Take a fresh look at your lifestyle.

மீண்டும் காட்சிகள் அதிகரிப்பு! – ‘அன்பே டயானா’ படக்குழு உற்சாகம்

17

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே, விஜயின் ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டால் ‘அன்பே டயானா’ படத்தின் திரையரங்குகள் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காட்சிகள் அதிகரித்திருப்பது, படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.

மக்களிடம் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் ‘அன்பே டயானா’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் மற்றும், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கரின் இனிய இசையிலும், அழகான காட்சிகளுடனும் அந்தப் பாடல் ரசிகர்களை சென்றடைந்திருப்பது எனக்கு பெரும் சந்தோஷம்.

இந்தப் படத்தை தயாரித்துள்ள மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இதற்கு முன்பு தயாரித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதன் தயாரிப்பாளர் யுவராஜை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அதேபோல், இயக்குநர் பாரி இளவழகனும் இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். அவரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இசையமைப்பாளர் பரத் மூலமாக இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததோடு, அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதற்காக பரத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பில் பங்காற்றிய சத்யா காரிகால் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, நடிகர் கோபி என்னுடைய கல்லூரி ஜூனியர். இந்தப் படத்தில் அனைவரும் கவனிக்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் பற்றி ஒரு சீனியராக பெருமையுடன் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் இன்று மக்கள் மத்தியில் வெற்றிப் பெற்றதற்கு உறுதுணையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

பாடலாசிரியர் பாக்கியம் சங்கர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே இயக்குநர் பாரி இளவழகன் என்னை தொடர்புகொண்டு, ‘ஜிகர்தண்டா’ படத்தின் பாடல்களைப் போல நினைவில் நிற்கும் ஒரு பாடல் வேண்டும் என்று கூறினார். அந்த முதல் உரையாடலிலேயே இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.

அதன் பிறகு இசையமைப்பாளர் பரத் சங்கரை சந்தித்தேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானதாக இருந்தது. அப்போதுதான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷையும் நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படம் வடசென்னையை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், அதற்கான வழக்கமான வன்முறைச் சாயலைத் தேர்ந்தெடுக்காமல், கத்தியும் ரத்தமும் இல்லாத, அழகான காதல் கதையைச் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். வடசென்னை என்றாலே ஒரு குறிப்பிட்ட மாதிரியான கதைகள்தான் வரும் என்ற எண்ணத்தை உடைத்து, வண்ணமயமான, உணர்வுபூர்வமான திரைப்படத்தை இயக்குநர் பாரி உருவாக்கியுள்ளார்.

ஒருநாள் பாரி என்னிடம், ‘15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நான் உதவி இயக்குநராக உங்களை சந்தித்திருக்கிறேன்’ என்று கூறினார். அது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அப்போது நான் அவரை அன்பாக நடத்தி இருப்பேன் என்பதால்தான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்து இந்தப் படத்திற்கு அழைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.

இப்படிப்பட்ட மனதை வருடும், குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்குவதற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு மிகவும் அவசியம். இன்றைய சூழலில் இத்தகைய படங்களை தயாரித்து, வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்காக தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இசையமைப்பாளர் பரத் சங்கர் உள்ளிட்ட இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்பே டயானா போன்ற நல்ல குடும்பப் படங்கள் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் மனதார சிரித்து ரசிப்பதை நேரில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் நன்றிகள். வணக்கம்.” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் நான் இணையும் நான்காவது படம் இது. அதேபோல், இந்த நிறுவனத்தின் வெற்றிவிழா மேடையில் நிற்பதும் எனக்கு நான்காவது முறை. இதற்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்த ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் ‘அன்பை’ மையமாகக் கொண்டிருந்தது. குட்நைட் திரைப்படம் கணவன்-மனைவிக்கிடையேயான அன்பைப் பேசியது. லவ்வர் காதலர்களின் உறவைப் பதிவு செய்தது. டூரிஸ்ட் ஃபேமிலி மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அன்பைச் சொன்னது. அதேபோல் அன்பே டயானா ஜாதி, மத எல்லைகளைக் கடந்து காதலும் அன்பும்தான் மிகப் பெரியது என்ற அழகான கருத்தை முன்வைக்கிறது. இத்தகைய கதைகளைத் தேர்வு செய்யும் இந்த நிறுவனத்தின் பயணம் மிகவும் தரமானதாகவும், இன்றைய காலத்திற்கு தேவையானதாகவும் இருக்கிறது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது. அவர்கள் தயாரித்து வரும் அடுத்த படங்களும் மிகப்பெரிய கவனத்தைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் பாரி இளவழகனும், இசையமைப்பாளர் பரத் சங்கரும் தீவிரமான படைப்பாளிகள். குறிப்பாக கவுண்டமணி சார் மீது இருவருக்கும் இருக்கும் அபிமானம் அளவிட முடியாதது. இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்தால், அவர்களது உரையாடல் முழுவதும் கவுண்டமணி சாரின் வசனங்களும் நகைச்சுவையும் நிரம்பியிருக்கும். அந்த உற்சாகத்தைப் பார்ப்பதே மிகவும் ரசிக்கத்தக்க அனுபவமாக இருக்கும்.

