Take a fresh look at your lifestyle.

’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

20

அம்மாவின் அரவணைப்பில் வளரும் மிகப்பெரிய தொழிலதிபரான சூர்யா, தன் அம்மா ஆசைப்பட்டதற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தாலும், திருமணம் மட்டும் செய்துக் கொள்ளக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மனதை மாற்ற அவரது அம்மா ராதிகா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லாமல் போக, தன் குடும்பத்திற்கு வாரிசு இல்லாமலேயே போய் விடுமோ…! என்று கவலைப்படுகிறார். அம்மாவின் கவலையை தீர்ப்பதற்காக வாடகைத்தாய் மூலம் சூர்யா குழந்தை பெற்றுக் கொள்கிறார்.

சூர்யாவின் இந்த நடவடிக்கை அவரது அம்மாவுக்கு அதிர்ச்சியளித்தாலும், கொஞ்சி விளையாடவும், குடும்பத்தின் பெயர் சொல்லவும் ஒரு குழந்தை வந்துவிட்டது என்று மகிழ்ச்சியடைகிறார். ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் குழந்தையின் உயிருக்கு திடீரென்று ஆபத்து ஏற்படுகிறது. குழந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக வாடகைத்தாயை தேடி செல்லும் சூர்யா, அது தன்னை விட 20 வயது குறைவான மமிதா பைஜு தான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார்.

குழந்தையின் நிலையை சொல்லி அவரை அழைக்கும் போது, பணத்திற்காக வாடகைத்தாயாக இருந்த மமிதா பைஜு, அதே பணத்திற்காக குழந்தையை காப்பாற்ற சூர்யாவுடன் பயணிக்கிறார். ஆனால், நாளடைவில் தான் பெற்றெடுத்த குழந்தையுடன், அதன் தந்தையான சூர்யாவையும் காதலிக்க தொடங்குகிறார்.

வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மமிதா பைஜுவின் காதலை நிராகரிக்கும் சூர்யா, திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?, அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் மமிதா பைஜு சூர்யாவின் மனதை மாற்றினாரா ? என்பதை மேல்தட்டு மக்களின் குடும்ப நாடகமாக சொல்வதே ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.

முன்னணி நட்சத்திரங்கள் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தாலும், அதன் மூலம் நாளு பேருக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும், என்பதில் படு தீவிரமாக இருக்கிறார்கள். அப்படி தான் சூர்யாவும், இந்த படத்தில் என்னதான் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், எளிமையாக இருக்க வேண்டும், பெற்றொரை மதிக்க வேண்டும், தன்னை நம்பியிருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை எளிதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சூர்யா, சஞ்சு விஸ்வநாத் என்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷாக வலம் வந்தாலும், எளியவர்களையும் கவரக்கூடிய விதத்தில் நடித்திருக்கிறார். தன்னை விட வயது குறைவான பெண்ணின் காதலை ஏற்க மறுப்பது, திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பது, அம்மாவின் மீதான பாசத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவது, என்று தன் இலகுவான நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போடுபவர், அம்மாவை நினைத்து அழும் காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கையே கண்கலங்க வைத்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில், கதாபாத்திரத்திற்கு ஏற்ற துள்ளல் நடிப்பால் பார்வையாளர்களின் உள்ளங்களை கவர்கிறார். அமெரிக்க பாணியிலான ஆங்கிலத்தையும், தமிழையும் அசால்டாக பேசி நடித்திருக்கும் மமிதா, மகிழ்ச்சி, சோகம், காதல், வெட்கம் உள்ளிட்ட மனிதர்களின் அனைத்துவிதமான உணர்வுகளையும் அழகாகவும், ரசிக்கும்படியும் வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

சூர்யாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவின் அனுபவம் வாய்ந்த நடிப்பும், தற்போதைய காலக்கட்டத்திற்கான மேலோட்டமான நடிப்பும் காட்சிகளை இயல்பாக நகர்த்த உதவியிருக்கிறது.

ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் மென்மையாகவும், துள்ளல் ரகமாகவும் மனதை வருடுகிறது. பின்னணி இசையை கூட மெலோடியாக கொடுத்து மனதை இதமாக்கியிருக்கிறார்.

மெதுவான திரைக்கதை என்றாலும், பார்வையாளர்களின் முழு கவனமும் திரையோடு ஒட்டிக்கொள்ளும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் நவீன் நூலி

எழுதி இயக்கியிருக்கும் வெங்கி அட்லூரி, திருமண உறவை வெறுக்கும் ஒரு ஆண் பார்வையில் கதை சொன்னாலும், அவர்களின் உண்மையான பின்னணியையும், அவர்களது உல்லாச உலகத்தையும் தைரியமாக சொல்லியிருக்கிறார். அதை விட அதிக தைரியம் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு தான்.

எளிமையான கதை, மெதுவான திரைக்கதை, இலகுவான காட்சிகள் என்றாலும், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் முழு கவனத்தையும் கட்டிப்போடும் விதமாக படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் வெங்கி அட்லூரி, மகனின் வெளிநாட்டு பயணத்தின் பின்னணி தெரிந்தும், அவரை கண்டிக்காமல், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அம்மா மனநிலையை காட்சிப்படுத்திய விதம் நெருடல்.

சர்ச்சையான விசயங்களை கூட நகைச்சுவையாக கையாண்டு ஏற்றுக்கொள்ளும்படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், திருமண உறவு வேண்டாம், ஆனால் பெண் உடனான உடலுறவு மட்டும் வேண்டும், என்ற மனநிலையுடன் பயணிக்கும் நாயகன், தன் அப்பா போல் இரண்டும் போதாது என்று சுற்றுவது போல் இருக்கிறது.

ஆனால், இந்த விசயங்களை மேலோட்டமாகவும், காமெடியாகவும் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி, மக்களுக்கு பல நல்ல விசயங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கோபமும், வெறுப்பும் ஒருக்கட்டத்திற்கு மேல் சோர்வடைந்து விடும், சண்டையால் உறவுகள் பிரிவதில்லை, அதன் பிறகு எப்படி பேசுவது என்று தெரியாமல் தான் பிரிகிறது போன்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.

ரேட்டிங் 3.8/5