விளம்பர நிறுவனம் நடத்தி வரும் நாயகன் ஷகீர் மனோ, ஒரு டைரியின் மூலம் நாயகி அர்ச்சனா தான் தனது மனதுக்கு பிடித்தவர் என்பதை முடிவு செய்து அவரை பார்க்காமலே காதலிப்பதோடு, அவரை தேடவும் செய்கிறார். அந்த தேடல் பயணத்தில் அவருக்கு உதவி செய்ய வரும் திவ்யா நாகேஷ், ஷகீரின் நல்ல மனதால் கவரப்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார்.
இதற்கிடையே, காலம் ஷாகீரையும் அவர் தேடும் அர்ச்சனாவையும் ஒன்று சேர்த்து வைக்க, இவர்களது காதல் பயணத்தில் திவ்யா நாகேஷ் முட்டுக்கட்டை போடுகிறார். ஷகீர் – அர்ச்சனாவுக்கு அவர்களது குடும்பத்தார் திருமண ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்க, ஷகீர் மீதான காதலில் தீவிரமாக இருக்கும் திவ்யா நாகேஷ், அவரது காதல் வாழ்க்கைக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறார். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முயற்சிக்கும் ஷகீரின் காதல் வாழ்க்கையில், எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன ?, அதன் மூலம் அவரது காதல் என்னவானது ? என்பது தான் ‘மெளன மொழிகள்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஷகீர் மனோ, அமுல் பேபி போல் இருப்பதோடு, குழந்தைத்தனமான நடிப்போடு பார்வையாளர்களை கவர்கிறார். காமெடி, காதல், சண்டைக்காட்சிகள் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக கையாண்டு தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் பி.ஸ்ரீமன், குறைவான காட்சிகளில் வந்தாலும் திரைக்கதையின் முக்கியமான திருப்பத்தில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டு பயணிக்கும் போது புத்துணர்ச்சியோடு நடித்திருப்பவர், எதிர்பாரத விபத்தினால் தன் கனவு சிதைந்து போனதை நினைத்து வருந்தும்போது பார்வையாளர்களை கலங்கடிக்கும் விதத்திலும் நடித்து பாராட்டு பெறுகிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் திவ்யா நாகேஷ், சகஜமாகவும், நட்பாகவும் பழகும் ஒரு பெண்ணை, இந்த சமூகம் எப்படி தவறாக பார்க்கிறது, என்பதை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் அதிரடியாகவும், அளவாகவும் நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அர்ஜுனன், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். இவருடன் அவ்வபோது கூட்டணி அமைத்து காமெடி ஏரியாவில் வலம் வரும் டீ கடை நாயராக நடித்திருக்கும் விஜய் கணேஷும் தனது பங்கிற்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் மற்றும் மீரா கிருஷ்ணன், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் இளவரசன் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.ஜி.ராய், காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைக்கிறார்.
நல. இளந்திரையன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.சி.சௌந்தர். M.A., முக்கோண காதல் கதையை திருப்பங்களோடு சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.
குறிப்பிட்ட எல்லைக்குள் தான் சொல்ல வந்ததை சொல்லும் சூழலில் பணியாற்றியிருந்தாலும், அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக கையாண்டு, ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்து சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஏ.சி.சௌந்தர், இறுதியில் எதிர்பார்க்காத முடிவின் மூலம் பார்வையாளர்களின் இதயத்தை கனக்கச் செய்துவிட்டார்.
மொத்தத்தில், ‘மெளன மொழிகள்’ மறக்க முடியாத காதலையும், அதன் வலியையும் மக்கள் மனதில் முழுமையாக கடத்துகிறது.
ரேட்டிங் 2.8/5