கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, அந்த கலையை குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். மற்ற இசைக்கலைஞர்கள் போல் பல்வேறு மேடைகளில் கானா பாடலை பாட வேண்டும் என்ற அவரது முயற்சி தோல்வியடைய, அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழ்நிலையால் அது நடக்காமல் போக, மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் ஹிப்ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பா போல் தோல்வியடைந்தாரா ? அல்லது இசைத்துறையில் சாதித்தாரா? என்பதை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் ஜாலியாக சொல்வதே ‘மீசைய முறுக்கு 2’.
ஹிப்ஹாப் ஆதி வழக்கம் போல் தன் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் அறிவுரை சொல்வதோடு, அவர்களை ஜாலியாக வைப் பண்ண வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். ஆட்டம், பாட்டம் என்று படம் முழுவதிலும் கலகலப்பாகவும், கொண்டாட்டம் மனநிலையோடும் வலம் வரும் ஆதி, அவ்வபோது சில தத்துவங்களை பேசி, சென்னை கானாவுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான புரட்சியையும் செய்து வட சென்னை மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சித்திருக்கிறார்.
சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு நாயகி என்று மூன்று நாயகிகளும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மூன்று காலக்கட்டங்களின் வேறுபாடுகளை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், இயக்குநர் வரிசைப்படுத்திக் கொடுத்தபடி காட்சிகளை தொகுத்திருந்தாலும், படம் தொய்வில்லாமல் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கி இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கையிலும், மறு கையில் சென்னை கானா கலைஞர்கள் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் என்ற புரட்சி பதாகையுடன் திரைக்கதை அமைத்து இளைஞர்களை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.
இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடல்கள் மற்றும் காட்சிகளை சரியான முறையில் வடிவமைத்து திரையரங்கையே பெரும் திருவிழாவாக மாற்றியிருக்கும் ஆதி, அதிகமான பாடல்களை வைத்து ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி போல் படத்தை கொடுத்திருந்தாலும், இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் எதுவும் புரியாதது பெரும் ஏமாற்றம். குறிப்பாக ஆதி பெரிதும் பில்டப் கொடுத்த கிளைமாக்ஸ் பாடல் சுத்தமாக புரியவில்லை.
திரைப்படம் என்றாலே ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆதியின் லாஜிக்கிற்கு ஏற்றவாறு படம் இருந்தாலும், முதல் பாகத்தைப் போலவே திரைக்கதை பயணிப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதே சமயம், இத்தகைய ஏமாற்றங்களை மறந்து படத்தை கொண்டா வைக்கும் பல விசயங்களை வைத்து தனது தம்பிகள் மற்றும் தங்கைகளை திருப்திப்படுத்தும் ஆதி மீண்டும் ஒரு முறை ஜெயித்து மீசைய முறுக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மீசைய முறுக்கு 2’ அதே தான்.
ரேட்டிங் 3/5