அப்பா ஜெயராம், அம்மா ஊர்வசி, அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் அவர்களது இரண்டு மகள்கள், அளவான மற்றும் நிம்மதியாக வாழும் நடுத்தர குடும்பம். இதற்கிடையே, ஜெயராமின் மகளுக்கு ரவுடி சாண்டி காதல் தொல்லை கொடுக்கிறார். அவர் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவரது தாதா அம்மாவும் மகனது காதலுக்கு ஆதரவாக ஜெயராம் குடும்பத்தை அவ்வபோது மிரட்ட செய்கிறார். இந்த தொல்லையில் இருந்து விடுபட, ரவுடி சாண்டியை கொலை செய்து விடலாமா ? என்று குடும்பத்தினர் ஆலோசிக்கின்றனர்.
இதற்கிடையே, சாண்டி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி மிஷ்கினுக்கு, ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அவர் தன் விசாரணையை தொடங்க, ஜெயராம் குடும்பத்தினரே ஒருவரை ஒருவர் சந்தேகப்படவும் செய்கிறார்கள். பிறகு ஜெயராமின் சகோதரரும், ஊர்வசியின் சகோதரரும் வருகிறார்கள். அவர்கள் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. சாண்டியை கொலை செய்தது யார் ? எதற்காக ? என்பதை காமெடியாகவும், கொஞ்சம் கருத்தோடும் சொல்வது தான் ‘பரிமளா அண்ட் கோ’.
ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் இயல்பான நடிப்பும், டைமிங் காமெடி வசனங்களும் சிரிப்பால் திரையரங்கை அதிர வைக்கிறது. அதே சமயம், சில இடங்களில் சில காமெடி வசனங்களுக்காக சில நிமிடங்கள் பேசிக்கொண்டே இருப்பது சற்று போரடிக்கவும் செய்கிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், தனது தனித்துவமான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக வரும் இவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் எதிர்பார்க்காத திருப்பம் மூலம் பார்வையாளர்களை திகைக்க வைக்கிறது.
சாண்டி புதிய பரிணாமத்தில் நடிப்பில் மிளிர்கிறார். நடன இயக்குநர் என்ற பிம்பத்தை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
அக்கா, தங்கையாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோரது குறும்புத்தனமான நடிப்பு நடுத்தர குடும்ப இளம் பெண்களை பிரதிபலித்திருக்கிறது.
ஜி.கே.எம்.தமிழ்குமரன், யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களை கவரும் விதத்தில் மிளிர்கிறது.
ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் துள்ளல் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் மற்றும் கலை இயக்குநர் டி.ராமலிங்கம் ஆகியோரது பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அதை சோகமாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பார்வையாளர்களை சோதிக்கவும் செய்கிறது.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, திரையின் அளவை விட அதிகமான கதாபாத்திரங்கள் என்று படம் பயணித்தாலும், ஒரு கட்டத்தில் அவை படத்திற்கு பலவீனமாக மாறிவிடுகிறது. அதிகமான கிளைக்கதைகள், அவற்றின் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான காட்சிகள் மற்றும் வசனங்கள் எடுபடாமல் போவதோடு, கதையை வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்து படத்தை பதம் பார்த்து விடுகிறது.
சில காமெடி காட்சிகள் ஆறுதல் அளிப்பது போல், கிளைமாக்ஸ் நெருக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ், இளைஞர்களுக்கான அறிவுரை ஒன்றை அழுத்தமாக சொல்லி படத்தை காப்பாற்றி விடுவதோடு, குடும்பமாக பார்க்க கூடிய நகைச்சுவை மற்றும் மெசஜ் சொல்லும் படமாக மக்களிடம் கடத்தி விடுகிறார்.
மொத்தத்தில், ‘பரிமளா அண்ட் கோ’ கொஞ்சம் சிரிப்பு, நிரைய சஸ்பென்ஸ் என குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுதுபோக்கு படம்.
ரேட்டிங் 3/5

