திருமணம் செய்து கொள்ள இருக்கும் நாயகன் அருண் கார்த்திக் – நாயகி எனாக்ஷி கங்குலி ஜோடி புகைப்பட படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வருகிறார்கள். இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விருந்தினர் இல்லம் ஒன்றில் இருவரும் தங்குகிறார்கள். அப்போது அருண் கார்த்திக் கண்ணில் மட்டும் ஒரு பொம்மை அடிக்கடி தென்படுவதோடு, அந்த வீட்டில் அவர்களை தவிர வேறு யாரோ இருப்பது போன்ற உணர்வும் அவருக்கு ஏற்படுகிறது.
இந்த நிலையில், எனாக்ஷி கங்குலி திடீரென்று அந்த வீட்டில் இருந்து மாயமாகி விட, அவரை தேடும் அருண் கார்த்திக்கிற்கு அவரது குரல் மட்டுமே கேட்கிறது. ஆனால், அந்த குரல் பல்வேறு இடங்களில் ஒலித்தாலும், அவரை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் அருண் கார்த்திக், தன்னை சுற்றி ஏதோ மர்மங்கள் இருப்பதை உணர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை பல பகீர் உண்மைகளை கண்டுபிடிக்கிறது. அது என்ன ?, மாயமான எனாக்ஷி கங்குலி கிடைத்தாரா ?, அருண் கார்த்திக்கை சுற்றி நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன ? என்பதை திரில்லராகவும், திகிலாகவும் சொல்வது தான் ‘பனி விழும் இரவு’.
ஒரு இரவில் நடந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு, பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான கிரைம் திரில்லராக மட்டும் இன்றி திகில் அனுபவத்தையும் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் செ.ரா.ராஜேஷ், கிரைம் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளில் இதுவரை யாரும் கையாளாத ஒரு கருவை வைத்துக்கொண்டு இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அருண் கார்த்திக், முதல் படத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். மாயமான காதலியை தேடி பரிதவிக்கும் அருண் கார்த்திக், ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களால் குழப்பமடைந்து புலம்பும் காட்சிகளில் அளவான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் எனாக்ஷி கங்குலியின் முகத்தில் நாயகிக்கான ஈர்ப்பு இல்லை என்றாலும், தனக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
தலைமை காவலராக நடித்திருக்கும் கருப்பு நம்பியார், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் சேரன்ராஜ், விருந்தினர் இல்லத்தின் காவலாளியாக நடித்திருக்கும் சரவணசக்தி, காவலராக நடித்திருக்கும் இயக்குநர் செ.ரா.ராஜேஷ், மருத்துவராக நடித்திருக்கும் கஜராஜ், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுருளி, பால்காரராக நடித்திருக்கும் உமர், திருடனாக நடித்திருக்கும் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒரு வீடு, அதற்குள் இருக்கும் மர்மங்கள் தான் கதை என்றாலும், ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேலின் வித்தியாமான கோணங்களும், இருளை கையாண்ட விதமும் பார்வையாளர்களை எளிதில் கதைக்குள் ஈர்த்து விடுகிறது. கேமரா கோணங்கள் மற்றும் இருளும், ஒளியும் கலந்த சூழல்களை கையாண்ட விதம் மூலம் பார்வையாளர்களிடத்தில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தினாலும், கொடைக்கானலின் இயற்கையை தன் கேமரா கண்கள் மூலம் அழகியலோடு காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
சதாமுருகன் இசையில், சந்தோஷ் முருகன் மற்றும் சதாமுருகன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதீத சத்தம் இன்றி பயணித்தாலும், பார்வையாளர்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
வித்தியாசமான கதைக்கரு என்றாலும், அதனைக் கொண்டு சொல்லப்பட்ட கதையை எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர்கள் எம்.எஸ்.செல்வா மற்றும் சி.ஆர்.புவனேஷ் ஆகியோரது படத்தொகுப்பு மற்றும் கதையை விவரித்த முறை படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதைக்கரு என்றாலும், அதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சொல்ல வேண்டும், என்ற சூழலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் செ. ரா. ராஜேஷ், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கதைக்குள் பயணிக்க தொடங்கி விடும் இயக்குநர் செ. ரா. ராஜேஷ், எளிமையான யுக்திகளை பயன்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுவதோடு, சிறு சிறு விசயங்கள் மூலமாகவே ஒருவித பதட்டத்தையும் படம் முழுவதும் பயணிக்க வைத்திருக்கிறார்.
சில சிறு சிறு குறைகள் இருந்தாலும், அந்த குறைகள் பார்வையாளர்கள் கண்களுக்கு தெரியாதவாறு காட்சிகளை கையாண்டு, படத்தை திரில்லராகவும், திகிலாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் செ. ரா. ராஜேஷ், மர்மங்களின் பின்னணி என்னவாக இருக்கும், என்பதை இறுதி வரை யூகிக்க முடியாதபடி திரைக்கதையை கையாண்டு, இறுதியில் அனைவரையும் திகைக்க வைத்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘பனி விழும் இரவு’ மர்மங்கள் நிறைந்த திகில் மற்றும் திரில்லர் விருந்து.
ரேட்டிங் 3/5