இந்தப் படத்தில் நான்கு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த படத்தில் இயக்குநர் பாரியின் பேனாவையே ‘திருடி’ கொண்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இயக்குநராக மட்டுமல்லாமல், பாடல் எழுதுவதிலும் அவருக்கு சிறந்த திறமை இருக்கிறது. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர்கள் பாக்கியம் சங்கர், உத்தமன் ஆகியோருடன் ஒரே படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இசையமைப்பாளர் பரத் சங்கர் மிகவும் திறமையானவர் மட்டுமல்ல, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுபவர். அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவமாக இருந்தது. நடிகர் கோபி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் கதையை முதன்முதலில் கேட்டபோதே அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று நான் நினைத்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது. சத்யா மேம், சரவணன் சார் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினரும், இந்த அணியுடன் தொடர்ந்து இன்னும் பல வெற்றிப் படங்களை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் சுதர்சனின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் இன்னும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றிக்கு காரணமான படக்குழுவினர், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் சத்யா காரிகாலன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட இன்று அனைவரும் ஒன்றுகூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது முதல் திரைப்படத் தயாரிப்பு. நான் இதுவரை கல்வித் துறையில், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் பணியாற்றி வந்துள்ளேன். சினிமா எனக்கு ஒரு புதிய அனுபவமாக மட்டுமல்ல, அர்த்தமுள்ள ஒரு பயணமாகவும் அமைந்துள்ளது.

இந்தப் பயணத்தின் முதல் அடியிலிருந்து என்னை நம்பிக்கையுடன் ஊக்குவித்து வழிநடத்தியவர் திரு. சரவணன் சார். சிலர் ஒரு கதவு இருப்பதைக் காட்டுவார்கள், சிலர் அந்தக் கதவைத் திறந்து வைப்பார்கள். ஆனால் வெகு சிலர்தான் அந்தக் கதவுக்கு அப்பால் இருக்கும் உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள். அந்த வகையில், சினிமா உலகிற்குள் எங்களை அழைத்துச் சென்ற முக்கியமான நபர் சரவணன் சார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களின் முதல் தயாரிப்பிலேயே நம்பிக்கையுடன் கைகோர்த்து பயணித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் அந்த நிறுவனம், எங்கள் முதல் முயற்சியில் தோளோடு தோள் நின்றது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. யுவராஜ் ஒரு தனி மனிதர் அல்ல; அவருக்குப் பின்னால் ஒரு வலுவான அணியே இருக்கிறது. நாங்களும் அவர்களுடன் இணைந்து ஒரே குடும்பமாக இந்தப் பயணத்தை தொடர்கிறோம்.

நல்ல புத்தகங்கள் ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றும் சக்தி கொண்டவை. அதுபோல, சிறந்த திரைப்படங்களுக்கும் சமூகத்தின் எண்ணங்களை மாற்றும் வலிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்களை ஒன்றிணைத்து, மாற்றத்திற்கும் ஊக்கத்திற்கும் வழிவகுப்பதே சினிமாவின் உண்மையான நோக்கம்.

