Take a fresh look at your lifestyle.

’ராவ் பகதூர்’ திரைப்பட விமர்சனம்

21

மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ், வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் சொன்ன கெடுவை தாண்டியும் இறக்காமல் இருக்கும் அவர், தன் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் மனதை போட்டு உறுத்துகிறது. அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார்.

அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது ?, நாயகி தீபா தாமஸ் உடனான காதல் மற்றும் கல்யாணம், தன் இளைய மகன் மீதான அவரது வெறுப்புக்கு என்ன காரணம் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை ஒரு பீரியட் படமாக மட்டும் அல்லாமல் ஆழமான உலவியல் படமாகவும், சாதி மற்றும் நிற வெறிக்கு எதிரான சம்மட்டியடியாகவும் சொல்வதே ‘ராவ் பகதூர்.

தெலுங்கு திரையுலகில் இப்படி ஒரு படமா…! என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு, உளவியல் ரீதியான பீரியட் படத்தை மிக வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை வடிவத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ் மஹா.

ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ், முழு படத்தையும் தன் நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார். இளமை மற்றும் முதுமை என இரண்டு வெவ்வேறு தோற்றங்களை தனது உடை மற்றும் மேக்கப்பில் மட்டும் இன்றி, உடல் மொழி, சிறு சிறு அசைவுகள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். கோபம், வெறுப்பு, மன உளைச்சல், சந்தேகத்தால் ஏற்படும் தவிப்ப்பு என அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் மிக அபாரமாக வெளிக்காட்டி, தன் நடிப்புக்காகவே படத்தை பார்க்க வைத்து விடுகிறார்.

நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா தன் வேலையை சரியாக செய்திருப்பதோடு, திரைக்கதையில் இருக்கும் உளவியல் ரீதியான திருப்பங்களுக்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், தனக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருப்பதோடு, இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத ரகசியத்தை உடைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், பீரியட் படத்திற்கான வழக்கமான பாணியை கையாளாமல், வண்ணங்கள் மற்றும் விளக்கு ஒளிகளை வித்தியாசமான பாணியில் கையாண்டு, புதுமையான அனுபவத்திற்குள் பார்வையாளர்களை பயணப்பட வைத்திருக்கிறார். பலவித திருப்பங்களோடு படம் பயணித்தாலும், முதன்மை கதாபாத்திரத்தின் குணங்களையும், அவ்வபோது அவருக்குள் ஏற்படும் மாற்றங்களையும் மிக துள்ளியமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

ஸ்மரன் சாய் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கதாபாத்திரங்கள் பேசாத இடங்களில் தனது பின்னணி இசை மூலமாக, அவர்கள் பேச நினைத்ததை பிரதிபலித்திருக்கும் இசையமைப்பாளர் பீரியட் படம் என்பதால் பழமையான கருவிகள் கொண்டு உருவாக்கியிருக்கும் பீஜியம்கள் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பணி பிரமிக்க வைக்கிறது. பழைய அரண்மனை மற்றும் அதில் இருக்கும் பொருட்களை மிக நுணுக்கமாக வடிவமைத்திருப்பவர், அரண்மனையில் பயன்படுத்திய வண்ணங்களை, நாயகனின் உடையில் பயன்படுத்தியிருக்கும் வண்ணங்களோடு ஒத்துப்போக வைத்து, ஒரு புதிய உலகத்தில் படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா, ஒரு சாதாரணமான பீரியட் படமாக அல்லாமல், சாதி வெறி, நிற வெறி மற்றும் ராஜ பரம்பரையின் ஆணவம் ஆகியவற்றை அடித்து நொறுக்கும் ஒரு கதைக்களத்தை உளவியல் திரில்லர் பாணியிலான படமாக கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

படத்தின் நீளம் மற்றும் சில காட்சிகளின் நீளம் படத்தின் குறையாக இருந்தாலும், நாயகன் சத்ய தேவின் நடிப்பு அந்த குறைகளை மறந்து படத்தை பாராட்ட வைத்து விடுகிறது.

நாயகன் சத்ய தேவை மிரட்டும் சிறுவன், அவனது இறப்பு போன்றவை ஏதோ திகில் படம் போல் கதையை ஆரம்பித்தாலும், அதன் பிறகான அடுத்தடுத்த நகர்த்தல் மூலம் பல ஆச்சரியங்களை அதிரடியாக சொல்லி, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு விடும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் மசாலாத்தனத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு ஒரு உலகத் திரைப்படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ’ராவ் பகதூர்’ தெலுங்கு சினிமாவின் ஆச்சரியம்.

ரேட்டிங் 3.8/5