Take a fresh look at your lifestyle.

’டோரதி’ திரைப்பட விமர்சனம்

36

பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வரும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த், அடி தடி செய்து கொண்டு தைரியமான இளைஞர்களாக வலம் வருகிறார்கள். ஒரு சம்பவத்தால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. சனந்தை பிரிந்து வேறு ஒரு மாநிலத்தில் ரிஷிகாந்த் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, சனந்தை கொலை செய்ய அவரது தந்தையிடம் இருந்தே ரிஷிகாந்துக்கு அழைப்பு வருகிறது. எதிர்பார்க்காத இந்த சூழ்நிலையை ரிஷிகாந்த் எப்படி எதிர்கொண்டார் ?, சனந்தை அவரது குடும்பத்தாரே ரிஷிகாந்த் மூலம் கொலை செய்ய முடிவு செய்தது ஏன் ? என்பதை மதுரைக்கே உரித்தான அதிரடியோடும், மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சொல்வது தான் ‘டோரதி’.

உச்ச நட்சத்திரங்களை மாஸாக காட்டுவதோடு, எளிய மக்களுக்கும் மாஸ் அந்தஸ்த்தை உருவாக்கி கொடுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்த டோரதி மூலம் மனித உணர்வுகளுக்கும், மனிதர்களால் ஒதுக்கப்படும் சக மனிதர்களின் மன குமுறல்களையும் வெளிப்படையாக பேசி தமிழ் சினிமாவில் புதிய விவாதத்தை தொடங்கியிருக்கிறார்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எளிதாக கையாளக்கூடிய வல்லமை படைத்த நடிகர்கள் என்பதை தங்களது ஒவ்வொரு அசைவுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

சனந்தின் திடீர் மாற்றமும், அந்த மாற்றத்தை வெளிக்காட்ட முடியாமல் அதே சமயம் உள்ளுக்குள் அடக்கி வைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவர் உடல்மொழி மற்றும் நடிப்பு அபாரம். பல உணர்வுகளை தனது உடல் அசைவுகள் மூலம் கடத்தியிருக்கும் சனந்த் தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிப்பார்.

நண்பனுக்காக எதையும் செய்ய துணிந்தவராக வலம் வரும் ரிஷிகாந்தின் ஆக்ரோஷமான நடிப்பு புழுதி படிந்த மண்ணின் மனிதர்களை கண் முன் நிறுத்துகிறது. நட்புக்காக தோள் கொடுப்பவராக இருப்பவர் நண்பனையே கொலை செய்ய களம் இறங்கும் போது வரும் தடுமாற்றத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பல அழுத்தமான காட்சிகளை தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் மிக சாதாரணமாக கையாண்டு கவனம் ஈர்க்கும் ரிஷிகாந்த், தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் பற்றாக்குறையை போக்குவதற்கான நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பது உறுதி.

கீர்த்தி சுரேஷ் டோரதி என்ற கதாபாத்திரத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் கதையின் திருப்புமுனையாக கவனம் ஈர்க்கும் கதாபாத்திரத்தை மிக நிறைவாக செய்திருக்கிறார்.

ராமச்சந்திரன் துரைராஜ், செளந்தராஜன், முத்துக்குமார் ஆகியோரது திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு ஆண் ஆதிக்கம் படைத்தவர்களையும், கெளரவம் என்ற பெயரில் கொடூர செயல்களை செய்பவர்களையும் மிக நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறது.

ஜீவா சுப்பிர்மணியன், கெஜராஜ், ராம்ஸ் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவர்களுக்கான வசனம் மற்றும் காட்சிகள் மூலம் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்து மக்கள் மனதில் தங்கி விடுகிறார்கள்.

80-களில் பயணிக்கும் உணர்வை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் விதத்தில் ஒளிப்பதிவாளர் எஸ்.திரு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை காட்டிய விதம் மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்திய விதம் எளிமையை கூட மிக வலிமையாக திரையில் பயணிக்க வைத்து படம் முழுவதும் தனது ஒளிப்பதிவு மூலம் பிரமிக்க வைத்திருக்கிறார் எஸ்.திரு.

இளையராஜாவின் இசை படத்தின் உயிர்நாடியாக பயணித்திருக்கிறது. “கல்யாண விருந்து” மற்றும் “முத்துமணி” பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும் போது பல்வேறு உணர்வுகளை இளையராஜாவின் பாடல்கள் பார்வையாளர்களிடம் மிக எளிதில் கடத்தும் வித்தையை அனுபவிக்க முடிகிறது. பின்னணி இசையில் மோதல், காதல், கோபம், சோகம் என ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு பீஜியம் மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் இளையராஜா டோரதி தலைப்பில் இருக்கும் சிவப்பு பொட்டாக பயணித்திருக்கிறார்.

எளிமையான கதை என்றாலும், அதை லான் லீனர் முறையில் சொல்லி காட்சிக்கு காட்சி திருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவாவின் பணி சிறப்பு.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன், பலர் பேச தயங்கும் ஒரு விசயத்தை மிக தைரியமாக பேசும் விதத்தில் கதை எழுதியிருக்கிறார்கள்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், மாஸ் கமர்ஷியல் படங்கள் மட்டும் அல்ல மக்களின் மனங்களை தொடும் படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு விசயத்தையும் மிகைப்படுத்தாமல் உண்மைக்கு நெருக்கமாக காட்சிகளாக சித்தரித்திருந்தாலும் ஆரம்பத்தில் கமர்ஷியல் படமாக கதையை தொடங்குபவர், திடீரென்று வேறு ஒரு பாதையில் கதையை பயணிக்க வைத்திருப்பதோடு, பார்வையாளர்கள் மனதில் சில யூகங்களை உருவாக்கி, அதை அவரே பொய்யாகும் இடமும், அந்த எதிர்பாராத திருப்பமும் அசத்தல்.

கார்த்திக் சுப்புராஜ் போன்ற முன்னணி இயக்குநர்கள் இத்தகைய கதையையும், சமூகத்தால் புறக்கணிப்பவர்களைப் பற்றியும் பேசுவது பாராட்டுக்குரியது என்றாலும், கிளைமாக்ஸில் வைத்த அந்த திடீர் காதல் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நட்பில் தொடங்கும் நீண்ட பயணம் ஒன்றை காதல் முடித்து வைப்பது போல், படத்தை முடித்தாலும், கிளைமாக்ஸ் வளிய திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அந்த ஒரு விசயம் மட்டுமே படத்தின் குறையாக இருந்தாலும், அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழ் சினிமாவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் படைப்பாகவும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான புதிய குரலாகவும் இப்படம் இருப்பது உறுதி.

மொத்தத்தில், ‘டோரதி’ புதிய பாதை, பாராட்டப்பட வேண்டிய படம்.

ரேட்டிங் 3.7/5