அந்த வகையில், இயக்குநர் பாரி இளவழகன் அன்பே டயானா படத்தில் காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துகளை யாருக்கும் போதனை செய்யாமல், நகைச்சுவையும் எளிமையும் கலந்த திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்திய இளம்பெண்ணாக மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். ரோஜா மேடம், சேத்தன் சார், கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் நன்றிகள். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள், இயக்குநர் ஆகியோரால் மட்டுமே உருவாகாது. அதன் பின்னால் உழைக்கும் உதவி இயக்குநர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரின் கூட்டு முயற்சிதான் அந்த வெற்றிக்கான காரணம். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பே டயானா திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தை கொண்டாடிய அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.” என்றார்.

நடிகர் பரிதாபங்கள் கோபி பேசுகையில், “பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். ஒரு திரைப்படம் எவ்வளவு சிறப்பாக உருவாகியிருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு படத்தை விரும்பினால் உயர்த்தியும், விரும்பவில்லை என்றால் கடந்து சென்றும் விடும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நல்ல கருத்து கொண்ட ஒரு சிறிய படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்யும் சக்தியும் உங்களிடம்தான் இருக்கிறது. அன்பே டயானா திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதற்காக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையரங்குகளுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். குறிப்பாக மொபைல் திரையில் இருந்து பெரிய திரைக்கு வர வேண்டும் என்ற எங்களின் ஆசையை விட உங்களில் பலரும் விரும்பினீர்கள். எங்களின் அந்த முயற்சிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு, எங்களைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல் சமூக வலைத்தளங்களில் அன்பே டயானா குறித்து தொடர்ந்து பதிவிட்டு, படத்தை கொண்டாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதரவு இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு நல்ல படத்தை தயாரிப்பது ஒரு கலை என்றால், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அதே அளவுக்கு பெரிய கலை. குட்நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை அவர் மக்களிடம் கொண்டு சென்ற விதத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே அர்ப்பணிப்புடன் அன்பே டயானா திரைப்படத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அதற்காக அவருக்கு என் பாராட்டுகள்.

இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த வெற்றியின் முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும். அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் நான் அவர் சொன்னபடி திரையில் வெளிப்படுத்த முயன்றேன். இந்தப் படத்தின் ஆன்மா முழுவதும் அவருடைய எழுத்தும், இயக்கமும்தான்.

யூடியூப் போன்ற தளங்களில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல. அதைவிட, இயக்குநராக தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளும் முறை என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்கள், இயக்குநர், படக்குழுவினர், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

சென்னை விநியோகஸ்தர் வம்சி பேசுகையில், “அன்பே டயானா திரைப்படத்தின் சென்னை விநியோகத்தை மேற்கொண்டது எனக்கு ஒரு புதிய அனுபவம். திரைப்பட விநியோகத்தில் நான் களமிறங்கும் முதல் படம் இதுதான். படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த உடனேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போதே தயாரிப்பாளர் யுவராஜிடம், ‘இந்தப் படத்தின் மூலமாகத்தான் என் விநியோகப் பயணத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறியிருந்தேன்.

நான் கடந்த 20 ஆண்டுகளாக ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் தொழில் செய்து வருகிறேன். திரைப்பட விநியோகத்தில் இறங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அந்த ஆசைக்கு அன்பே டயானா திரைப்படம் அழகான தொடக்கமாக அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் யுவராஜ், சரவணன் சார் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகனுடன் பேசியிருக்கிறேன். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதேபோல் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் நான் செய்த முதலீடு இரண்டாவது வாரத்திலேயே முழுமையாக திரும்பக் கிடைத்தது. அதை இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிய துறையில் முதலீடு செய்யும்போது பலரும் தயக்கம் காட்டினார்கள். ‘ஏற்கனவே நல்ல தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்; ஏன் இந்தத் துறைக்கு வர வேண்டும்?’ என்று பலரும் கேட்டார்கள். ஆனால் நான் நம்பிக்கையுடன் எடுத்த முடிவு இன்று சரியானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெரிய படங்கள் வெளியான சூழலிலும் அன்பே டயானா தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல திரைப்படத்தை விநியோகித்து, லாபத்தையும் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றிக்கு காரணமான யுவராஜ், சரவணன் சார் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுவராஜுடன் இணைந்து இன்னும் பல நல்ல திரைப்படங்களை சென்னை விநியோகத்தில் வெளியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

