திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் திண்டாடும் நாயகன் ரியோவை, நாயகி வர்டிகா காதலிக்கிறார். அதே சமயம், மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன், அதனால் 6 மணிக்கு மேல் சந்திக்க கூடாது, என்ற நிபந்தனை விதிக்கிறார். வர்டிகாவின் அழகிலும், காதலிலும் கிரங்கியிருக்கும் ரியோ, அவரது நிபந்தனையை ஏற்று காதலிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு வர்டிகாவின் மாலை 6 மணி நிபந்தனை ரியோவுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்த, 6 மணி ரகசியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
’சின்னதம்பி’ பட கவுண்டமனி போல் மாலைக்கண் பிரச்சனையாக இருக்குமோ…!, என்று நாயகன் ரியோ மற்றும் பார்வையாளர்கள் சிந்திக்க, யோசித்து பார்க்க முடியாத ஒரு பிரச்சனை நாயகிக்கு இருப்பது தெரிய வருகிறது. அது என்ன ?, அது தெரிந்த பிறகும் நாயகன், வர்டிகாவை காதலித்தாரா ?, அவருக்கு கல்யாணம் நடந்ததா ? என்பதை காமெடியாக சொல்வதே ‘ராம் அன்ட் லீலா’.
கல்யாணத்திற்காக ஏங்கும் இளைஞர் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ, காமெடி கலந்த நடிப்பால் புதுவிதமான ரியோவை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். பெண்கள் உலகம் பற்றி தெரியாத அப்பாவியாக வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் பெரும்பாலான சில்மிஷங்கள் மற்றும் செயல்களில் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்டத்தை நினைவுப்படுத்துகிறது. காதலுக்காக ஏங்குவது, எதிர்பார்க்காத பிரச்சனை, அந்த பிரச்சனையை தீர்க்க போராடுவது என்று திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் ரியோவின் நடிப்பு இருந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸாகவும் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். கனமான கதாபாத்திரம் என்றாலும், அவருக்கு ஹீரோ அளவுக்கு நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவரை ஒரு அழகு சிலையாக காட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கையாக நடித்திருக்கும் தாஃபியா அபு, மாமனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பராக நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமனாக நடித்திருக்கும் மாகாபா, தாத்தாவாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன், காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக நாயகியை அழகாகவும், பளிச்சென்றும் காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருப்பவர் படம் முழுவதையும் பளிச்சென்று படமாக்கி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜாக இடம் பெற்றிருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, ரீல்ஸ் வீடியோவுக்கானதாகவும் இருக்கிறது. பின்னணி இசை பாடல்களைப் போல் மெலோடி பாணியில் இதமாக பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா, முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்துவதோடு, நகைச்சுவை காட்சிகளை சரியான முறையில் தொகுத்து படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஆங்கிலப் படத்தை பார்த்து கருவை சுட்டார், என்று தெரியவில்லை. (காரணம், இதே கருவோடு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு படம் வெளியானது ) சுட்ட கருவாக இருந்தாலும், அதை தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ப கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
யூகங்களை கடந்த நாயகியின் பிரச்சனை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருப்பதோடு, அதற்கான பின்னணியை கதையாக விவரித்த விதமும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பிரச்சனை குறித்து தெரிந்த பிறகு, காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் சிக்கல், அந்த சிக்கலை தாண்டிய காதலையும், அந்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதம், கல்யாணத்தை காமெடி கலாட்டாவாக கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் படத்தில் இருக்கும் சில குறைகளை மறக்கடித்து, சிரித்து மகிழும்படியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.
மொத்தத்தில், ’ராம் அன்ட் லீலா’ மனிதர் உணர்ந்து கொண்ட புனிதமான காதல்.
ரேட்டிங் 3/5