Take a fresh look at your lifestyle.

‘ராமாயணா’ திரைப்பட விமர்சனம்

5

6 காண்டங்களைக் கொண்ட ராமாயணத்தில், ராமரின் வனவாசம் மற்றும் சீதையை ராவணன் கடத்தி செல்வதை, ’ஆரண்ய காண்டம்’ என்ற 5வது காண்டம் பேசுகிறது. இந்த ஐந்தாவது காண்டம் தான் ‘ராமாயணா’-வின் கதை.

நாம் அறிந்த கதை , பல வடிவங்களில் பார்த்த காட்சிகள் என்றாலும், இதுவரை பார்த்திராத ஒரு தொழில்நுட்பத்திலும், ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரமாண்டத்தோடும், கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கும் இப்படம், பார்வையாளர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கி பிரமிக்க வைக்கிறது.

கதையில் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அறிமுகம் முதல் அமர்க்களமான ஆக்‌ஷன் காட்சிகள் என, படத்தின் நாயகனாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் மிரட்டியிருக்கிறார். தன் நடிப்பாலும், திரை இருப்பாலும் ராவணன் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கும் யாஷ், தனது கம்பீரத்தாலும், ஆக்ரோஷத்தாலும் பார்வையாளர்களை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறார்.

ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்பீர் கபூர், அமைதியான முகத்தோடு, மென்மையானவராக வலம் வந்து மக்கள் மனதில் ராமராக இடம் பிடித்து விடுகிறார். நாயகன் என்றாலும் முதல் பாதியில் தோல்வியடையும் அவர், தனக்குள் இருக்கும் மற்றொரு முகத்தை காட்டும் இறுதிக் காட்சியில், அடுத்த பாகம் அனல் பறக்கும், என்பதை உணர்த்துகிறார்.

சாய் பல்லவி, தன் சிரிப்பாலும், முகபாவனைகளாலும், பார்வையாளர்கள் மனதில் சீதையாக எளிதில் தங்கி விடுகிறார். வணிக ரீதியான சமரசங்கள் இன்றி, இவ்வளவு கனமான ஒரு கதாபாத்திரத்தை இத்தனைப் பொறுப்புடன் கையாண்டதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

லக்‌ஷ்மண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி துபே, தசரதனாக நடித்திருக்கும் அருண் கோவில், கைகேயாக நடித்திருக்கும் லாரா தத்தா, சூர்ப்பனையாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், மண்டோதரியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், கவுசல்யாவாக நடித்திருக்கும் இந்திர கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக பயணித்திருக்கிறார்கள்.

இதிகாசத்தின் பிரம்மாண்டத்தையும் ஆன்மிக உணர்வையும் திரையில் உயிர்ப்பிக்கும் படைப்பாக மட்டும் இன்றி, பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர்கள் பங்கஜ் குமார் மற்றும் மகேஷ் லிமாயே, ஒவ்வொரு பிரேமையும் ஓவியம் போல் வரைந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதோடு, திரையில் காட்டப்படும் பிரமாண்டமான காட்சிகளுக்கு பின்னணி இசை மூலம் கூடுதல் பிரமாண்டத்தை வழங்கியிருக்கிறது.

ஹுஸேஃபா லோகண்ட்வாலாவின் படத்தொகுப்பு முதல் பாதியை சற்று தொய்வாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்தி, காட்சிகளை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைய வைத்து விடுகிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் நித்தேஷ் திவாரி, அறிந்த கதை என்பதால், காட்சியின் மூலம் பார்வையாளர்களை கட்டிப்போட முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக ராவணனின் அறிமுக காட்சி மெய்சிலிரிக்க வைப்பதோடு, பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக கட்டிப்போட்டு விட்டுகிறது.

கதையின் நாயகன் ராமர் என்றாலும், ராவணன் கதாபாத்திரத்தின் தனிச்சிறப்புகளையும், வீரதீர செயல்களையும் பிரமிக்கும் வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு மிகச்சிறப்பான திரையரங்க அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் நித்தேஷ் திவாரி, ராமரின் மற்றொரு முகத்தோடு படத்தை முடித்து, இரண்டாம் பாகத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

மொத்தத்தில், ‘ராமாயணா’ திரையரங்கில் பார்த்தால் புதிய அனுபவம் உறுதி.

ரேட்டிங் 3.5/5