கலை இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், “அன்பே டயானா திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, இப்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய படங்கள் வெளியான சூழலிலும், இந்தப் படம் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்வது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் ஒரு காட்சிக்குத் தேவையான விஷயங்களைச் சொன்னாலே, அதை எளிதாகப் புரிந்துகொண்டு சிறப்பாக திரையில் கொண்டு வந்தார். அதேபோல் இயக்குநர் பாரி இளவழகனும் தேவையற்ற ஆடம்பரங்களை எதிர்பார்க்காமல், இருக்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தி படத்தை உருவாக்கியவர். அதனால் கலை இயக்குநராக எனது பணியை முழுமையாகச் செய்ய முடிந்தது.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுடன் பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் தயாரிப்பாளருக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இந்தப் படத்தில் அப்படியான சூழல் எதுவும் இல்லை. தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நண்பராகவும் அவர் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.

அன்பே டயானா பெற்றிருக்கும் இந்த வெற்றி தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பேசுகையில், “இது எனக்கு முதல் வெற்றி விழா என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பே டயானா திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரித்து வருவதாக விநியோகஸ்தர் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ஒளிப்பதிவாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை.

இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவரை காரணமாகக் கூற முடியாது. நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்த ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் பார்த்தா பேசுகையில், “ஒரு நல்ல திரைக்கதையை முழுமையான திரைப்படமாக மாற்றுவதில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் முக்கியமானது. அன்பே டயானா போன்ற அழகான படைப்பில் பணியாற்றியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இது எனக்கும் முதல் வெற்றி விழா என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணமாக இருந்தது. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், இந்தப் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் குழுவிற்கும் என் நன்றிகள். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் பரத் சங்கர், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர் பாரி இளவழகன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கதையை எந்தவித சர்ச்சைகளும் இல்லாமல், அதன் உண்மையான உணர்வோடு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததுதான் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன். திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிப் பயணம் இன்னும் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசுகையில், “அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் இந்த நன்றி தெரிவிக்கும் விழா எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், உண்மையிலேயே மனப்பூர்வமாக நன்றி சொல்லும் மேடையாக அமைந்திருக்கிறது என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் தொடர்ந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறோம். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்த அதே நன்றியுணர்வுடன்தான் இன்றும் இந்த மேடையில் நிற்கிறேன்.

படத்தில் நடித்த பலரையும் இதற்கு முன்பு நான் திரையில் மட்டுமே பார்த்திருந்தேன். படப்பிடிப்பின்போதும், திரையரங்கிலும் அவர்களது நடிப்பைப் பார்த்து ரசித்தேன். இன்று அனைவரையும் நேரில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர்கள் முத்தமிழ், மோகன்ராஜன், உத்தமன் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகனுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையுடனும், ரசிக்கும்படியும் சொல்லியிருப்பதற்காக இயக்குநர் பாரியை மனதார பாராட்டுகிறேன். அதேபோல் அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் தனித்துவமான ஆழமும் வலிமையும் இருக்கும். ஜமா திரைப்படத்தைப் போலவே, அன்பே டயானாவிலும் ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை அவர் மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தின் இசையைப் பற்றியும், பின்னணி இசையைப் பற்றியும் தங்களது விமர்சனங்களில் குறிப்பிட்டு பாராட்டிய பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு இசையமைப்பாளராக அந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

மேலும், இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்கள், சவுண்ட் இன்ஜினியர்கள், Sunbreak Studios, 20dB Studios மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.” என்றார்.

