முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை பயணிக்கிறது. குழந்தை பிறந்ததால் இனி தன்னால் தொடர்ந்து குஸ்தி விளையாட்டில் பங்கேற்க முடியாது, என்று கவலைப்படும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை, மீண்டும் குஸ்தி விளையாட்டில் உன்னால் சாதிக்க முடியும், என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் மட்டும் கொடுக்காமல் அதை செயல்படுத்தும் விதமாக, மனைவிக்காக வீட்டையும், குழந்தையையும் விஷ்ணு விஷால் பார்த்துக் கொள்கிறார்.
இதனால் அனைத்துப் போட்டிகளிலும் ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து வெற்றி பெற்று, தனது முழு கவனத்தையும் குஸ்தி விளையாட்டில் செலுத்தி தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறார். இதற்கிடையே அவரது மகள் சரியாக படிக்கவில்லை என்ற தகவல் தெரிய வருகிறது. அப்பா செல்லத்தால் எங்கே தன் மகள் சரியாக வளராமல் போய் விடுவாளோ என்ற அச்சத்தில், அவரை கண்டிப்புடன் வளர்க்க தொடங்குபவர், தனது மகளையும் குஸ்தி வீராங்கனையாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
கணவன் – மனைவி இடையிலான இந்த சிறு கருத்து வேறுபாட்டால் எழும் சில பிரச்சனைகள், ஐஸ்வர்யா லட்சுமியின் கனவை சிதைப்பதோடு, கணவரிடம் இருந்து விவாகரத்து கேற்கும் சூழலுக்கு தள்ளுகிறது. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த தவறால், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் விஷ்ணு விஷால், அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, என்பதை குடும்பமாக சேர்ந்து சிரித்து மகிழும்படியும், மக்களின் மனதை தொடும்படியும் சொல்வதே ‘கட்டா குஸ்தி 2’.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் இயல்பான நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்றாலும், அதை விட கூடுதலான விசயங்களை இயல்பாக சொல்லி சினிமா பார்வையாளர்களையும், தம்பதியினரையும் கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், மாஸ் ஹீரோ என்ற பிம்பம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தாலும், மனைவியின் திறனை மதிப்பதோடு, அவரது ஒவ்வொரு வெற்றிக்கும் பக்கபலமாக இருக்கும் சிறந்த கணவராக பெண்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அதே சமயம், ஹீரோ என்ற இமேஜுக்கு ஏற்றபடி சில ஆக்ஷன் காட்சிகளின் மூலம் தானும் ஒரு ஆக்ஷன் ஹீரோ தான் என்பதை நிரூபித்திருப்பவர், “அப்படி போடு..போடு..” பாடலுக்கு டீச்சருடன் போடும் ஆட்டத்தின் மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, மனைவியின் முன்னேற்றத்திற்கு உறுதுணை, என்று ஒரு முழுமையான இல்லத்தரசன் கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டிருக்கும் விஷ்ணு விஷால், படம் பார்க்கும் பெண்களை, கட்டுனா இப்படி ஒருவரை கணவராக கட்ட வேண்டும், என்று ஏங்க வைப்பது உறுதி.
ஐஸ்வர்யா லட்சுமி கதையின் மையப்புள்ளி மட்டும் அல்ல, திரைக்கதையின் மிகப்பெரிய பலமாக ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். குஸ்தி களத்தில் எதிராளியுடன் மல்லுக்கட்டும் திறமையான வீராங்கனையாக முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பவர், கணவரிடம் காதலையும், கூடலையும் வெளிப்படுத்தும் “சம்பவக்காரி…” பாடலில் தனது நடன அசைவுகள் மூலம் தரமான சம்பவம் செய்திருக்கிறார். கணவருக்கு எதிராக போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் விளையாட்டு வீராங்கனையாக அல்லாமல் மனைவியாகவே அவரை புரட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குஸ்தி களத்தில் எண்ட்ரி கொடுப்பதும், ஒவ்வொரு சுற்றையும் அசால்டாக கடந்து செல்வதும், என்று குஸ்தி விளையாட்டு வீராங்கனையாக மட்டும் அல்ல சிறந்த நடிகையாகவும் மிரட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் பெற்றோரையே மிஞ்சும் அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அம்மவுக்கு இணையாக கோபம் கொள்வது, அப்பாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுவது, நீதிமன்றத்தில் நீதிபதியிடம் முறையிடுவது என்று நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்தும் சுட்டித்தனம் அனைத்தும் செம பியூட்டி.
