ஒரே கல்லூரியில் படிக்கும் ஏகனும், ஸ்ரீதேவி அப்பல்லாவும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலில் திடீர் பிரச்சனை ஏற்பட, இருவரும் பிரிந்து விடுகிறார்கள். கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்லும் ஏகனுக்கு அங்கே ஃபெமினா ஜார்ஜுடன் காதல் மலர்கிறது. முதல் காதலை தொலைத்தவர், இரண்டாவது காதலையும் தொலைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஆனால், முதல் காதலால் அவரது இரண்டாவது காதலிலும் ஒரு பிரச்சனை வருகிறது. அதன் மூலம் அந்த காதலும் தொலைந்துப் போகக்கூடிய நிலை உருவாக, பிரச்சனைக்கு தீர்வு கண்டு ஏகன் காதலில் வெற்றி பெற்றாரா? அல்லது முதல் காதல் போல் இதிலும் தோல்வியடைந்தாரா ?, அவரது காதல் பிரச்சனைகளுக்கான காரணம் என்ன ? என்பதை காதலர்களுக்கு மட்டும் இன்றி, கணவன் – மனைவி என்று அனைத்து தரப்பினருக்குமான மெசஜோடு சொல்வது தான் ‘ஹைக்கூ’.
விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் பாதிப்பால் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, இந்த கதையை எழுதியிருக்கிறார், என்பது திரையில் தெரிவதோடு, அவரே அப்படத்தின் சில காட்சிகள் மூலமாகவும் சொல்லி விடுகிறார். ஒரு படத்தின் பாதிப்பாக இருந்தாலும், அப்படத்தில் சொல்லாத ஒரு விசயத்தை வைத்து திரைக்கதை எழுதியிருக்கும் யுவராஜ் சின்னசாமி, அதை காதலர்கள் உணரும்படி அல்லது தங்களை கதையோடு தொடர்புபடுத்திக் கொள்ளும்படி சொல்ல முயற்சித்திருக்கிறார்.
சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஏகன், முதல் முறையாக கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். அழுத்தமான மற்றும் பல உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் ஏகன், சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார். குறிப்பாக காதல் தோல்வியையும், முதல் காதலின் நினைவையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது உடல் மொழி மற்றும் உணர்வுகள் பார்வையாளர்களிடத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் ஃபெமினா ஜார்ஜ், இருவரும் மிக எளிமையாக பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறார்களே தவிர, நாயகிகளாக எந்த இடத்திலும் தெரியவும் இல்லை, பார்வையாளர்களை கவரவும் இல்லை. நடிப்பை பொறுத்தவரை அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்லும்படி அவர்களது கதாபாத்திரம் எழுதப்படவில்லை.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி, காதலர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்த வேண்டும் என்றால், அவர்களை குளோசப்பில் காட்டினால் போதும், என்று நினைத்து விட்டாரே தவிர, அவர்களை ரசிக்கும்படி காட்ட வேண்டும், என்று யோசிக்கவே இல்லை. குறிப்பாக தயாரிப்பாளர் படத்திற்காக செய்த ரூ.11 கோடியை திரையில் தேட வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு கதாபாத்திரங்களும், பட காட்சிகளும் பிரகாசம் இல்லாமல் பயணிக்கின்றன.
இசையமைப்பாளர் சித்து குமார் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தின் குறைகளை மறக்கடித்து படத்தை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வு மற்றும் வலியை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்து விடுகிறது.
காதலர்களின் பிரச்சனை அதனால் ஏற்படும் பிரிவு, மீண்டும் காதல், மீண்டும் பிரச்சனை, பிரிவு என்பது மட்டுமே திரைக்கதையில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், தனது பணியின் மூலம் திரைக்கதையை தொய்வில் இருந்து மீட்டெடுக்க கடுமையாக உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி பிரணேஷ்.பி.
கூடுதல் திரைக்கதை எழுதியிருக்கும் ஹரிஹரன் ராம், கதைக்கு தேவை இல்லை என்றாலும், மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிப்பது போன்ற கற்பனையை நெருடல் இல்லாமல் சொல்லி திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி, ஒரு காதல் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டு இந்த கதையை எழுதியிருந்தாலும், அந்த காதல் படம் போன்ற ஒரு பாதிப்பை பார்வையாளர்களிடத்தில் கடத்த தவறியிருக்கிறார்.
காதல் படத்திற்கு கதாநாயகி மற்றும் இசை முக்கியமானது. இதில் இசையை சிறப்பாக வாங்கியிருக்கும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, கதாநாயகிகள் தேர்வில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். இருந்தாலும், படத்தின் கடைசி 20 நிமிடங்கள் காதலர்களுக்கு மட்டும் இன்றி உறவில் இருக்கும் அனைவருக்குமான ஒரு சிறப்பான மெசஜை சொல்லி படத்தை காப்பாற்றியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஹைக்கூ’ காதலை கொண்டாட வைக்கவில்லை.
ரேட்டிங் 3/5