உடை வடிவமைப்பாளர் அபி நந்தினி பேசுகையில், ”அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியில் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, என் மீது முழு நம்பிக்கை வைத்து பணியாற்ற வாய்ப்பு அளித்த இயக்குநர் பாரி இளவழகனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் இணைந்து நடித்த ரம்யா மிகவும் அன்பாகவும், ஒத்துழைப்புடனும் இருந்தார். அவருடன் பணியாற்றியது மிகவும் வசதியான, இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருடனும் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

நடிகை ரம்யா ரங்கநாதன் பேசுகையில், “இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் மதிப்புமிக்க ஆதரவும், வருகையும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுவராஜ் சார், சரவணன் சார், நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சத்யா காரிகாலன் மேம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பே டயானா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘மேஜிக்’ கதாபாத்திரத்தை என்னை நம்பி ஒப்படைத்த இயக்குநர் பாரி இளவழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பாளர் பார்த்தா, இசையமைப்பாளர் பரத் சங்கர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள், பாடகர்கள், உடை வடிவமைப்பாளர் அபி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. குறிப்பாக அபி வடிவமைத்த ஆடைகள் இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்தன.

என்னுடன் நடித்த ரோஜா மேம், சேத்தன் சார், எனது தந்தையாக நடித்த டென்வர் சார் மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் சிரித்து, கைதட்டி, ரசித்து கொண்டாடியதை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஒரு நடிகருக்கு தனது பெயரை விட, தான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரால் ரசிகர்கள் அழைப்பது மிகப்பெரிய அங்கீகாரம். ‘மேஜிக்’ என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு சிறுமி ஓடிவந்து, “Hi Magic, you really look magical on screen” என்று கூறியதும், மற்றொரு குழந்தை “Bye Magic” என்று விடைபெற்றதும் என் மனதில் என்றும் நிற்கும் தருணங்கள்.

மேலும் பலர், ‘நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக இருந்தும் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே’ என்று பாராட்டினார்கள். அந்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் கோபி அண்ணா, சேத்தன் சார் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், குறிப்பாக இறுதிக்காட்சியில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு கிடைத்த கைதட்டலையும் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.

இந்த வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவு. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நீங்கள் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நான் தவறாமல் பார்த்தேன். படத்தைப் பற்றியும், ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும் நீங்கள் எழுதிய நேர்மறையான விமர்சனங்கள்தான் முதல் வாரத்தில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்களுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்தப் பயணத்தில் உங்களில் பலர் எனக்கு நண்பர்களாகவும் மாறியிருக்கிறீர்கள். அதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். பல போட்டி வெளியீடுகள் மற்றும் பிற சவால்கள் இருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வந்து படத்தை ஆதரித்தனர். கடந்த வாரம் நான் அதிகம் பயன்படுத்திய செயலி BookMyShow தான் என்று சொல்லலாம். Instagram, WhatsApp ஆகியவற்றைவிட, திரையரங்குகளில் காட்சிகள் நிரம்பி வழிவதைப் பார்ப்பதற்காக BookMyShow-வை அதிகமாகப் பார்த்தேன்.

தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாரமும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இதே அன்புடனும் ஆதரவுடனும் அன்பே டயானா திரைப்படத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார்.

நடிகர் சுதர்சன் பேசுகையில், “அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றி விழா மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை பல திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால் இன்று அதே மேடையில் இந்தப் படத்தின் நடிகராக நின்று பேசுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். முந்தைய நிகழ்ச்சியில் சசிகுமார் சார் சொன்ன செட் பிராபர்டி வசனம் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் இந்தப் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்ததில் ஒரு சிறிய பங்காக அமைந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும், அதற்கு முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றுவேன் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சேத்தன் சார், ரோஜா மேம், ரம்யா, செல் முருகன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், இசையமைப்பாளர் பரத் சங்கர், படத்தொகுப்பாளர் பார்த்தா, கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், பவா மணி அண்ணா மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சஜன், விவேக், வேணு, வெங்கட், நரேன் சார், கோபால் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

இரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று அன்பே டயானா திரைப்படம் பெற்றிருக்கும் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. பெரிய படங்களின் போட்டிக்கு மத்தியில் வெளியான இந்தச் சிறிய திரைப்படம் ரசிகர்களின் ஆதரவால் வெற்றி பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை என்னிடம் முதன்முதலாக கூறியபோதே, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இன்று அந்த நம்பிக்கை நனவாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் அப்போதே அவருக்கு வாழ்த்து சொல்லி, இந்தப் படம் வெற்றி பெறும் என்று நான் கூறியிருந்தேன்.

