Take a fresh look at your lifestyle.

‘செய் செய்யாதே’ திரைப்பட விமர்சனம்

44

தற்போதைய நவீனக் காலக்கட்டத்தில் மருத்துவத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது போல், அத்துறையின் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவத்தை சேவையாக பார்த்த காலம் மாறி, தற்போது அதை மிகப்பெரிய லாபம் தரும் தொழிலாக பார்க்கப்படுவதால், பொது மக்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மருத்துவத்துறையின் மூலம் நிகழும் குற்றங்களுக்கும், அதன் பின்னணியில் இருப்பவர்களுக்கும் எத்தகைய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் சொல்வது தான் ‘செய் செய்யாதே’.

மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வராக இருக்கும் நாயகன் டாக்டர் எஸ்.ராஜாவின் மனைவி சொந்தமாக மருத்துவமனை வைத்து அதன் மூலம் நோயாளிகளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். ஆனால், நேர்மையானவரான ராஜா, தனியார் மருத்துவமனையின் மோசடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச மருத்துவம் செய்து காப்பாற்றுகிறார். இதனால், அவருக்கு மாவட்டம் முழுவதும் நல்ல பெயர்.

இதற்கிடையே, ராஜாவின் மகன், குரு விஜய் தனது அம்மாவைப் போல் மருத்துவத்துறையை பயன்படுத்தி சம்பாதிக்க முடிவு செய்பவர், அதற்காக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சில நாசவேலைகளிலும் ஈடுபடுகிறார். இதனால், மக்கள் பாதிக்கப்படுவதோடு, இளைஞர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இளைஞர்களின் இத்தகைய மர்ம மரணங்களை தடுக்க முயற்சிக்கும் ராஜா, அதற்கான மூலக்காரணம் தனது மகன் என்பது தெரியாமல், அந்த கூட்டத்தை பிடிக்க களத்தில் இறங்குகிறார். ஆனால், தனது தந்தையால் ஆபத்து ஏற்பட போவதை அறியும் குரு விஜய், அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.

படத்தை இயக்குவதோடு, டாக்டர்.சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.எஸ்.ராஜா, எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் தமிழக முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எச்.ராஜாவின் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ராஜாவின் மகனாக நடித்திருக்கும் குரு விஜய் தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார். ராஜாவின் மனைவியாக டாக்டர்.விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்ஷினி ரெட்டி, பணம் பறிக்கும் மருத்துவர்களின் கொடூர முகத்தை பிரதிபலித்திருக்கிறார்.

தங்கதுரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிதம்பரம்.பி.டி.கே, மோனிகா ப்ரீத்தி, பிரதீக்‌ஷா மனோ பிரசாந்த், தபிதா குணரத்னே என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும், எந்தவித பதட்டமும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராம்நாடு வாசு.பி எளிமையான படப்பிடிப்பு என்றாலும் காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.

டாக்டர்.எஸ்.ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேசப்பற்றுடனும், சமூகப்பொறுப்புடனும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ராஜா முகமதுவின் படத்தொகுப்பு பிரச்சார பின்னணி கொண்ட கதையை கமர்ஷியலாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.எஸ்.ராஜா, மருத்துவர்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது, என்பதை விவரித்திருப்பதோடு, சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகளை அச்சுறுத்தி அவர்களிடம் பணம் பறிக்கும் மருத்துவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

மருத்துவர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், மருத்துவக் கல்லூரிகள் என மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்து தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜா, கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவத்துறையில் நடந்த மோசடியையும், அதை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் பற்றியும் விவரித்திருப்பதோடு, அரசு மருத்துவமனைகளில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?, எதற்காக நடக்கிறது ? என்று பல விசயங்களை சொல்லி அதிர்ச்சியளித்திருக்கிறார்.

கதையை படமாக்கிய விதம் மற்றும் பொருளாதார ரீதியாக படத்தில் சில குறைகள் இருந்தாலும், மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகளையும், சில மருத்துவர்களின் பண பேராசையையும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜாவின், இத்தகைய முயற்சியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில், ‘செய் செய்யாதே’ நல்ல அறிவுரை.

ரேட்டிங் 2.8/5