கருணாஸுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு அதிகம்! – ’என்ன விலை’ படக்குழு நம்பிக்கை

மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ படத்தின் எழுத்தாளர் சஞ்சீவ் பழவூர் எழுதி இயக்கும் முதல் திரைப்படம் ‘என்ன விலை’. இதில், கதையின் நாயகனாக கருணாஸ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜெ.எஸ்.கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கலமயா பிலிம்ஸ் சார்பில் ஜித்தேஷ்.வி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தை பார்த்த சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே பெரும் தொகை கொடுத்து டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது. மேலும், படம் பார்த்த பிரபலங்கள் பலர் இப்படம் மிகப்பெரிய வியாபார வெற்றி பெறுவதோடு, தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று பாராட்டியுள்ளனர்.

பிரபலங்களின் பாராட்டால் உற்சாகமடைந்துள்ள ‘என்ன விலை’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

நடிகர் கருணாஸ் தனது கதாபாத்திரம் மற்றும் படம் குறித்து கூறுகையில், “என் திரை பயணத்தில் ‘என்ன விலை’ ஒரு முக்கியமான படமாக இருக்கும். காமெடியனாக பல படங்களில் நடித்துவிட்டேன். ஒரு நடிகனாக ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதற்கான வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன். அப்போது தான் ‘போகுமிடம் வெகுதூரம் இல்லை’ படம் வந்தது. அந்த படத்தில் எனக்கு பெரிய பெயர் கிடைத்தது. அதை விட பல மடங்கு பெயர் ‘என்னை விலை’ படத்தில் கிடைக்கும். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும், என்ற நம்பிக்கை வைத்து இப்படி ஒரு வாய்ப்பு என்னை தேடி வந்ததற்கு, நடிகனாக பெருமைப்படுகிறேன்.

ஒரு எளிமையான கதைக்கருவை வைத்து, இதுவரை உலகளவில் எழுப்பப்படாத ஒரு கேள்வியை இயக்குநர் எழுப்பியுள்ளார். நிச்சயம் இது தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, இந்திய சினிமாவுக்கே புதியதாக இருக்கும். அது என்னவென்று இப்போது சொல்ல முடியாது. சிறிய விசயம் தான் என்றாலும், அதை வைத்து இயக்குநர் எழுதிய திரைக்கதை நிச்சயம் உங்களை வியக்க வைக்கம். எனவே அது என்னவென்று படத்தில் பாருங்கள்.

இயக்குநர் சஞ்சீவ் பழவூர் கேரள திரையுலக எழுத்தாளர் என்றாலும் தமிழில் தான் படம் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார். நான் கூட அவரிடம் எதற்கு இப்படி ஒரு ஆசை, என்று கேட்டேன். என்னவென்று எனக்கு தெரியாது சார், ஆனால் தமிழில் தான் நான் படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், அதற்காக தான் இந்த படத்தை தமிழில் இயக்குகிறேன், என்கிறார். அவரது மகள்களை கூட தமிழ்நாட்டில் தான் படிக்க வைக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் பெரிய பந்தம் இருக்கிறது. ஒரு இயக்குநராக நடிகர்களிடம் என்ன வேண்டுமோ அதை சரியான அளவில் வாங்கி விடுகிறார். நான், நிமிஷா சஜயன் உள்ளிட்ட அனைவரிடத்திலும் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வருவது இயக்குநரின் தனிச்சிறப்பு. இந்த படத்தில் எனக்கு நிச்சயம் நல்ல பெயரும், பாராட்டும் கிடைக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்டா குஸ்தி 2 படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறேன். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதை தொடர்ந்து செய்யாமல் ஒரு நடிகனாக சிறப்பான பங்களிப்பை ஒரு படத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. மணிவண்ணன் சார் இடத்தை நிரப்ப வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்க வேண்டும் என்பதும் என் ஆசை. அதற்கான பயணத்தை தான் இப்போது முன்னெடுத்து செல்கிறேன். என்னுடைய தேசிய விருது ஆசை இந்த படத்தில் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக பலர் சொல்கிறார்கள், பார்போம்.” என்றார்.