ஒரு நல்ல கதையை உருவாக்குவது மட்டும் போதாது; அதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். சுவையான பிரியாணியை சமைத்தாலும், அதை சரியான இடத்தில் பரிமாறினால்தான் அதன் சுவையை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். அதுபோல, அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பற்றி தொடர்ந்து எழுதி, பேசி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் மிக முக்கியமான காரணம். அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசுகையில், ‘அன்பே டையானா திரைப்படத்தை இந்த அளவுக்கு வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள் அல்லது இயக்குநரின் வெற்றி மட்டுமல்ல. திரையில் தெரியாத நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பின் பலன் தான் இந்த வெற்றி. ஒரு லைட்மேன் முதல் புரொடக்ஷன் அசிஸ்டெண்ட் வரை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர்கள், கலை இயக்குநர், புரமோஷன் குழு, பி.ஆர்.ஓ., டிரைவர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி.

எங்கள் இயக்குநர் பாரி மீது ஆரம்பத்திலிருந்தே எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் சொன்ன கதையும், அதை திரையில் கொண்டு வந்த விதமும் இன்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், குறிப்பாக எங்களை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த மூத்த கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பரத் சங்கர், ஒளிப்பதிவாளர் செல்லி, எடிட்டர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர் குழு, புரொடக்ஷன் குழு, புரமோஷன் குழு என ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து பணியாற்றியதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. குறிப்பாக கடைசி நேர நெருக்கடிகளிலும் யாரும் சோர்வடையாமல், ஒரே இலக்குடன் உழைத்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.

இந்தப் படத்தை முதல் நாள் முதல் கடைசி நாள் வரை எங்களுடன் பயணித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். எங்களை நம்பி திரையரங்குகளுக்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்தான் இந்த வெற்றியின் உண்மையான காரணம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு இன்னும் நல்ல படங்களை உருவாக்கும் பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி எங்கள் முழு குழுவிற்கும் சொந்தமானது. இதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில், “இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும் தான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனைகளும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள்தான். இந்தப் படத்தின் வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

அதேபோல், ஜமா திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவை நான் மறக்க முடியாது. அந்தப் படம் வெளியானபோது உடனடியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அது நாளுக்கு நாள் மக்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நனவாக்கிய ரசிகர்களுக்கும், ஜமா படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அன்பே டயானா கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்கள் தற்போதைய பயணத்திற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே அவர் என் மீது வைத்த நம்பிக்கையே இன்று இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம். அன்பே டயானா படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் முழுமையாக மதித்தார்.

கோபி இந்தக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. முழு படப்பிடிப்பிலும் எந்தவித சிரமமும் கொடுக்காமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னுடைய இயக்குநர் குழுவினருக்கும் இந்த மேடையில் நன்றி சொல்ல விரும்புகிறேன். இணை இயக்குநர்கள் ராகேஷ், ராகுல், பிரசாந்த், தினேஷ், ராஜன், மதன் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.
குறிப்பாக ராகுல், தயாரிப்புக் குழுவிற்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய பாலமாக செயல்பட்டார். பல விஷயங்களில் எனது பணிச்சுமையை குறைத்து, தயாரிப்புக் குழுவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்து பணியாற்றினார். ராகேஷ் என்னுடன் முதல் படத்திலிருந்தே பயணித்து வருகிறார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் படத்தில் பாபா மணி செய்த பங்களிப்பை குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். பெரும்பாலான காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படமாக்கப்பட்டதால், அனுமதி பெறுவது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பேசி, அனுமதிகள், ஆவணங்கள், ஏற்பாடுகள் என அனைத்தையும் முன்கூட்டியே செய்து முடித்ததால், படப்பிடிப்பு மிகவும் சுலபமாக நடந்தது. தயாரிப்புக் குழுவின் சுமையையும் அவர் வெகுவாகக் குறைத்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதற்கு முக்கிய காரணமான வெங்கட்டுக்கு நான் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தப் படத்தை ஒரு வேலை என்ற மனநிலையுடன் அல்ல, தனது சொந்தப் படமாக நினைத்து ஒவ்வொரு போஸ்டர், வீடியோ, தியேட்டர் விஜிட் என அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் கவனித்தார். குறிப்பாக ரம்யா ரங்கநாதனின் மீதான அவரது அக்கறையும், அவருக்காக செய்த உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த நட்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

