Take a fresh look at your lifestyle.

உலகின் முதல் காப்புரிமை பெறாத முருகர் பக்தி பாடல்!

27

இசை உலகில் ஆன்மீகப் பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு. சினிமாவில் மிகப்பெரிய ஹிட் பாடல்களை பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி கூட, ஆன்மீகப் பாடல்கள் மூலமாகவே மக்களால் அறியப்பட்டார்கள். அதேபோல், சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பலரது குரலை உலகளவில் ஒலிக்க செய்தது ஆன்மீக பாடல்களுக்கு பெரும் பங்கு உண்டு. அப்போது மட்டும் அல்ல, இப்போதும் ஆன்மீகப் பாடல்கள் என்றால் அவற்று தனி வரவேற்பு உண்டு. அதிலும், முருகனைப் பற்றிய பாடல் என்றால் சொல்ல வேண்டாம். ஆனால், சமீபகாலங்களில் முருகன் பற்றிய பாடல்களின் வருகை குறைவாக இருந்த நிலையில், அந்த குறையை போக்கும் விதத்தில் முருகன் பக்தி பாடல் ஒன்று உருவாகியிருப்பதோடு, அந்த பாடல் எந்தவிதமான காப்புரிமையும் இன்றி, உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட உள்ளது.

முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி ‘முருகனருட்செல்வர்’ என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப் பாடலை தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்.

தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற வைக்கம் விஜயலட்சுமி பாடும் முதல் பக்திப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பிரபல திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

“பிறைசூடன் என்பது சிவனைக் குறிக்கும் சிவனது மகன் முருகன். அவ்வகையில் கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது அந்த முருகனே அமைத்தது போல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது” என்கிறார்கள் தயாரிப்புக் குழுவினர்.

இமயம் முதல் குமரி வரை முருக வழிபாடு இருந்திருக்கிறது என்பதை இந்தப் பாடலின் வரிகள் கூறுகின்றன. இதில் பல திரைப்படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் .

இந்தப் பாடல் முயற்சி பற்றி ஜெயம் எஸ். கே. கோபி கூறுகையில், “இந்தப் பாடலை நான் உருவாக்கவில்லை அது முருகன் எனக்குள் இட்ட ஆணை மூலம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.என்னை வழிநடத்தியது அந்த முருகன் தான். இந்த பாடல் உலகில் உள்ள முருக பக்தர்களுக்காக உருவாகியு ள்ளது. ஒரு முருக பக்தைக்கும் முருகனுக்கும் நிகழும் உரையாடல் போல இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்களுக்குச் சமர்ப்பணம்.” என்றார்.

இந்தப் பாடலுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள எல்லா முருகர் பக்தர்களும் இந்தப் பாடலைக் காப்புரிமை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

இந்தப் பாடல் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.