இயக்குநர் சஞ்சீவ் பழவூர் படம் குறித்து கூறுகையில், “ராமேஸ்வரத்தில் வாழும் ஒரு மீனவர் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் கதை. மிக சாதாரண மனிதரான அவர் குடும்பத்திற்காக கடுமையாக உழைக்க கூடியவர். அவர் வாழ்வில் நிகழும் சிறு சம்பவம் நாட்டையே உலுக்கும் வகையில் விஸ்வரூபம் எடுக்கிறது, அது என்ன என்பது தான் திரைக்கதை. இந்த கதை எழுதி முடித்த உடனே இதில் கருணாஸ் சார் தான் நடிக்க வேண்டும், என்று முடிவு செய்து விட்டேன். அவர் நான் நினைத்ததை விட பல மடங்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்.

இந்த கதைக்காக ராமேஸ்வரம் கடற்கரை பகுதி மக்களிடம் பல நாட்கள் பேசி பழகியிருக்கிறேன். மீனவர்களின் வாழ்வியல், ராமேஸ்வரம் கடற்கரை பகுதி மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை உணர்ந்து தான் இப்படத்தின் திரைக்கதை எழுதியிருக்கிறேன். ‘வாழை’ போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே ‘என்ன விலை’ படமும் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கிடைத்தது. எனவே, நிச்சயம் இந்த படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்.” என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் கூறுகையில், “முதல் முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதிகம் வசனங்கள் பேச வேண்டிய கதாபாத்திரம் என்பதால் மிக கவனமுடன் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக நானே டப்பிங்கும் பேசியிருக்கிறேன். அதற்கு உதவி செய்த படக்குழுவினருக்கு நன்றி. எனக்கும் கருணாஸ் சாருக்கும் காமினேஷன் அதிகம் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காமினேஷன் இருக்கிறது. அது மிக அழுத்தமான காட்சியாக இருக்கும். என்னுடைய முதல் படத்தின் எழுத்தாளர் சஞ்சீவ் பழவூர் சார், அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். படத்தின் கதையும் மிக முக்கியமானது, இதுவரை சொல்லப்படாத விசயம் என்பதாலும் இதில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ஜித்தேஷ்.வி பேசுகையில், “எனக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவுமில்லை. என் நண்பர் மூலம் சஞ்சீவ் கதை சொல்ல வந்தார். சரி சும்மா கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து தான் கேட்டேன். ஆனால், அந்த கதையை கேட்டதும், கதை இவ்வளவு சிறப்பாக இருக்கிறதே இதை எப்படியாவது தயாரிக்க வேண்டும், என்று எனக்கு தோன்றி விட்டது. அதன் பிறகு என் நண்பர்கள் சிலருடன் ஆலோசித்து படத்தை தொடங்கி விட்டேன். படத்திற்கு ஓடிடி வியாபாரம் நடந்து முடிந்து விட்டது. இருந்தாலும் திரையரங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்ற விருப்பம் இருக்கிறது. அதற்காக படத்தின் வெளியீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ரோமியோ பிக்சர்ஸ் நிருவனம் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் சஞ்சீவ் பழவூர், “இந்த படம் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல இந்திய சினிமாவுக்கே மிக முக்கியமான படமாக இருக்கும். கருணாஸ் சார் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்று சொன்னார். இந்த படத்தை மூன்று முக்கியமானவர்கள் பார்த்தார்கள், அதில் ஒருவர் திரையுலகில் இல்லாதவர், ஆனால் மூன்று பேருமே இந்த படத்திற்காக கருணாஸுக்கு மாநில அரசு விருது உறுதி, தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது, என்று பாராட்டினார்கள். ” என்று தெரிவித்தார்.

actor karunasdirector sanjeev pazhavoorenna vilaigitheskarunasnimisha sajayantamil movie enna vilaiஎன்ன விலைகருணாஸ்சஞ்சீவ் பழவூர்ஜித்தேஷ்தமிழ்ப் படம் என்ன விலைநிமிஷா சஜயன்
Comments (0)
Add Comment