அதேபோல், எங்கள் பி.ஆர்.ஓ. யுவராஜ் எந்த நேரத்தில் தொடர்புகொண்டாலும் உடனடியாக ஒத்துழைத்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் முதல் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

இரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் சரவணன் பேசுகையில், “அன்பே டயானா போன்ற தரமான, மரியாதைக்குரிய திரைப்படத்தில் எங்கள் இரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தையும் இணைத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேஷ், சத்யா காரிகாலன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இது எங்கள் நிறுவனத்திற்கு வாழ்நாள் பெருமையாகும். அவர்களிடம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.

எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சசிகுமார் சார், எம்.ஜி.எஸ். சிவா, டாக்டர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். அதேபோல், என் மனைவி கலாவுக்கும், என் பிள்ளைகளுக்கும் என் அன்பும் நன்றியும். இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பல சவால்கள் இருந்தாலும், அவற்றைக் கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, ஜனநாயகன் போன்ற பெரிய திரைப்படத்துடன் வெளியானாலும், அந்தப் படம் எங்களுக்கு போட்டியாக இல்லாமல், தமிழ்ச் சினிமாவின் திருவிழா சூழலை உருவாக்கியது. அந்தப் படத்திற்கான டிக்கெட் கிடைக்காத பலரும் அன்பே டயானா திரைப்படத்தைப் பார்த்தனர். அந்த வகையில், இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஜனநாயகன் படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நிறுவனத்தில் இதுவரை பல புதிய இயக்குநர்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் யுவராஜ் கணேஷை கதாநாயகனாக வைத்து கதைகளையும் கூறியிருக்கிறார்கள். அது அவர்மீது சினிமா உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. யுவராஜைப் பற்றி ஒரு விஷயத்தை குறிப்பாகச் சொல்ல வேண்டும். டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த பிறகும், அந்த வெற்றியின் கர்வமோ, பெருமிதமோ அவரிடம் நான் ஒருபோதும் பார்க்கவில்லை. மாறாக, மிகவும் எளிமையாகவும், அடுத்த நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்தார். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘பணம் சம்பாதிப்பது எனக்கு முக்கியமல்ல. நல்ல படங்களை உருவாக்கி, மனநிறைவுடனும், நிம்மதியுடனும் வாழ்வதுதான் முக்கியம்’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாரி இளவழகன் எடுத்திருந்த ஜமா திரைப்படத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் அவர் பேசினார். ‘பாரி போன்ற திறமையான இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் பெரிய வெற்றியை அடைய வேண்டும். அவருடன் நாம் சேர்ந்து பயணிப்போம்’ என்று அவர் கூறியதை இன்று நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அதேபோல், இந்தப் பயணத்தில் யுவராஜ் கணேஷுக்கு உறுதுணையாக நின்ற சத்யா காரிகாலனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டணிதான் அன்பே டயானா திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தத் திட்டத்தில் இணைய வேண்டாம் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். சில நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்த முக்கியமானவர்கள்கூட, ‘இந்தப் படத்தில் இருந்து விலகிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறினர். ஆனால், அந்தக் கருத்துகள் அனைத்தையும் தாண்டி, யுவராஜ் கணேஷ் மீது இருந்த நம்பிக்கையால்தான் நான் இந்தப் பயணத்தில் உறுதியாக நின்றேன். ஒரு மனிதரை புரிந்துகொள்ள ஒரு சம்பவம் போதும். ஆனால், நல்ல மனம், நேர்மை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகிய சிறந்த குணங்களைக் கொண்ட தயாரிப்பாளர்தான் யுவராஜ் கணேஷ். அவரைப் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.