முதல் பாகத்தில் தன்னையே கலாய்த்துக் கொண்டு பார்வையாளர்களுக்கு வயிறு வலி ஏற்படும் வகையில் சிரிக்க வைத்த கருணாஸ், இரண்டாம் பாகத்திலும் தன் நகைச்சுவை காட்சிகள் மூலம் சிரிப்பு சரவெடியை கொளுத்தி போட்டிருக்கிறார். ஆண் பெருமை பேசிக்கொண்டிந்த அவருக்கு ஏற்பட்ட நிலமையும், அதை அவர் வெளிக்காட்டும் விதமும், அந்த காட்சிகள் முடிந்த பிறகும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.
மற்றொரு நாயகியாக, டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோக்ஷா, ‘நாட்டாமை’ டீச்சரின் பாதிப்பாக வலம் வந்தாலும், நாகரீகமான முறையில் தனது அளவான ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு பயன்படும் கதாபாத்திரங்களாக பயணிக்காமல், இயல்பான காட்சிகளில் டைமிங் வசன உச்சரிப்பின் மூலம் காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு இருவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் படம் முழுவதையும் கலர்புல்லாகவும், கண்களுக்கு காட்சி விருந்து படைக்கும் விதத்திலும் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் புடவையில் நாயகி குஸ்தி போடும் காட்சியை மிக சிறப்பான முறையில் படமாக்கியிருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் “சம்பவக்காரி..” பாடல் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுடன் பார்க்கும் போது, முணுமுணுக்க வைப்பதோடு ஆட்டம் போடவும் வைக்கிறது. இந்த பாடலும், நடன அசைவுகளும் ரீல்ஸ் உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
எளிமையான குடும்ப பிரச்சனையை கதைக்கருவாக கொண்ட திரைக்கதையில் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் டைமிங் நகைச்சுவை வசனங்கள் மிக முக்கியம் என்பதை உணர்ந்து காட்சிகளை தொகுத்திருக்கும் பரத் விக்ரமன், இரண்டரை மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு படத்தை தொய்வின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார்.
முதல் பாகத்தின் முடிவில் ஹீரோ சொல்லும் ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரத்திற்கான ஒரு முழுமையான திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, அதை நகைச்சுவையாக மட்டும் சொல்லாமல், தம்பதியினர் இடையே ஏற்படும் மோதலுக்கான காரணங்கள் மற்றும் தீர்வையும் திரை மொழியில் சுவாரஸ்யமாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் இருந்த திருப்பம் இல்லாததும், சில விசயங்கள் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதும் சிறு குறையாக இருந்தாலும், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவருக்குமான கெமிஸ்ட்ரி அந்த குறையை மறைத்து விடுகிறது. அதே சமயம், இரண்டாம் பாதியில் எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வித்தையை மிக சரியாக செய்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் யோசிக்கவும் வைத்திருக்கிறார்.
ஒரு ஆழமான விசயத்தை, தற்போது சமூகத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான விசயத்திற்கான தீர்வை, பிரச்சாரம் பாணியிலும், அறிவுரை பாணியிலும் சொல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு படங்களின் வருகை குறைந்துவிட்டது என்ற மக்களின் மனகுமுறலை போக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ மக்களை குஷிப்படுத்தும்.
ரேட்டிங் 4.2/5