Take a fresh look at your lifestyle.

’சீன்’ திரைப்பட விமர்சனம்

240

துல்லியமான புலனாய்வு, கூர்மையான விசாரணை மூலம் வழக்குகளை எளிதில் முடிக்கும் திறன் படைத்த காவல்துறை அதிகாரியான சூர்யா, தனது பணியை ராஜினாமா செய்கிறார். முதலில் ராஜினாமாவை ஏற்க மறுக்கும் உயர் அதிகாரி, அவர் கண் பார்வையை இழந்து விட்ட உண்மை தெரிந்த பிறகு, ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த நிலையில், சூர்யாவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி பாணியில் நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. தன்னால் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கும், தற்போது நடக்கும் கொலைகளுக்கும் எந்தவிதமான சம்மந்தம் இல்லை என்பதை கண்டுபிடிக்கும் சூர்யா, தற்போதைய கொலைகளின் பின்னணி மற்றும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால், அவரது பார்வை குறைபாட்டை காரணம் காட்டி, உயர் அதிகாரி அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார். காவல்துறையில் இல்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் கொலை குற்றவாளியை பிடிக்க முடிவு செய்யும் சூர்யா, தனது உதவியாளராக நஸ்ரியா நசீமை வேலைக்கு சேர்த்துக் கொண்டு, வழக்கு விசாரணையில் இறங்குகிறார்.

எந்தவிதமான ஆதரமும் இல்லாமல், கண் பார்வை இன்றி விசாரணை களத்தில் பயணிக்கும் சூர்யா, சைக்கோ கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, வித்தியாசமான முறையில், புதுமையான புலனாய்வு திரில்லராக சொல்வது தான் ‘சீன்’.

சூர்யாவை கம்பீரமான காவல்துறை அதிகாரியாக பல படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் இதுவரை பார்த்திராத ஒரு காவல்துறை அதிகாரியாக மட்டும் இன்றி, இதுவரை பார்த்திராத ஒரு சூர்யாவையும் பார்க்க முடிகிறது. காவல்துறையின் குற்றப் பிரிவு அதிகாரியான சூர்யா, தோற்றம் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். பார்வை அற்றவராக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் பயணிப்பது, தனது உதவியாளரின் அறிவுரை கேட்டு சாலையில் பயணிப்பது, தன் குறைபாட்டால் ஏற்படும் இயலாமையை எண்ணி வருந்துவது என்று இன்பராஜ் கதாபாத்திரத்தின் பல பரிணாமங்களை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் சூர்யாவின் திரைப் பயணத்தில் இந்த கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் நஸ்ரியா நஸீமின் தோற்றத்தில் மாற்றம் தெரிந்தாலும், அவரது நடிப்பு அதே துள்ளல் ரகத்தோடு, ரசிக்கும்படி இருக்கிறது. சூர்யாவின் கண்ணாக இருந்து பயணிப்பதும், அவர் மீதான காதலை மெல்லிய உணர்வோடு வெளிப்படுத்துவதும் என்று நஸ்ரியா கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பார்வையாளர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

நஸ்லன் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்குத் தனித்துவமான உயிரோட்டத்தைக் கொடுக்கிறார். மிகைப்படுத்தப்படாத முகபாவனைகள், இயல்பான உடல்மொழி, உணர்வுகளை வெளிப்படுத்தும் நுணுக்கம் என ஒவ்வொரு தருணத்திலும் சூர்யாவுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்தராஜ், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் லால், இன்ஸ்பெக்டர் சிபியாக நடித்திருக்கும் ராஜ்பிரியன், இன்ஸ்பெக்டர் வினோத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மதிழயகன், நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் ஆகியோரின் நடிப்பு வழக்கமானதாக அல்லாமல், இயல்பாகவும் ரசிக்கும்படியும் அமைந்திருக்கிறது.

கதையை வசனங்களால் மட்டுமல்ல, காட்சிகளாலும் உணரச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஒளிப்பதிவாளர் வினித் அகஸ்டியன், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாக தன் கேமராவை பயணிக்க வைத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

சுசீன் ஷாமின் இசை, கதையின் ஓட்டத்திற்குத் துணையாகப் பயணிப்பதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு காட்சியின் உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குள் ஆழமாகக் கடத்துகிறது. பின்னணி இசையில் வெளிப்படும் நுணுக்கம், காட்சிகளின் உணர்ச்சித் தன்மைக்கு ஏற்ப மாறும் இசைக்கோர்வை, அமைதியான தருணங்களில்கூட உணர்வுகளைப் பேச வைக்கும் இசை மொழி என இசையமைப்பாளர் தனது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பு கதையின் ஓட்டத்தைச் சீராக நகர்த்தி செல்வதோடு, ஒவ்வொரு காட்சியும் அதன் முழுமையான தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

புலனாய்வு திரில்லர் கதைகளுக்காகவே இருக்கும் வழக்கத்தை கடந்து, புதுமையான முறையில் கதை சொல்லியிருப்பதோடு, கதாபாத்திரங்களை வடிவமைக்கும் நுட்பத்திலும் தனித்துவமான அணுகுமுறையை கையாண்டிருக்கும் இயக்குநர் ஜித்து மாதவன், சூர்யா போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியை வெற்றி பெற செய்திருக்கிறார்.

கண் பார்வை இல்லாத ஹீரோ என்றாலும், அவரை மாஸாக காண்பித்ததோடு, கதையின் போக்கையும், திரைக்கதையில் இருக்கும் வேகத்தையும், விறுவிறுப்பையும் துளி கூட குறைய விடாமல், படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஜித்து மாதவன், காதல் மற்றும் வில்லனை சூர்யாவின் கண்ணாக செயல்படும் நஸ்ரியா பார்ப்பது உள்ளிட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் மூலம் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

கொலையாளி யார் ?, எதற்காக கொலை செய்கிறார் ?, என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டாலும், படத்தின் இறுதிக் காட்சி வரை, அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை திரைக்கதையும், காட்சியமைப்பும் ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், ‘சீன்’ செம.

ரேட்டிங் 4/5