தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு கதை நடக்கிறது. போரில் தனது மனைவியை இழந்த நாயகன் அமர் ராமச்சந்திரன், தொடர்ந்து அங்கு நடக்கும் உயிர் பலியை பார்த்து, எங்கே தன் மகளை இழந்து விடுவோமோ அல்லது தன்னை இழந்து மகள் அனாதையாகி விடுவாரோ என்று அச்சம் அடைகிறார். இதனால், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியின் உறவினரிடம் மகளை ஒப்படைத்து விட்டு, நாட்டில் நிலமை சீரானதும், அதுவரை தான் உயிருடன் இருந்தால், மீண்டும் மகளை அழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்.
அதன்படி, கடல் வழியாக பல தடைகளை தாண்டி தன் மகளுடன் தமிழகம் வரும் அமர் ராமச்சந்திரன், எதிர்பார்த்தது போல் உறவினர்களிடத்தில் மகளை ஒப்படைக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையோரம் வாழ தொடங்குபவருக்கு, அங்கிருப்பவர்கள் சில உதவிகள் செய்கிறார்கள். அவர்களுடைய உதவியுடன் தன் மகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையையும், நல்ல எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுத்து விடலாம், என்ற நம்பிக்கை அவர் மனதில் துளிர் விடுகிறது. ஆனால், அந்த நம்பிக்கை துளிர் வளர்வதற்குள் விதி சூழ்நிலையை மாற்றி அவர் எதற்காக அஞ்சினாரோ அது நடந்து விடுகிறது. அது என்ன ? என்பதை இதயம் நொறுங்கிப்போகும் விதத்தில் சொல்வது தான் ‘தாய்நிலம்’.
தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றியும், தமிழர்கள் இலங்கையில் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் பேசும் பல படங்கள் தமிழகத்தில் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த படம் போரினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்களின் வலியை மிக அழுத்தமாக காட்சி மொழியின் மூலம் மனதை கலங்கடித்து விடுகிறது.
தமிழ் ஈழம் மட்டும் அல்ல உலகின் பல நாடுகளில் நடக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர்களின் கேள்விக்குறியான எதிர்காலத்தைப் பற்றி, கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை சிந்திக்க வைத்து விடுகிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன், தன் உருவம் மற்றும் கண்கள் மூலம் போரினால் பாதித்த மக்களை பிரதிபலித்திருப்பதோடு, அத்தகைய மக்கள் ஒவ்வொரு நொடியும் எத்தகைய ஒரு பயங்கரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள், என்பதையும் பார்வையாளர்கள் உணரும்படி நடித்திருக்கிறார்.
அமர் ராமச்சந்திரனின் மகளாக தமிழனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நேஹா அமர், அதிகம் பேசவில்லை என்றாலும், அச்சம் நிறைந்த அவரது கண்களும், சோர்வடைந்த அவரது முகமும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நம் கண் முன் நிறுத்துகிறது.
அகதிகள் என்று சொன்னாலும், அவர்கள் சக மனிதர்கள் தான் என்ற மனநிலையோடு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஒரு உன்னதமான மனிதராக வலம் வரும் பாலா சிங், நம்பிக்கையோடு தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களுக்கு பெறும் ஆறுதல் தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றிய மீனவர்கள், அகதி முகாமுக்கு அனுப்பாமல் அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநர்கள், பெரிய மீசையுடன் அச்சப்பட வைத்தாலும் உதவி செய்யும் மனிதர், சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், மனம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று நினைக்கும் பள்ளி தலைமை ஆசிரியர், என்று படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் எளிய மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் நேம்றையான மனிதர்களாக உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்தின் பணி எளிமையாக இருந்தாலும், வலி மிகுந்த ஈழ மக்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறுமி கண்ணீருடன், முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு நடக்கும் காட்சி இயல்பாகவும், ஒட்டு மொத்த படத்தில் சொல்ல நினைத்ததை அந்த ஒரே காட்சியில் சொன்ன விதம் பாராட்டும்படி உள்ளது.
அவுசேப்பச்சன் இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறது. வசனங்கள் மூலம் பேச முடியாத பல விசயங்களை தனது அளவான இசை மூலம் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் அவுசேப்பச்சன்.
படத்தொகுப்பாளர் டீஜோ பி.வர்க்கீஸ் காட்சிகளை மெதுவாக நகர்த்தினாலும், கதை சொல்ல வரும் விசயத்தையும், அதில் உள்ள வலியையும் ஆழமாக பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அபிலாஷ் ஜி.தேவன், தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும், அவர்களது அழுகுரல்களையும் காட்சி மொழியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்.
காட்சிகளை படமாக்குவது மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பு, பின்னணி ஆகியவற்றில் சில சிறு சிறு குறைகள் இருந்தாலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மூலம், போரினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலையை உரக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.
மொத்தத்தில் ‘தாய்நிலம்’ தவிப்பு.
ரேட்டிங் 4/5