Take a fresh look at your lifestyle.

‘418’ திரைப்பட விமர்சனம்

36

மருத்துவக் கல்லூரியோடு இணைந்திருக்கும் மனநல மருத்துவ மையத்தில் அறை எண் 418-ல் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவரால் நடந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அந்த கட்டிடம் மூடப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு மாணவர்களின் விடுதியாக மாற்றப்படும் அந்த கட்டிடத்திற்குள், அறை எண் 418-ஐ பூட்டி வைத்திருப்பதோடு, அந்த வளாகத்திற்குள் மாணவிகள் மட்டும் இன்றி மாணவர்களின் பெற்றோர்கள் என பெண்கள் யாரும் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

இதற்கிடையே, விடுதியில் தங்கி படிக்கும் புதிய மாணவர்களான சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி ஆகியோருக்கு அறை எண் 417 ஒதுக்கப்படுவதோடு, 418 அறையை எக்காரணம் கொண்டும் திறக்க முயற்சிக்க கூடாது, என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி ஒருவர் மாணவர் விடுதியில் யாருக்கும் தெரியாமல் நுழை முயற்சிக்க, அப்போது அறையில் தனியாக இருக்கும் சூர்யராஜ் வீரபத்தினியை நிழல் உருவம் ஒன்று கடுமையாக தாக்குகிறது. விடுதி வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் அங்கிருந்து விரட்டப்பட்டப் பிறகு நிழல் உருவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் மாணவர், தனக்கு நேர்ந்ததை மற்றவர்கள் நம்ப மறுப்பதால், அந்த கல்லூரியை விட்டே வெளியேற முடிவு செய்கிறார். ஆனால், பெற்றோர்கள் தனது கல்விக்காக வாங்கியிருக்கும் கடன் மற்றும் தனது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவால், என்ன நடந்தாலும் படித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்வதோடு, அந்த விடுதியில் நடக்கும் அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து அறிய முயற்சிக்கிறார்.

மாணவரின் முயற்சியால் அறை எண் 418-ல் நடக்கும் கொடூர சம்பவங்களுக்கான மூலக்காரணம் தெரிந்ததா ?, அதற்கான தீர்வை கண்டுபிடித்து பிரச்சனையை தீர்த்தார்களா? இல்லையா ?, என்பதை வெறும் திகில் அனுபவமாக மட்டும் இன்றி உளவியல் ரீதியான பாதிப்பு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விவரிப்பது தான் ’418’.

கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கும் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி, ஸ்ரீ வைஷ்ணவ், சஷாங் பாட்டில் மற்றும் கொரோனா நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களின் தோழியாக வலம் வரும் ப்ரீத்தி பகடலா ஆகியோர் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

அமானுஷ்யத்தின் பிடியில் சிக்கி உயிர் தப்பிக்கும் சூர்யராஜ் வீரபத்தினி, பயம் மற்றும் பதட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களையும் பதட்டப்பட வைக்கிறார். கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதை உணர்ந்தாலும், அங்கிருக்கும் ஆபத்துப் பற்றி அறிந்துக்கொள்ள காட்டும் ஆர்வம், அதனுடனே சேர்த்து வெளிப்படுத்தும் பயம் என்று உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சரண் லக்கராஜு மற்றும் ப்ரீத்தி பகடலா ஜோடியின் இளமை துள்ளல் பயத்தில் இருக்கும் பார்வையாளர்களை சற்று ஆசுவாசப்படுத்த, அவர்களின் ஆபத்தை நோக்கிய பயணம் மற்றும் சக மாணவர்களான சஷாங் பாடில் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோரது உயிர் தப்பிக்கும் போராட்டங்கள் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

கதையின் மையப்புள்ளியாக தேவிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ஆச்சர், பார்வையிலேயே பயபட்ட வைக்கிறார். தெருக்கூத்து கலைஞர் போல் புடவைக்கட்டிக் கொண்டு, சலங்கையோடு அவர் நடந்து வரும் காட்சிகள் பார்வையாளர்கள் மனதில் பீதியை கிளப்புவதோடு, அவர் பாடும் தாலாட்டு, ஆபத்து வர இருப்பதை உணர்த்தி மனதில் அச்சத்தை உண்டாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன், இருளையும் வெளிச்சத்தையும் கையாண்ட விதம் படத்தின் பயமுறுத்தும் சூழலை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளது. திரையில் எங்கே என்ன இருக்கிறது என்று தேட வைக்கும் அளவிற்கான குறைந்த வெளிச்சப் பயன்பாடு, ரசிகர்களுக்கு ஒருவித பதற்றத்தை தந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக அறையில் மாணவர் எதிர்கொள்ளும் அமானுஷ்ய தாக்குதல் காட்சியை படமாக்கிய விதம் பார்வையாளர்கள் மனதை படபடக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் வெங்கி.ஜி.ஜி, சலங்கை மற்றும் தாலாட்டு பாடலை பயமுறுத்தும் அம்சங்களாக்கி காட்சிக்கு காட்சி அச்சப்பட வைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையும், அமைதியான சூழலில் எழுப்பப்படும் மரண ஓலங்களும் மனதை நடுங்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் அகுல் அவினாஷ், காட்சிகளை தொகுத்த விதம் படம் முழுவதும் எந்த இடத்தில் எப்போது, எப்படிப்பட்ட திகில் சம்பவங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

உள்ளாஸ் ஹைதூரின் தயாரிப்பு வடிவமைப்பில் மாணவர் விடுதி, தேவிகாவின் வீடு மற்றும் சூழல், கல்லூரிக்கு செல்லும் பாதை என பார்க்கும் அனைத்தும் ஒரு வித பயத்தை கொடுக்கிறது.

உளவியல் ரீதியான திகில் கதையை பார்வையாளர்கள் திகைக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கிருத்தன் நடகவுடா, அமானுஷ்யத்தின் பின்னணியையும், அதற்கான கதையையும் வழக்கமான திகில் படங்களில் இருந்து மாறுபட்டு சொல்லியிருப்பதோடு, உளவியல் ரீதியான பிரச்சனைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அதிர்ச்சியளிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே கொடூரமான சம்பவத்தோடு, பார்வையாளர்கள் மனதை பதைபதைக்க வைக்கும் இயக்குநர் கிருத்தன் நடகவுடா, அடுத்தடுத்த காட்சிகளில் வெறும் 418 என்ற அறை எண்ணை மட்டுமே காண்பித்து அச்சப்பட வைத்து படம் முடியும் வரை பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

மொத்தத்தில், ’418’ திகில் பட ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

ரேட்டிங் 3.5/5