்பதும் தொடரின் பலவீனம். இதை தவிர்த்திருந்தால் தொடர் இன்னும் கூர்மையாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மர்மம் எவ்வாறு சுற்றி வளைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரா ஹாஷ்மி. அதன் பின்னணியில் இருக்கும் சமூக பிரச்சனையை அழுத்தமாக பேசி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஆக்டோபஸ்’ குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தொடர்.
ரேட்டிங் 3.5/5